வெள்ளி, 3 செப்டம்பர், 2021

இலங்கையைச் சேர்ந்த ISIS இஸ்லாமிய பயங்கரவாதி நியூசிலாந்தில் தாக்குதல்!

 Rishvin Ismath  :  இலங்கையைச் சேர்ந்த ISIS இஸ்லாமிய பயங்கரவாதி நியூசிலாந்தில் தாக்குதல்!
நியூசிலாந்தின் ஒக்லன்ட் நகரில் உள்ள LynnMall நவீன சந்தைத் தொகுதியில் அமைந்துள்ள Countdown வர்த்தக நிலையத்தில் தாக்குதல் நடாத்தி 6 பேரை காயப்படுத்திய (பதிவு எழுதப்படும் வரையான தகவல்) இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமியப் பயங்கரவாதி நியூசிலாந்துப் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.
குறித்த ISIS பயங்கரவாதி இலங்கையை சேர்ந்தவன் என்கின்ற விடயம் பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம், எனினும் இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம் உள்ளது என்கின்ற உண்மையை முடிந்த வரை தகவல்களுடன் எழுத்து மூலம் வெளிக்கொணரும் என் போன்றவர்களுக்கு இதில் ஆச்சரியப்பட பெரிதாக எதுவுமில்லை,
மாறாக இவ்வளவு எச்சரித்தும், இவ்வளவு நடந்தும் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிராக போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று கவலைப்படவே முடியும்.  

மெளலவி சஹ்ரான் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களின் பின்னர் கருத்துத் தெரிவித்திருந்த பாதுகாப்பு வல்லுனர்கள், அமைப்பு ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களை விடவும் தனிநபர்களால் நடாத்தப்படக் கூடிய Lone Wolf Attack பாணியிலான தாக்குதல்கள் எதிர்காலத்தில் நடக்கக் கூடும் என்று குறிப்பிட்டு இருந்தார்கள். இன்றைய தாக்குதல் தனிநபரால் மேற்கொள்ளப்பட்ட Lone Wolf Attack ஆகவே அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 இஸ்லாமியப் பயங்கரவாதம் என்பது  சஹ்ரான் என்கின்ற தனி மனிதனுடனோ அல்லது அவனது அடையாளம் காணப்பட்ட குழுவுடனோ முடிவடைந்துவிடக் கூடிய சின்னஞ் சிறிய அத்தியாயம் என்று யாராவது சுய கற்பனை செய்துகொண்டு இருந்திருந்தால் அது மிகப்பெரிய முட்டாள்தனம் ஆகும். இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமி உட்பட பல்வேறு இஸ்லாமிய இயக்கங்களாலும், பல்வேறு இஸ்லாமியத் தரப்புக்களாலும், இஸ்லாமியவாத கல்வியியலாளர்களாலும் பல தசாப்த காலமாக திட்டமிட்டு போசிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட ஒன்று ஆகும். அதன் அறுவடைகளின் மிகச்சிறிய பகுதிகளை மட்டுமே அவ்வப்பொழுது காணக் கூடியதாக இருகின்றது. இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கையின் பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் இலங்கை அரசாங்கம் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானவையாக இல்லை என்பதை துணிந்து கூறலாம். இஸ்லாமிய பயங்கரவாதத்தின் ஆணிவேர் இன்னும் உறுதியாகவே இருக்கின்றது, அதற்கான சான்றுகள் பல உள்ளன.
..
வெளிநாடுகளில் தாக்குதல் நடத்துவதற்காக இஸ்லாமிய பயங்கரவாதிகள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையாக இலங்கை இருக்கின்றது என்பது மிகவும் ஆபத்தான சமிக்ஞை ஆகும். இலங்கையில் இருந்து இஸ்லாமியப் பயங்கரவாதிகள் வெளிநாடுகளுக்கு சென்ற முதல் சந்தர்ப்பம் இதுவல்ல. ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமி இலங்கையில் இருந்து முஸ்லிம் இளைஞர்களை பாக்கிஸ்தான், காஷ்மீர், ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களுக்கு ஜிஹாத் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அனுப்பியிருந்தமை இரகசியம் அல்ல. இது குறித்த தகவல்களை உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடபாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் கடந்த வருடம் தெரிவித்து இருந்தேன். ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவரிடம் குறுக்கு விசாரணை மேற்கொண்டு விட்டு வெளியில் வந்த பொழுது அவரது ஆதரவாளர்களால் அச்சுறுத்தப்பட்ட விடயமும் இடம்பெற்று இருந்தது. இலங்கையில் இருந்து ISIS இல் இணைவதற்காக பலர் துருக்கி ஊடாக சிரியா சென்றதும், அங்கே யுத்தத்தில் கொல்லப்பட்டதும் உடகங்கள் வாயிலாகவும், பாராளுமன்றத்திலும் வெளிக்கொணரப்பட்ட உண்மைகள் ஆகும்.
..
மெளலவி சஹ்ரானின் பயங்கரவாத செயற்பாடுகள் பற்றி 2016 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி முதல் பல தடவைகள் நேரடியாக, மின்னஞ்சல்கள் மூலமாக நானும், இன்னும் சில தரப்பினரும் இலங்கையின் பாதுகாப்புத் தரப்பினரை எச்சரித்து இருந்தாலும், அவர்கள் முறையான நடவடிக்கை எடுக்காத காரணத்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெறுவதை தடுக்க முடியாமல் போயிருந்தது. தலிபான் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் வந்ததை தொடர்ந்து தலிபான்களுக்கு ஆதரவாக மலாலாவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கையர்கள் குறித்து எச்சரித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. 11 இஸ்லாமிய அமைப்புகள் இலங்கையில் தடை செய்யப் பட்ட பொழுதும், இலங்கையில் இருந்து முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு வெளிநாடுகளுக்கு அனுப்பிய ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமி இயக்கம் இது வரை தடை செய்யப்படவில்லை என்பது ஆச்சரியமானதும், அரசின் நேர்மையை கேள்விக்கு உள்ளாக்கக் கூடியதுமான விடயமாகும்.
..
இஸ்லாமிய பயங்கரவாதம் இலங்கையில் உள்ளது என்கின்ற உண்மையை நான் எழுதும் பொழுது எனக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தை முன்னெடுப்பவர்களும், நான் எழுதுபவற்றை மடை மாற்ற முயல்கின்றவர்களும் ‘நான் பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றேனா’ என்று தங்களைத் தாங்களே சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இஸ்லாமிய பயங்கரவாதம் உட்பட அனைத்துப் பயங்கரவாதங்களையும் எதிர்க்க வேண்டியது நம் அனைவரதும் கடமையாகும். இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்க்க உங்களில் சிலரது ஈமான் (இறை நம்பிக்கை) இடம் தராவிட்டால், நீங்கள் மெளனமாகவாவது இருங்கள், எதிர்ப்பவர்களை பலவீனப் படுத்தி அதன் மூலம் பயங்கரவாதம் மேலும் சக்தி பெற உதவாதீர்கள்.
...
பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் ஒழிக்கப்பட வேண்டும், அது இஸ்லாமிய பயங்கரவாதமாக இருந்தாலும் சரியே.
..
மேலதிக செய்திகளுக்கு : https://www.theguardian.com/.../man-shot-dead-in-new...
-றிஷ்வின் இஸ்மத்
03.09.2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக