"எனது அண்ணன் அழகிரி லயோலா கல்லூரியில் படித்தவர்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
நக்கீரன் செய்திப்பிரிவு : இன்று (15/10/2021) மாலை சென்னையில் உள்ள லயோலா மேலாண்மை கல்வி நிறுவனத்தின் அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். லீபா என்னும் பெயரிடப்பட்ட இந்தக் கட்டடமானது புதிய வடிமைப்பு சிந்தனை மற்றும் செயற்கை நுண்ணறிவால் கட்டப்படுள்ளது. இந்தக் கட்டட திறப்பு விழாவின்போது கனிமொழி எம்.பி., தயாநிதி மாறன் எம்.பி., அமைச்சர் பொன்முடி, எழிலன் எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ., சேவியர் பிரிட்டோ (கெர்ரி இண்டேவ் லாஜிஸ்டிக்ஸ் தலைவர்), அரசு அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "லயோலா கல்லூரில் எனது அண்ணன் அழகிரி படித்தார். அதேபோல், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், கலாநிதி மாறன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் படித்தனர். நான் மட்டும் தான் இங்கு படிக்கவில்லை; எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. லயோலா கல்லூரியில் பயின்ற மாணவர்கள் உலக அளவில் சிறந்து விளங்குகின்றனர். அனைவரும் உயர்கல்வி கற்பதில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும். அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ வேண்டும். தமிழ்நாட்டில் அதிக கல்லூரிகள் உருவாக்கப்பட்டது தி.மு.க. ஆட்சியில்தான். ஒருவரின் கல்வி அவரை சுற்றியுள்ளவர்களுக்கும் பயன் தரக்கூடியதாக இருக்க வேண்டும். காமராஜர் காலத்தில் பள்ளிகள் அதிகம் உருவாகின. தி.மு.க. உருவானதே கல்லூரிகளில் தான்" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக