செவ்வாய், 26 அக்டோபர், 2021

வடகிழக்கு போல தமிழகத்திலும் வெளிமாநிலத்தவருக்கு Inner Line Permit முறை- வலுக்கும் கோரிக்கை

  Mathivanan Maran  -  Oneindia Tamil :  சென்னை: வெளிமாநிலத்தவர் குடியேற்றங்களைத் தடுக்கும் வகையில் வடகிழக்கு மாநிலங்களில் இருப்பதைப் போல இன்னர் லைன் பெர்மிட் -Inner Line Permit முறையை தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் தொழில் - வணிக நிறுவனங்களைத் தொடங்கிட தமிழ்நாடு அரசு அனுமதிக்க கூடாது;
வெளிமாநிலத்தவர் சொத்துகள் வாங்கத் தடை விதிக்க வேண்டும்.
வெளி மாநிலத்தவருக்கு Inner Line Permit வழங்கும் பட்டியலில் தமிழ்நாடு சேர்க்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினர் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதேகோரிக்கை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் எம்.எல்.ஏ.வும் வலியுறுத்தி உள்ளார்.
வேல்முருகன் எம்.எல்.ஏ. இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர்களின் குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் தமிழர்கள் மீது வடமாநிலத்தவர்கள் தாக்குதல் நடத்துவது தொடர்கதையாக உள்ளது.


எனவே, தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் வெளிமாநிலத்தவர்களின் குடியேற்றத்தை தடுத்து நிறுத்தும் வகையில், உள் அனுமதி சீட்டு நடைமுறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 இன்னர் லைன் பெர்மிட் என்பது என்ன? இந்திய குடிமக்கள் அனைவரும் இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் சுதந்திரமாக சென்று வர முடியும். இருப்பினும் சில பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல வழங்கப்படுவதுதான் Inner Line Permit. பாதுகாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே செல்லும்படியாகும் வகையில் வழங்கப்படுகிற பயண ஆவணம் இது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கி.பி.1873-ல் இந்த நடைமுறை உருவாக்கப்பட்டது.

1873-l வங்காள-கிழக்கு எல்லை ஒழுங்கு முறை சட்டம் என்ற பெயரில் இன்னர் லைன் பெர்மிட் முறை அறிமுகமானது. நாடு விடுதலைக்குப் பின்னரும் சில மாற்றங்களுடன் மத்திய அரசால் இது ஏற்றுக் கொள்ளப்பட்டது. நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், மிசோரம், நாகாலாந்து, லட்சத்தீவுகளில் நீண்டகாலமாக Inner Line Permit முறை அமலில் உள்ளது.

2019-ம் ஆண்டு மணிப்பூர் மாநிலமும் Inner Line Permit தேவைப்படும் மாநிலங்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டது. அதே நேரத்தில் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களிலும் Inner Line Permit முறையை அமல்படுத்த வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாகவும் இருந்து வருகிறது. கொந்தளித்த அஸ்ஸாம் கொந்தளித்த அஸ்ஸாம் மத்திய அரசு 2 ஆண்டுகளுக்கு முன்னர் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை (சி.ஏ.ஏ) கொண்டு வந்தது. சி.ஏ.ஏ.வுக்கு எதிராக அஸ்ஸாமில்தான் உக்கிரமான போராட்டம் வெடித்தது.

இதற்கு காரணமே 1985-ம் ஆண்டு மத்திய அரசு உருவாக்கிய அஸ்ஸாம் ஒப்பந்தத்தை குடியுரிமை திருத்த சட்டம் மீறிவிட்டது என்பதுதான். அதாவது அஸ்ஸாம் மாநிலத்துக்குள் 1971-ம் ஆண்டு மார்ச் 25-ந் தேதிவரை சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கலாம் என்றது 1985-ம் ஆண்டு அஸ்ஸாம் ஒப்பந்தம். ஆனால் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்தமானது 2014-ம் ஆண்டு டிசம்பர் 31 வரை சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கலாம் என்றது.

இது தங்களுக்கு மத்திய அரசு அளித்த உறுதி மொழியை மீறுவதாகவும் எனக் கூறியே அஸ்ஸாமில் போராட்டம் வெடித்தது.

அதேபோல் குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தின் போதும் இன்னர் லைன் பெர்மிட் முறையும் விவாதிக்கப்பட்டது. அதாவது இன்னர் லைன் பெர்மிட் நடைமுறையில் உள்ள மாநிலங்களுக்கு குடியுரிமை சட்ட திருத்த மசோதா பொருந்தாது; குடியுரிமை சட்ட திருத்த மசோதா இந்த மாநிலங்களுக்கு விலக்கு அளித்தது. அப்போதும் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் இன்னர் லைன் பெர்மிட் முறை அமல்படுத்தப்படும் என மத்திய அரசு உறுதி அளித்தது.

 தமிழகத்திலும் இன்னர் லைன் பெர்மிட்? இந்த இன்னர் லைன் பெர்மிட் முறையைத்தான் தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. தமிழக அரசு முதலில் இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்த வேண்டும். தமிழர் அல்லாதவர்- வெளி மாநிலத்தவர் என்பதற்கான வரையறை என்ன? பிற மொழி பேசுகிறவர்கள் அனைவரும் வெளிமாநிலத்தவரா? அல்லது தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு விலக்கு அளித்துவிட்டு வட இந்தியர்கள் மட்டும் வெளிமாநிலத்தவர் என வரையறைக்கப்படுவார்களா?
வட இந்தியர்களுக்கு மட்டும் இன்னர் லைன் பெர்மிட் முறை சாத்தியமானதுதானா? எத்தனை ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் குடியேறிய பிற மாநிலத்தவரை வெளி மாநிலத்தவர் என வரையறுப்பது? இந்த வரையறை செல்லக் கூடியதாக இருக்குமா? என பல கேள்விகள் உள்ளன.

 ஆகையால் இது தொடர்பாக முழுமையாக விவாதங்களும் ஆலோசனைகளும் நடத்தி அதன்பின்னர் தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்ற வேண்டும். இந்த மசோதாவுக்கு மத்திய அரசின் ஒப்புதலையும் பெற வேண்டும். மணிப்பூர் சர்ச்சை மணிப்பூர் சர்ச்சை சில ஆண்டுகளுக்கு முன்னர் மணிப்பூர் மாநில சட்டசபையில் இதேபோல் ஒரு மசோதா நிறைவேற்றபப்ட்டது.
அப்போது மணிப்பூரி அல்லாத பிற மாநிலத்தவர் மணிப்பூர் மாநிலத்துக்குள் நுழைவது தொடர்பாக கடுமையான விதிகள் தேவை அம்மசோதா வலியுறுத்தியது. ஆனால் மணிப்பூரிகள் யார் என்பதில் அப்போது சிக்கல்கள் எழுந்தன. மணிப்பூர் மாநிலத்தில் ஏற்கனவே நாகா இன மக்கள் குறிப்பிட்ட பகுதிகளில் வாழ்கின்றனர். வடகிழக்கு மாநிலத்தில் நாகா இன மக்கள் வாழும் பகுதிகளை அனைத்தையும் ஒருங்கிணைத்து நாகாலிம் அல்லது அகன்ற நாகாலாந்து என்கிற தனி மாநிலம் மற்றும் தனி நாடு கேட்கும் அமைப்புகள் இயங்கி வருகின்றன.

இதனால் மணிப்பூரில் இந்த மசோதா குழப்பங்களை ஏற்படுத்தி இருந்தது. அதனால் பொதுவாக மணிப்பூர் மாநிலத்துக்குள் நுழைய இன்னர் லைன் பெர்மிட் தேவை என்கிற நடைமுறையை மத்திய அரசு 2019-ல் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக