திங்கள், 18 அக்டோபர், 2021

பாஜக பிரமுகர் கல்யாணராமன் இரவில் கைது . முதல்வர் குறித்து அவதூறு பதிவு காரணம்

Vishnupriya R -  Oneindia Tamil :   சென்னை: முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கலைஞரை  கடுமையாக விமர்சித்ததாக பாஜக பிரமுகர் கல்யாணராமன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.
பாஜக பிரமுகரான கல்யாணராமன் சமூகவலைதள பக்கமான ட்விட்டரில் தொடர்ந்து ஆபாசமான சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவு செய்து வந்தார்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர்  ஆகியோரை சர்ச்சைக்குரிய வகையில் டவிட்டரில் பதிவு செய்தார்.
அது போல் திரைப்பட நடிகையும் மருத்துவருமான ஷர்மிளாவை மிகவும் கடுமையாக விமர்சித்தார்.
அந்த வகையில் திமுகவின் தருமபுரி எம்பி செந்தில் குமாரின் உதவியாளர் சந்தேஷ், பாஜக கல்யாணராமனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சென்னை சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் புகார் அளிக்கப்பட்ட 10 மணி நேரத்தில் கல்யாணராமனை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நள்ளிரவில் கைது செய்தனர்.
சென்னை வளசரவாக்கம் தேவிகுப்பம் அன்பு நகர் பகுதியில் உள்ள கல்யாணராமன் இல்லத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் கோவையில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசியதாக புகாரின் பேரில் கல்யாணராமன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கைது குறித்து எம்பி செந்தில்குமார், பாஜக கல்யாணராமன் கைது குறித்து பதிவிட்டுள்ளார்.

 வழக்கமாக சர்ச்சைக்குரிய வகையில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசி வந்த பாஜகவை சேர்ந்த கல்யாண ராமன் கைது செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவரது ட்விட்டர் பக்கம் முடக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

 இதே போல் முதல்வர் ஸ்டாலின் குறித்தும் தமிழக அரசு குறித்தும் அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகன் கடந்த வாரம் திங்கள்கிழமை அன்று கைது செய்யப்பட்டார். இவர் குமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இவர் மீது தருமபுரி எம்பி செந்தில் குமார் அளித்த புகாரின் பேரில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக