ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

ஆப்கானிஸ்தானில் பெண்களின் கல்விக்கு தாலிபான் தடை விதித்தது

காபூலில் ஒரு பள்ளி வகுப்பறையில் மாணவர்கள்.

BBC :  வழக்கமாக உயர்நிலைப் பள்ளிகள் 13 முதல் 18 வயது வரையிலான மாணவர்களுக்கானது. இரு பால் மாணவர்களும் தனித்தனியாகவே கல்வி கற்பார்கள்.
ஆப்கானிஸ்தானில் உயர்நிலைப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால், மாணவிகளும், ஆசிரியைகளும் பள்ளிக்கு வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண் ஆசிரியர்களும், மாணவர்களும் மட்டுமே பள்ளிக்கு வரலாம் என்று தாலிபன்கள் தெரிவித்துவிட்டனர்.
'எல்லாமே இருண்டுவிட்டது போலத் தெரிகிறது' என்று பள்ளி செல்லும் வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒரு சிறுமி பிபிசியிடம் தெரிவித்தார். மற்ற மாணவிகளோ அவர்கள் வாழ்வு நாசமாக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.
கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய தாலிபன்கள், பெண்களை பள்ளி சென்று படிக்க அனுமதிக்கலாமா என்பது குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தனர்.

1990களில் ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்த தாலிபன்கள் சிறுமிகள் மற்றும் பெண்களின் உரிமையை கடுமையாக நசுக்கினார்கள். இப்போது அதே போன்ற ஆட்சி திரும்பிக்கொண்டிருக்கிறதோ என்று பலரும் அஞ்சுகிறார்கள்.

இஸ்லாமிய மதச் சட்டம் குறித்த தங்களின் புரிதலுக்கு ஏற்ப பெண்கள் படிக்கவும் வேலை செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று கடந்த மாதம் ஆட்சியைப் பிடித்தபோது தாலிபன்கள் தெரிவித்தனர்.

ஆனால், பாதுகாப்பு நிலைமை மேம்படும்வரை வீட்டிலேயே இருக்கும்படி வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சொல்லப்பட்டுள்ளது.

பெண்களுக்கு இடமே அளிக்காமல் வெறும் ஆண்களை மட்டுமே கொண்ட புதிய இடைக்கால அரசை தாலிபன்கள் அறிவித்தனர். இதை எதிர்த்துப் போராடிய பெண்களை தாலிபன் போராளிகள் அடித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை பெண்கள் விவகார அமைச்சகம் இருந்த இடத்தில் அதன் பெயர்ப்பலகையை மாற்றிவிட்டு மதக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் துறைக்கான பெயர்ப்பலகையை வைத்தனர். இதனால், அவர்கள் பெண்கள் விவகார அமைச்சகத்தை மூடிவிட்டது போலத் தோன்றுகிறது.

'என் எதிர்காலத்தை நினைத்தால் கவலையாக இருக்கிறது'

பள்ளிகள் திறப்பது தொடர்பாக சனிக்கிழமை விடுக்கப்பட்ட ஓர் அறிக்கையில் "அனைத்து ஆண் ஆசிரியர்களும், மாணவர்களும் தங்கள் கல்வி நிலையங்களுக்கு செல்லவேண்டும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உயர்நிலைப் பள்ளிகள் என்பவை 13 முதல் 18 வயது வரையிலான மாணவர்களுக்கானது. பொதுவாக இருபால் மாணவர்களும் தனித்தனியாகவே கல்வி கற்பார்கள்.
வகுப்பறையில் பாடம் நடத்தும் ஓர் ஆப்கானிஸ்தான் ஆசிரியை - கோப்புப் படம்.

பெண்கள் பள்ளிகள் விரைவில் திறக்கப்படும். இதற்கான நடைமுறைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்; ஆசிரியர்களை எப்படிப் பிரிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களும் ஆலோசிக்கப்படுகின்றன என்று தாலிபன் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் கூறியதாக ஆப்கானிஸ்தானின் பக்தர் செய்தி முகமை தெரிவிக்கிறது.

மூத்த பள்ளி மாணவிகள் பள்ளி செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை முடிவு செய்வது குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்துவருகின்றனர் என்று சபியுல்லா முஜாஹித் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆனால், மாணவிகள் பள்ளி செல்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதாக மாணவிகளும், பெற்றோர்களும் பிபிசியிடம் தெரிவித்தனர்.

"என் எதிர்காலம் குறித்து எனக்கு கவலையாக இருக்கிறது," என்று வழக்குரைஞர் ஆக விரும்பிய பள்ளி மாணவி ஒருவர் தெரிவித்தார்.

"எல்லாமே இருண்டு தெரிகிறது. ஒவ்வொரு நாளும் தூக்கத்தில் இருந்து விழித்து, நான் ஏன் உயிரோடு இருக்கிறேன் என்று கேட்டுக்கொள்கிறேன். யாரோ ஒருவர் ஒரு நாள் கதவைத் தட்டி தன்னை மணந்துகொள்ளும்படி கூறும் வரையில் நான் வீட்டிலேயே இருக்க வேண்டுமா? பெண்ணாக இருப்பதன் பயன் இதுதானா?" என்று கேட்டார்.

"என் தாய் படிக்காதவர். அதனால், என் தந்தை அவரை தொடர்ந்து மிரட்டிக் கொண்டே இருந்தார். எப்போதும் முட்டாளே என்றே அழைப்பார். என் மகள் என் தாயைப் போல ஆவதை நான் விரும்பவில்லை," என்று அந்தப் பெண்ணின் தந்தை கூறினார்.

"இது துயரம் நிறைந்த நாள்" என்று காபூலைச் சேர்ந்த ஒரு 16 வயது பள்ளி மாணவி தெரிவித்தார்.

"நான் மருத்துவராக விரும்பினேன். அந்தக் கனவு பாழாய்ப் போனது. அவர்கள் நான் பள்ளிக்குச் செல்ல விடமாட்டார்கள். அவர்கள் மீண்டும் உயர் நிலைப் பள்ளியைத் திறந்தால்கூட பெண்கள் கல்வி கற்றவர்களாக ஆவதை அவர்கள் விரும்பமாட்டார்கள்," என்றார் அவர்.

பெண்கள் பல்கலைக்கழகங்களில் படிக்க அனுமதிக்கப்படுவார்கள் ஆனால், அவர்கள் ஆண்களோடு ஒன்றாகப் படிக்க முடியாது. அவர்களுக்கு புதிய ஆடை ஒழுங்குகள் அறிமுகம் செய்யப்படும் என்று இந்த வாரத் தொடக்கத்தில் தாலிபன்கள் தெரிவித்திருந்தார்கள்.

புதிய விதிகளின்படி பெண்களுக்கு கல்வி கற்க வாய்ப்பு ஏற்படாது; ஏனென்றால், பல்கலைக்கழகங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி வகுப்புகள் நடத்த போதிய வசதிகள் இல்லை என்று சிலர் கூறுகிறார்கள்.

உயர் நிலைப்பள்ளிகளுக்கு பெண்களை வரவேண்டாம் என்று சொல்வதன் மூலம் அவர்கள் மேற்கொண்டு படிக்கும் வாய்ப்பு இல்லாமலே போகும்.

2001ல் தாலிபன்கள் ஆட்சி அகற்றப்பட்டபிறகு, ஆப்கானிஸ்தானில் கல்வி கற்போர் எண்ணிக்கை, எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை போன்றவற்றில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டது. குறிப்பாக பெண் கல்வி மேம்பட்டது.

தாலிபன் ஆட்சியில் தொடக்கப்பள்ளிகளில் கிட்டத்தட்ட 'ஜீரோ' ஆக இருந்த பெண்களின் எண்ணிக்கை, அவர்கள் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு 25 லட்சமாக உயர்ந்தது. எழுத்தறிவு பெற்ற பெண்களின் விகிதம் ஒரு பத்தாண்டு காலத்தில் இருமடங்கானது. அதாவது பெண்கள் எழுத்தறிவு விகிதம் 30 சதவீதம் ஆனது. ஆனால், பெரும்பாலான இந்த முன்னேற்றங்கள் பெரும்பாலும் நகரங்களில்தான் நடந்தன.

"ஆப்கானிஸ்தான் பெண்கள், சிறுமிகள் கல்வியில் இப்போது ஏற்பட்டிருப்பது பெரிய பின்னடைவு," என்கிறார் முன்னாள் கல்வி அமைச்சக செய்தித் தொடர்பாளர் நூரோயா நிஷாத்.

"தாலிபன்கள் 90களில் செய்ததை நினைவுபடுத்துகிறது இது. அதனால், ஒரு தலைமுறையே படிக்காத, எழுத்தறிவில்லாத பெண்களைக் கொண்டதாக ஆனது," என்றார் அவர்.

இஸ்லாமிய சட்டத்துக்கு உட்பட்டு ஆப்கானிஸ்தான் பெண்களின் உரிமைகள் மதிக்கப்படும் என்று அதிகாரத்தைக் கைப்பற்றிய உடனே தாலிபன்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக