சனி, 2 அக்டோபர், 2021

பிளாஸ்டிக்கை ஒழிப்போம்-துணிப்பைக்கு மாறுவோம்!

பிளாஸ்டிக்கை ஒழிப்போம்-துணிப்பைக்கு மாறுவோம்!

மின்னம்பலம் : பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அனைவரும் முயற்சி செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து, இன்று(அக்டோபர் 2)சென்னை கோயம்பேடு பழ அங்காடியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். அதில் கலந்து கொண்ட வியாபாரிகளுக்கு துணி பை மற்றும் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.


இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி,”சுற்றுச் சூழலை பாதுகாக்கும் முயற்சியின் முதற்கட்டமாக, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி இணைந்து கோயம்பேடு அங்காடியில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு தொடங்கியுள்ளோம்.
ஆகஸ்ட் மாதம் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில், இரண்டாயிரத்து 172 கிலோ கிராம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 5.45 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

அதுபோன்று செப்டம்பர் மாதம் 488 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்களுக்குத் தண்டனை அளிப்பது என்பது இதற்குத் தீர்வு அல்ல. விழிப்புணர்வு மூலம் அதன் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதற்கு வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வரும் நாள்களில் கோயம்பேடு அங்காடியை மேலும் சிறப்பாக உயர்த்த சிஎம்டிஏ அலுவலர்களுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்வோம்” என்று கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு,” நாம் பயன்படுத்திவிட்டு போடும் பிளாஸ்டிக் பொருட்களை கால்நடைகள்,விலங்குகள் உட்கொள்கின்றன. சுற்றுச்சூழல், வனவிலங்குகளை பாதுகாப்பது நம் அனைவரின் கடமை. அதனால் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். ஒரு 15 வருஷத்துக்கு முன்பு, நாம் கடைக்கு செல்லும்போது கையில் மஞ்சப்பைதான் கொண்டு செல்வோம். பிளாஸ்டிக் அடுத்துவரும் சந்ததிக்கும் இயற்கைக்கும் மிகவும் ஆபத்தானது. அதனால், இனி பிளாஸ்டிக்கை பயன்படுத்தமாட்டோம் என்று உறுதிமொழி எடுத்து அதன்படி நடப்போம்” என்று கூறினார்.

-வினிதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக