திங்கள், 18 அக்டோபர், 2021

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு விடுத்த எச்சரிக்கை - பின்னணி என்ன?

வங்கதேசம்
ஷகீல் அன்வர்  -      பிபிசி வங்கதேச சேவை  :  வங்க தேசத்தில் இந்து கோயில்கள் தாக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை மற்றும் இந்துக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதை தமது அரசு உறுதிப்படுத்தும் என்று பேசியிருக்கிறார்.
வங்கதேசத்தின் டாக்காவில் இருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ள கோயிலில் துர்கா பூஜையின்போது ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து அங்குள்ள இந்து கோயில்கள் தாக்கப்பட்டிருக்கின்றன. ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் இந்துக்களின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து பேசி வருகிறது, ஆனால் கடந்த புதன்கிழமை ஷேக் ஹசீனா இந்துக்களின் பாதுகாப்பு தொடர்பாக வெளிப்படுத்திய கருத்துகள் அசாதாரணமாகப் பார்க்கப்படுகின்றன.
வங்கதேசத்தில் இந்துக்களின் பாதுகாப்பு தொடர்பாக இந்தியாவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஷேக் ஹசீனா கூறினார். தமது தாய்நாட்டில் நடந்த சம்பவத்துக்கு எதிர்வினை எதுவும் இந்தியாவில் நடந்தால் அதன் தாக்கம் வங்கதேசத்திலும் கடுமையாக ஏற்படலாம் என்பதை இந்தியா உணர்ந்து செயல்பட வேண்டும் என்று ஷேக் ஹசீனா தாகேஷ்வரி தேசிய ஆலயத்தில் பக்தர்களிடையே பேசும்போது குறிப்பிட்டார்.

இது குறித்து வங்கதேச முன்னாள் வெளியுறவு செயலாளர் தெளஹித் ஹுசைன் பிபிசி வங்கதேச சேவைக்கு அளித்த பேட்டியில், வங்கதேசத்தில் நடந்த வன்முறைால் இந்தியாவில் என்ன நடக்கலாம் என்பதுபற்றி வங்கதேச தலைமை வெளிப்படையாக தமது கவலையை வெளிப்படுத்தியிருக்கிறது என்று கூறினார்.

"பொதுவாக இந்தியாவிற்கு இது போன்ற தகவலை வெளிப்படையாக வங்கதேசம் வழங்காது. முன்பொரு சமயம், இந்தியாவில் ஆளும் பாஜகவில் மிகவும் சக்திவாய்ந்த நபர் வங்கதேசத்தை பற்றி தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சித்தார். அப்போது கூட நாங்கள் வெளிப்படையாக பேசவில்லை," என்றார்.

2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, அமித் ஷா வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை விமர்சிக்க கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.

அவரது பேச்சுக்கு வங்கதேசத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இருந்தபோதிலும், அரசு தரப்பில் இருந்து வெளிப்படையாக எதுவும் கூறப்படவில்லை.

இத்தகைய சூழலில்தான் ஷேக் ஹசீனா வெளிப்படுத்திய உணர்வு, அசாதாரணமானதாக பார்க்கப்படுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு என்ன சொல்ல விரும்புகிறார்? என தெளஹித் ஹுசைன் விளக்கினார்.

"பிரதமர் ஹசீனா விடுக்கும் செய்தி தெளிவாக உள்ளது. இந்தியாவில் பல வேளைகளில் நடக்கும் வகுப்புவாத சம்பவங்களை கவனத்தில் கொண்டே வங்கதேசம் பதிலளித்துள்ளது. இந்தியா அதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஷேக் ஹசீனா தெளிவாக கூறியுள்ளார். அவரது கருத்து முற்றிலும் உண்மை, ஏனென்றால் 1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு என்ன நடந்தது என்பதை நாங்கள் பார்த்தோம்.
அமைதியற்ற நிலையில் வங்கதேச ஆளும் கட்சி

2014இல் இந்தியாவில் பாஜக அரசு அமைந்ததில் இருந்தே இந்தியாவில் மதசார்பின்மையின் எதிர்காலம் குறித்து தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாடு பற்றிய செய்திகளும் வந்து கொண்டே இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மக்கள் மத காரணங்களுக்காக கொல்லப்பட்டதற்கு பல உதாரணங்கள் உள்ளன.

தீவிர இந்துத்துவா ஆதரவாளர்களை ஊக்குவிப்பதாகவும் அரசு மீது குற்றம்சாட்டப்பட்டது.முஸ்லிம் பெரும்பான்மை நாடான வங்கதேசத்தில் உள்ள அரசியல் ஆய்வாளர்கள், ஆளும் அவாமி லீக் அரசாங்கம் அண்டை நாடான இந்தியாவில் உள்ள முஸ்லிம் எதிர்ப்பு அரசியல் மற்றும் அது வங்கதேசத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆளும் அரசுக்கு சங்கடம் ஏற்படுவதை ஒப்புக்கொள்கிறார்கள்.

வங்கதேசத்தில் ஆளும் அவாமி லீக் தன்னை ஒரு மதசார்பற்ற கட்சியாக பார்க்கிறது. அதன் முயற்சிகள் மத தீவிரவாதம் மற்றும் மதம் சார்ந்த அரசியலின் வேர்களை வலுப்படுத்துவது அல்ல.

கடந்த ஆண்டு, குறைந்தபட்சம் இரண்டு வங்கதேச அமைச்சர்களின் இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டன. இந்தியாவில் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு இது நடந்தது.

இதை சுட்டிக்காட்டும் தெளஹித், "அவாமி லீக் அரசாங்கம் சந்தேகத்திற்கு இடமின்றி இந்தியாவில் வகுப்புவாத அரசியல் பரவுவதாகவும் அதை ஒரு சங்கடமாகவும் உணர்கிறது. மிகப்பெரிய அண்டை நாட்டில் மத தீவிரவாதம் அதிகரிக்கும் போது, ​​அது அருகே உள்ள வங்கதேசத்தையும் பாதிக்கும் என்ற அச்சம் இயல்பானதுதானே," என்றார்.

இந்தியாவின் மதசார்பற்ற கட்டமைப்பு பலவீனம் அடைந்துள்ளது எனக்கூறும் தெளஹித், ராஜீய பணி நிமித்தமாக இந்தியாவில் ஒன்பது ஆண்டுகளாக வாழ்ந்தவர்.

அந்த அனுபவத்தின் அடிப்படையில் சில விஷயங்களை அவர் முன்வைத்தார்.

"வங்கதேசத்தில் உள்ள நிலைமை சிறந்தது என்று நான் கூறவில்லை. இங்கு வகுப்புவாத அரசியலும் உள்ளது. மத கடும்போக்காளர்களும் இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவின் நிலைமை மோசமாக உள்ளது என நான் நம்புகிறேன். இந்தியாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு, சட்டத்தின் மூலம் நாட்டில் வகுப்புவாத பிளவை ஏற்படுத்துவதாக கருதுகிறேன். அதில் அங்கு ஆளும் அரசு வெற்றியும் பெற்றுள்ளதாக கருதுகிறேன். நீண்ட காலத்திற்குப் பிறகு, இந்தியாவில் ஒரு கட்சி வெளிப்படையாக வகுப்புவாத அரசியலை ஊக்குவிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், இந்தியாவில் சமூகத்தில் வகுப்புவாதம் ஊடுருவியது என்று சொல்வது கூட தவறாக இருக்காது," என்றார் தெளஹித்.
ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தெற்காசிய அரசியலைக் கற்பிக்கும் பேராசிரியர் சஞ்சய் பரத்வாஜ், ஷேக் ஹசீனாவின் கருத்துடன் உடன்படுவதாக தெரிவித்தார்.

இந்தியாவின் அரசியல் நிலைமைகள், வங்கதேசத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதை தாம் மறுக்கவில்லை என்கிறார் தெளஹித் ஹுசைன். இருப்பினும், தெற்காசியாவில் மதம், சாதி, பிராந்தியம் மற்றும் இனம் சார்ந்த அரசியல் புதியதல்ல என்றும் அவர் கூறுகிறார்.

ஆனால் இந்தியாவின் வகுப்புவாத அரசியல் வங்கதேசத்தின் சிறுபான்மையினர் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை வங்கதேசத்தில் இருப்பவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள் என்றார் பரத்வாஜ்.

"வங்கதேச அரசியலமைப்பில் இஸ்லாம் அரசு மதம் போன்றவை பிரதானம். ஆனால் ஷேக் ஹசீனா சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக பாடுபட்டுள்ளார். இந்தியாவில் பெரும்பான்மைவாத அரசியல் அதன் சிறுபான்மையினர், அதாவது முஸ்லிம்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்தியாவின் ஜனநாயகம் இன்னும் வலுவாக உள்ளது, இந்தியா இன்னும் இந்து நாடாக மாறவில்லை. நரேந்திர மோதியின் ஏழு வருட ஆட்சியில் முஸ்லிம்களுக்கு பெரிய அச்சுறுத்தல் இருப்பதாக நான் நினைக்கவில்லை," என்றார் பரத்வாஜ்.

ஷேக் ஹசீனாவின் செய்தியை இந்திய அரசு நேர்மறையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சஞ்சய் பரத்வாஜ் கூறுகிறார்.

வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் பாதுகாப்பை இந்தியா விரும்பினால், இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்.

பாஜகவின் உயர் தலைமை இதை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.ஷேக் ஹசீனாவின் அறிக்கைக்கு இந்தியாவில் ஆளும் மத்திய பாஜக அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்காது என்று வங்கதேச முன்னாள் வெளியுறவு செயலாளர் தெளஹித் ஹுசைன் கருதுகிறார்.

"பாஜகவின் அரசியல் திட்டங்கள் தெளிவாக உள்ளன. வகுப்புவாத அரசியல் அதிகாரத்துக்காக என்று அவர்களுக்குத் தெரியும். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, இந்தியாவில் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதிப்படுத்துவோம் என்று பாஜக வாக்குறுதி அளித்தது. குஜராத் மாடல் பற்றி பேசப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு எதுவும் நடக்கவில்லை."

"பொருளாதார அரங்கில் பாஜகவால் இனியும் எதுவும் செய்ய முடியாது என்று நான் நினைக்கிறேன். மதம் மட்டுமே பாஜகவினருக்கு ஆதரவாக உள்ளது. இத்தகைய சூழலில் ஷேக் ஹசீனா இந்தியாவை நோக்கி தமது விரலை நீட்டுவதன் மூலம் தாய்நாட்டில் வேண்டுமானால் அவருக்கு அரசியல் ஆதாயம் கிடைக்கலாம்," என்கிறார் தெளஹித் ஹுசைன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக