புதன், 6 அக்டோபர், 2021

போதை மருந்துக் கடத்தல்... புலி சந்தேக நபர் கைது! .

மின்னம்பலம் : பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் உறுப்பினரை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது.
இதுகுறித்து என்.ஐ.ஏ. இன்று (அக்டோபர் 6) வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ செய்திக் குறிப்பில்,
“இலங்கையைச் சேர்ந்தவரான சற்குனம் என்ற சபேசன் (வயது 47) புலிகளின் உளவுப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் அக்டோபர் 5 ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.
​சென்னை, வளசரவாக்கத்தில் வசிக்கும் சபேசன், பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுத மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகவும், அதன் மூலம் கிடைத்த பணத்தைப் புலிகளின் மறு கட்டுமானத்துக்கு பயன்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.


போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் புகாரின் அடிப்படையில், ஆறு ஏ.கே 47 துப்பாக்கிகள் மற்றும் ஆயிரம் சுற்று 9 மிமீ வெடிமருந்துகள் 300 உடன் கைப்பற்றப்பட்டு ஆறு இலங்கை பிரஜைகள் மீது, தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) கடந்த மே மாதத்தில் வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத் தக்கது. இதன் மீது நடந்த தொடர் விசாரணையில் சபேசன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இந்தியாவில் புலிகளின் அனுதாபிகளின் சதி கூட்டங்களை ஏற்பாடு செய்தார். மேலும், புலிகளின் புத்துயிர் பெறுவதற்காக இலங்கையில் முன்னாள் புலிகளுக்கு போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் வருமானத்தை மாற்றியமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்” என்று என்.ஐ.ஏ. செய்தி தெரிவிக்கிறது.

சுமார் முப்பதுஆண்டுகளாக இலங்கையில் தனி ஈழத்துக்காக போராடிய விடுதலைப் புலிகள் இயக்கம் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் வீழ்த்தப்பட்டது. அதன் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இந்த கைது நடந்திருக்கிறது.

-வேந்தன்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக