வெள்ளி, 17 செப்டம்பர், 2021

கலைஞர் குடும்ப திருமண நிகழ்ச்சியில் ஸ்டாலின் – அழகிரி பங்கேற்பு; வைரல் படங்கள்

tamil.indianexpress.com : கலைஞர் குடும்ப திருமண நிகழ்ச்சியில் ஸ்டாலின் – அழகிரி பங்கேற்பு; வைரல் படங்கள்
முன்னதாக நடைபெற்ற நலங்கு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலினும் மு.க.அழகிரியும் ஒன்றாக மேடை ஏறினாலும் இருவரும் பேச்சிக்கொள்ளவில்லை. இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ளும் வாய்பை வெளிப்படையாக உருவாக்கிக் கொள்ளவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவருடைய சகோதரர் மு.க.அழகிரி இருவரும் எப்போது சந்திப்பார்கள் என்று திமுகவினர் எதிர்பார்த்திருந்த நிலையில், கருணாநிதி குடும்ப திருமண நிகழ்ச்சியில், மு.க. ஸ்டாலினும் மு.க. அழகிரியும் நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் கலந்துகொண்டுள்ளனர். திருமண நிகழ்ச்சியில் சகோதரர்கள் இருவரும் கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவர் கலைஞர் மகள் செல்வி – செல்வம் தம்பதியரின் மகள் எழிலரசி – ஜோதிமணியின் மகள் பிரியா ஜோதிமணி திருமணத்தில்தான் கலைஞர்  மகன்கள் மு.க.ஸ்டாலினும் மு.க.அழகிரியும் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபோது, அதுவரை ஸ்டாலினை விமர்சித்து வந்த மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். பதவியேற்பு விழாவில், மு.க.அழகிரி கொரோனா தொற்று காரணமாக பங்கேற்கவில்லை. ஆனால், அதன் பிறகு, மு.க.ஸ்டாலினும் மு.க.அழகிரியும் விரைவில் சந்திப்பார்கள் என்று தகவல்கள் வெளியானது. அதனால், திமுகவினர் மத்தியில் பிரிந்திருந்த சகோதரர்கள் எப்போது சந்திப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இருவரும் நேருக்குநேர் சந்திப்பதற்கான பல தருணங்கள் அமைந்தபோதும் இவரும் சந்திக்கவே இல்லை.

இந்த சூழ்நிலையில்தான், கலைஞர்  குடும்ப நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலினும் அழகிரியும் ஒன்றாக பங்கேற்றிருக்கிறார்கள். ஆனால், இருவரும் நேருக்கு நேர் சந்தித்து பேசினார்களா என்றால் இந்த முறையும் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை என்று தெரியவந்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர்  மகள் செல்வி – செல்வம் தம்பதியரின் மகள் எழிலரசி – ஜோதிமணியின் மகள் பிரியா ஜோதிமணிக்கும் ஜெய் ஸ்ரீ சந்தீப் ரெட்டிக்கும் செப்டம்பர் 10ம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில், கலைஞர் மகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருடைய மகன் உதயநிதி அவர்களுடன் அமைச்சர் பொன்முடி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுகவின் முக்கிய தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர். அதே போல, மு.க.அழகிரி தனது மனைவி காந்தி அழகிரி, அவருடைய மகன் துரை தயாநிதி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள்.

இந்த திருமண நிகழ்ச்சியில், சகோதரர்கள் மு.க. ஸ்டாலினும் மு.க. அழகிரியும் நேருக்கு சந்தித்துப் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திருமண மேடையில், எல்லோரும் ஒரே நேரத்தில் நிற்க இடம் இல்லாததால், மு.க.அழகிரி மேடை ஏறி வாழ்த்தியபோது, மு.க.ஸ்டாலின் ஹாலில் கீழே இருந்துள்ளார். பிறகு, மு.க.ஸ்டாலின் மேடைக்கு சென்று மனமக்களை வாழ்த்தியபோது, மு.க.அழகிரி ஹாலில் கீழே அமர்ந்திருந்துள்ளார். இதனால், இருவரும் மேடையில் ஒன்றாக பங்கேற்க முடியாமல் போயுள்ளது.

அதன் பிறகு, திருமண நிகழ்ச்சிக்கு பிறகு, சாப்பாட்டு பந்தியில் மு.க.அழகிரி பக்கத்தில் அமைச்சர் பொன்முடி அமர்ந்துள்ளார். அப்போது, மு.க.அழகிரி நகைச்சுவையாக அடித்த ஒரு கம்மெண்ட்டுக்கு அமைச்சர் பொன்முடி விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார். அமைச்சர் புரையேறும் அளவுக்கு சிரித்தார் என்கிறார்கள்.

அதே நேரத்தில், ஸ்டாலின் மகன் உதயநிதி எம்.எல்.ஏ.வும் அழகிரி மகன் துரை தயாநிதியும் அருகருகே இருந்து ஒருவருக்கொருவர் பேசியிருக்கிறார்கள்.

திமுவிகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி திமுகவுக்கு அவ்வப்போது தலைவலியைக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அமைதியாக இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், இந்த திருமண நிகழ்ச்சியில் பொன்முடி போன்ற மூத்த அமைச்சர்கள் அவருடன் நெருக்கமாக பேசியதால் திமுகவினருடன் அவர் இணக்கமாக இருப்பது தெரிகிறது.

இந்த திருமண நிகழ்ச்சியில் மு.க.அழகிரியின் தோரணை எப்படி இருந்தது என்றால், அவருக்கு அரசியலில் ஈடுபட்டு திமுகவுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தும் விதமாக விமர்சனங்கள் எதுவும் செய்யமாட்டார். குடும்பத்துடன் இணைது இருப்பார், அரசியலிலும்கூட பெரியதாக ஆர்வம் காட்டமாட்டார் என்றே தெரிகிறது என்கிறார்கள் திமுக வட்டாரங்கள். ஏனென்றால், ஸ்டாலின் மகன் உதயநிதியும் அழகிரி மகன் துரை தயாநிதியும் இணக்கமாக இருக்கிறார்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவருடைய சகோதரர் மு.க.அழகிரி இருவரும் எப்போது சந்திப்பார்கள் என்று திமுகவினர் எதிர்பார்த்திருந்த நிலையில், கலைஞர்  குடும்ப திருமண நிகழ்ச்சியில், இருவரும் ஒன்றாக கலந்துகொண்டனர். ஆனால், இருவரும் நேருக்கு நேர் சந்தித்து பேசிக்கொள்ளவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக நடைபெற்ற நலங்கு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலினும் மு.க.அழகிரியும் ஒன்றாக மேடை ஏறினாலும் இருவரும் பேச்சிக்கொள்ளவில்லை. இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ளும் வாய்பை உருவாக்கிக்கொள்ளவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக