திங்கள், 11 அக்டோபர், 2021

காஞ்சிபுரத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட டாஸ்மாக் ஊழியர்..உடலில் துப்பாக்கிக் குண்டு கண்டெடுப்பு

 Vigneshkumar  -  Oneindia Tamil News  :  சென்னை: கடந்த 4ஆம் தேதி காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் ஊழியர்களை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியிருந்தனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த விற்பனையாளர் உடலில் துப்பாக்கிக் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியைச் சேர்ந்த துளசிதாஸ் (வயது 43) மற்றும் ராம் (42) ஆகியோர் ஒரகடம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் வேலை செய்து வந்தனர்.
கடந்த 4ஆம் தேதி இவர்கள் வழக்கம்போல் விற்பனை நேரம் முடிந்தவுடன் கடையைப் பூட்டிவிட்டுக் கிளம்பியுள்ளனர். தாக்குதல் தாக்குதல் கடையின் பின்புறம் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை எடுக்க இருவரும் சென்றுள்ளனர்.
அப்போது மறைந்திருந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துளசிதாசை சுற்றி வளைத்துத் தாக்கத் தொடங்கினர். மறைத்து வைத்திருந்த கத்தியால் துளசிதாஸை குத்தினர்.


இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ராம், அவர்களைத் தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் ராமையும் தாக்கியுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்த விற்பனை பணத்தையும் பிடுங்கிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

மர்ம நபர்கள் நடத்திய இந்த கொடூர தாக்குதலில், கத்தியால் குத்தப்பட்ட டாஸ்மாக் விற்பனையாளர் துளசிதாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒரகடம் போலீசார் படுகாயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ராமை மீட்டு, சிகிச்சைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், துளசிதாசின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஒரகடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தப்பி ஓடிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை அடைத்து, ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்திலும் டாஸ்மாக் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இந்தச் சூழலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டாஸ்மாக் ஊழியர் ராமின் அவரது உடலில் துப்பாக்கிக் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, அந்த துப்பாக்கிக் குண்டு எடுக்கப்பட்டது. தாக்குதலுக்கு உள்ளான நபர் உடலில் துப்பாக்கிக் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்டோரைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக