புதன், 6 அக்டோபர், 2021

அதிமுக 50-வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டம்- ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு

மாலைமலர் : கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும்‌ வழிகாட்டு நெறிமுறைகளைப்‌ பின்பற்றி கழகத்தின்‌ தொடக்க நாளை சிறப்பாகக்‌ கொண்டாடுமாறு ஓபிஎஸ், ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 தமிழகத்தில்‌ நடைபெற்று வந்த தீய சக்தியின்‌ ஆட்சியை அகற்றி, தர்மத்தையும்‌, நீதியையும்‌ நிலைநாட்ட வேண்டும்‌ என்ற நல்ல எண்ணத்தில்‌, உழைப்பால்‌ உயர்ந்தவரும்‌, பேரறிஞர்‌ அண்ணாவின்‌ இதயக்‌ கனியும்‌, தலைமுறைகள்‌ பல கடந்தும்‌ மக்கள்‌ நாயகனாக தொடர்ந்து எம்‌.ஜி.ஆர்‌. அவர்களால்‌ தமிழக மக்களுக்காக உருவாக்கப்பட்ட  “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌’” 49 ஆண்டுகளைக்‌ கடந்து, 17.10.2021 – ஞாயிற்றுக் கிழமை அன்று “பொன்‌ விழா” காண இருக்கும்‌ இத்திருநாளை, கழகத்தின்‌ ஒவ்வொரு தொண்டரும்‌ மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டிய நேரமிது.
வரலாற்றுச்‌ சிறப்பு மிக்க கழகத்தின்‌ “பொன்‌ விழா” ஆண்டைக்‌ கொண்டாடும்‌ விதமாக, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும்‌ மாவட்டக்‌ கழகங்களின்‌ சார்பில்‌ ஆங்காங்கே அமைந்திருக்கும்‌ புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌., புரட்சித்‌ தலைவி அம்மா ஆகியோரது திருவுருவச்‌ சிலைகளுக்கும்‌, அவர்களது படங்களுக்கும்‌ மாலை அணிவித்து சிறப்பிக்குமாறு கேட்டுக்‌ கொள்கிறோம்‌.

அதே போல்‌, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, கிளை, வார்டு, வட்ட அளவிலான அனைத்து இடங்களிலும்‌, எங்கு நோக்கினும்‌ கழகக்‌ கொடிகள்‌ கம்பீரமாக பட்டொளி வீசிப்‌ பறக்கும்‌ வகையில்‌, கழகக்‌ கொடிக்‌ கம்பங்கள்‌ இல்லாத இடங்களில்‌ உடனடியாக கொடிக்‌ கம்பங்களை அமைத்தும்‌; ஏற்கெனவே அமைக்கப்பட்டிருக்கும்‌ கழகக்‌ கொடிக்‌ கம்பங்களுக்கு புது வண்ணங்கள்‌ பூசியும்‌, நம்‌ வெற்றியைத்‌ தாங்கி நிற்கும்‌ கழகக்‌ கொடியினை ஏற்றி வைத்து விழாக்‌கோலம்‌ பூண்டு, இனிப்புகள்‌ வழங்கி சிறப்பிக்க வேண்டுமாய்‌ அன்போடு கேட்டுக்‌ கொள்கிறோம்‌.

மேலும்‌, கழக அமைப்புகள்‌ செயல்பட்டுக்‌ கொண்டிருக்கும்‌ புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும்‌ அந்தமான்‌ உள்ளிட்ட பிற மாநிலங்களிலும்‌, கழகத்தின்‌ தொடக்க நாளை சிறப்பாகக்‌ கொண்டாடுமாறு கேட்டுக்‌ கொள்கிறோம்‌.

கழகத்தின்‌ “பொன்‌ விழா” தொடக்க நாள்‌ நிகழ்ச்சிகளில்‌, ஆங்காங்கே பங்கேற்கும்‌ கழக நிர்வாகிகள்‌ மற்றும்‌ தொண்டர்கள்‌ அனைவரும்‌, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும்‌ வழிகாட்டு நெறிமுறைகளைப்‌ பின்பற்றியும்‌, சமூக இடைவெளியைக்‌ கடைப்பிடித்தும்‌, முக‌ கவசம்‌ அணிந்தும்‌, இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும்‌ பங்குபெறுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்‌

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக