ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

தலிபான் + புலி பயங்கரவாதத்திற்கும் தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் நியமனத்திற்கும் தொடர்பு உண்டா

தமிழ்நாட்டின் புதிய ஆளுநர்: உலகளாவிய பின்னணி!

மின்னம்பலம் : தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ரவீந்திர நாராயண ரவி செப்டம்பர் 18ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். ஏற்கனவே நாகாலாந்து ஆளுநராக பணியாற்றி வந்த ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு சலசலப்புகளை ஏற்படுத்தியது.
ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றப்பட்டு அதேநேரம் தமிழ்நாட்டின் ஆளுநராக ரவீந்திர நாராயண ரவி நியமிக்கப்பட்ட அறிவிப்பு வந்தவுடனே முதல் சந்தேகத்தை எழுப்பியவர் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி.
“ கல்வியாளர்கள், அரசியல் சட்ட நிபுணர்களையே ஆளுநர்களாக நியமித்து வந்த நிலையில் பாஜக அரசு இந்த மரபில் மாற்றம் கொண்டுவந்து காவல்துறை அதிகாரிகளையும் உளவுத் துறை அதிகாரிகளையும் ஆளுநர்களாக நியமிக்கிறது. இது ஜனநாயக கோட்பாட்டுக்கு சரியானதாக தெரியவில்லை. ஏற்கனவே புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியின் போது ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான கிரண் பேடியை துணைநிலை ஆளுநராக நியமித்து அவர் மூலம் அங்கே இருந்த ஜனநாயக ரீதியான காங்கிரஸ் அரசுக்கு தொந்தரவு கொடுத்தது பாஜக. இப்போது அதே போல உளவுத்துறை பின்னணியைக் கொண்ட ரவீந்திர நாராயண ரவியை தமிழ்நாட்டின் ஆளுநராக நியமித்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என்று குறிப்பிட்டிருந்தார் கே எஸ் அழகிரி.

அதேபோல விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் உளவுத்துறை பின்னணியைக் கொண்ட நபரை தமிழக ஆளுநர் பதவியில் நியமித்ததை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பதில் கூறினார். “புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி 1976 கேடர் போலீஸ் ஆபீசராக இருந்து பணி ஓய்வு பெற்று உடனடியாக ஆளுநர் ஆக்கப்படவில்லை. அவர் பணி ஓய்வு பெற்ற பிறகு நாகாலாந்தில் அரசுக்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நடத்தக் கூடியவராக ஒன்றிய அரசு நியமித்தது. அதை அவர் திறமையாக செய்ததை அடுத்து அவர் நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டார். அப்போது மக்கள் அதை வரவேற்றார்கள். அதன் பின் இப்போது தமிழக ஆளுநராக அவர் குடியரசுத் தலைவர் மாளிகையால் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

இதில் என்ன தவறை கே.எஸ். அழகிரி கண்டுபிடித்தார்? உத்தரகாண்டில் போட்டிருக்கக் கூடிய புதிய ஆளுநர் கூட டெபுடி ஆர்மி சீஃப் ஆக இருந்தவர். இதுபோல பல துறைகளில் சாதனை படைத்தவர்களை ஆளுநராக நியமிக்கிறார்கள். அழகிரியைப் பொறுத்தவரை ஐபிஎஸ் அதிகாரிகள் எல்லாம் ஆளுநர் பதவி வகிக்க தகுதி இல்லை என்கிறாரா? முதல்வர் வாழ்த்துகளை சொல்லியிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர்கள் வாழ்த்தியிருக்கிறார்கள். இந்நிலையில் அழகிரி போன்றவர்கள் ஆளுநர் நியமனத்தில் காழ்ப்புணர்ச்சியோடு அரசியல் செய்வதை கண்டிக்கிறேன். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று சொல்லுவார்கள். அதுபோல பேசுகிறார்கள்” என்று பதிலளித்தார் அண்ணாமலை.

தமிழ்நாட்டில் ஓர் ஆளுநர் நியமிக்கப்படுவதற்கு முன்பாகவே இப்படி சர்ச்சைகள் எழுவது புதிதான நிலையில் அவற்றை எல்லாம் தாண்டி செப்டம்பர் 18ஆம் தேதி ஆளுநர் பதவியை ஏற்றுக்கொண்டார் ரவீந்திர நாராயண ரவி. ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்ட பின் பேசுகையில்,

”பழமையான பாரம்பரியம் கொண்ட தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு தமிழக மக்களின் முன்னேற்றத்துக்கு உழைப்பேன். ஆளுநர் பதவி என்பது விதிகளுக்கு உட்பட்டது. அதற்கேற்பச் செயல்படுவேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தமிழகத்தில் உள்ளது. என்னால் முயன்ற அளவுக்கு தமிழக மக்களுக்கு சேவை ஆற்றுவேன். தமிழ் மொழியை கற்றுக்கொள்ள முயற்சி மேற்கொள்ள இருக்கிறேன். கொரோனாவை கட்டுப்படுத்த இணைந்து பணியாற்றுவது அவசியம். தமிழக அரசு கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டு கட்டுப்படுத்தியுள்ளது. அரசின் செயல்பாடுகள் குறித்து கூறுவதற்கு கால அவகாசம் தேவை” என்று பேசினார் புதிய ஆளுநர் ரவி.

இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநராக ரவி நியமிக்கப்பட்டதற்கு உளவுத் துறை சார்ந்த பின்னணி இருக்கத்தான் செய்கிறது என்கிறார்கள் அதிகாரிகள் வட்டாரத்தில்.

“கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு அங்கே அமெரிக்காவின் ஆதரவோடு இருந்த அரசுக்கு எதிராகப் போராடி அதை வீழ்த்தி அந்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆப்கானிஸ்தானின் பல்வேறு மாகாணங்களை கைப்பற்றிய பிறகு தலைநகர் காபூலுக்குள் நுழைந்து அதிபர் மாளிகையை கைப்பற்றி ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றினார்கள் தலிபான்கள்.

உலக ஊடகங்களில் எல்லாம் இது பற்றிய செய்திகள் அதிகமாக வந்து கொண்டிருந்த நிலையில் சமூக ஊடகங்களில் பலரும் தலிபான்களை ஆதரித்தும் எதிர்த்தும் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். குறிப்பாக இந்தியாவில் தலிபான்களுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட கருத்துக்களை ஒன்றிய அரசின் உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வந்தது. உத்தரப் பிரதேசம், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் சமூக ஊடகங்களில் தலிபான் ஆதரவு கருத்துக்கள் பகிரப்பட்டு சலசலப்பை ஏற்படுத்தியது என்றால் தமிழ்நாட்டிலும் தலிபான்கள் ஆப்கனை மீட்டனர் என்றும் அவர்கள் போராளிகள் என்றும் கொண்டாடும் விதமாக பதிவுகள் பகிரப்பட்டன.

குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளர் உமர் முக்தார் தலிபான்களை சிலாகிக்கும் விதமாக பதிவுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதற்கு கடுமையான எதிர்ப்புகள் வரவே இவை என்னுடைய சொந்தக் கருத்துக்கள் இதற்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தொடர்பு இல்லை என்று மறுத்தார். மேலும் தனது தலிபான் ஆதரவு பதிவுகள் பலவற்றை அவர் நீக்கினார். இதேபோல திரைப்பட இயக்குனர் அமீர் சில பல ஆண்டுகளுக்கு முன்பு, தலிபான்கள் பயங்கரவாதிகள் அல்ல அவர்கள் போராளிகள் என்று தலிபான்களை பாராட்டிப் பேசிய வீடியோ மீண்டும் வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது.

ஒன்றிய அரசின் உளவுத்துறை டெல்லிக்கு அனுப்பிய தகவல்களின்படி இந்தியாவிலேயே தலிபான் ஆதரவு கருத்துக்கள் சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்ட மாநிலம் தமிழ்நாடு தான் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல 2009ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்டுவிட்டாலும் உலகநாடுகளில் அவர்கள் பல்வேறு வடிவங்களில் செயல்பட்டு வருவதாக இலங்கை அரசு தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் பல நாடுகளிலும் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் அந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க நாடுகடந்த தமிழீழ அரசு எடுத்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை. தொடர்ந்து அந்தத் தடை நீடிக்கிறது.

இந்த நிலையில் இலங்கையை கடல் எல்லையாக பெற்றுள்ள இந்தியாவின் தென்பகுதி மாநிலமான தமிழ்நாட்டில் தலிபான், விடுதலைப் புலிகள் விவகாரம் சட்டம் ஒழுங்கு ரீதியாகவும், தேசப் பாதுகாப்பு ரீதியாகவும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.

சீனாவின் பிடியில் தற்போது ஆப்கானிஸ்தான் வந்திருக்கிறது. இலங்கையிலும் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியிருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து இலங்கை வழியாக இந்தியாவுக்குள் ஏதேனும் சீனாவின் உள் நுழைவுகள் நடக்கக் கூடும் என்றும் உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்த அடிப்படையில் இந்தியாவின் எல்லையோர மாநிலத்தின் அரசியல் சாசன பொறுப்பில் உளவுத்துறை நிபுணத்துவம் வாய்ந்தவர் இருந்தால் சரியாக இருக்கும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கருதி அதன் அடிப்படையிலேயே ரவீந்திர நாராயண ரவியை ஆளுநராக நியமனம் செய்துள்ளார்கள். இது மலினமான அரசியலைத் தாண்டிய மிகவும் உயர்மட்ட விஷயம்” என்கிறார்கள் அதிகாரிகள் வட்டாரத்தில்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக