வியாழன், 9 செப்டம்பர், 2021

கட்டுப்பாடுகளை மீறி திரண்ட மக்கள் கூட்டம்- அங்காடிகளில் விற்பனை அதிகரிப்பு

பூஜை பொருட்களை வாங்கும் பெண்கள்
மாலைமலர் : விநாயகர் சதுர்த்தியை ஒட்டி மதுரை மார்க்கெட்டுகளில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மற்றும் களிமண்ணால் உருவாக்கப்பட்ட சிறிய மற்றும் பெரிய விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வந்துள்ளது.
கட்டுப்பாடுகளை மீறி திரண்ட மக்கள் கூட்டம்- மார்க்கெட்டுகளில் விற்பனை அதிகரிப்பு
சென்னை:  : கொரோனா 2-வது அலை சற்று ஓய்ந்துள்ள நிலையில் 3-வது அலை தாக்க வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே அனைத்து மாநிலங்களிலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும், கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.
தற்போது பண்டிகை காலம் தொடங்கி இருப்பதால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவையான கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே கூறி உள்ளது.
இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.நாளை விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது. விநாயகர் சதுர்த்தி அன்று வீதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வது வழக்கம்.

கொரோனா மீண்டும் பரவி விடக்கூடாது என்பதற்காக தமிழ்நாட்டில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் வீதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது, விநாயகர் ஊர்வலங்களை நடத்துவது போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவிழாக்காலங்களில் தேவையான பொருட்கள் வாங்குவதற்காக மார்க்கெட்டுகள் மற்றும் கடை வீதிகளில் மக்கள் குவிவார்கள். அங்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், அதிக கூட்டம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கொரோனா விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

ஆனால் இன்று கடைவீதிகளிலும், மார்க்கெட்டுகளிலும் கூட்டம் அலைமோதியது. பூ, பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள் வாங்குவதற்காக ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள கடை வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். இதனால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக தென்பட்டது.

அவர்களை கட்டுப்படுத்துவதற்கு வியாபாரிகள் முயன்றபோதும் முடியவில்லை. போலீசாராலும் ஓரளவுக்கு தான் தடுக்க முடிந்தது. இவ்வாறு மக்கள் அதிகமாக கூடியதால் நோய் பரவலுக்கு வாய்ப்பாக அமைந்துவிடலாம் என்ற அச்சம் உருவாகி உள்ளது.  மக்கள் வீடுகளிலேயே விழாக்களை எளிமையாகக் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே வேண்டுகோள் விடுத்து இருந்தது. மாநில அரசும் உரிய உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது. ஆனால் மக்கள் அதை அலட்சியப்படுத்திவிட்டு கூட்டமாக கூடினார்கள்.

கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்து இறங்கும் கரும்புகள்


சென்னையை பொறுத்தவரையில் கோயம்பேடு மார்க்கெட், ரங்கநாதன் தெரு, கொத்தவால்சாவடி, புரசைவாக்கம், கொசப்பேட்டை, பாரிமுனை, பாண்டிபஜார், மயிலாப்பூர், வண்ணாரப்பேட்டை, பாடி, தாம்பரம், பல்லாவரம், திருவான்மியூர், திருவொற்றியூர் போன்ற பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

சில இடங்களில் நெருக்கியடித்தபடி கூட்டமாக மக்கள் நகர்ந்து சென்றனர். இதேபோல தமிழ்நாடு முழுவதும் கடைகள் மற்றும் மார்க்கெட்டுகளில் அதிக கூட்டம் காணப்பட்டது.

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி மதுரை மார்க்கெட்டுகளில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மற்றும் களிமண்ணால் உருவாக்கப்பட்ட சிறிய மற்றும் பெரிய விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வந்துள்ளது. விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கினர். மேலும் எருக்கம் மாலை, அருகம்புல், அவல், பொறி உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனையும் மும்முரமாக நடந்து வருகிறது.


விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பூஜைகள் மற்றும் அபிஷேகம் செய்வதற்காக பூக்கள் வாங்கவும் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.

இதன் காரணமாக மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள தற்காலிக மார்க்கெட்டில் இன்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கி செல்வார்கள்.

ஆனால் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக பூக்களை வாங்குவதிலும் பொது மக்கள் தங்கள் ஆர்வத்தை குறைத்துள்ளனர். ஆனாலும் தற்காலிக மார்க்கெட்டில் இட நெருக்கடி காரணமாக கூட்ட நெரிசல் காணப்பட்டது. முகூர்த்த நாட்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தியையொட்டி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலையும் இரு மடங்கு உயர்ந்துள்ளது.

கடந்த 2 நாட்களாக 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட மதுரை மல்லிகை இன்று ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. 300 ரூபாய்க்கு விற்கப்பட்ட பிச்சி, முல்லை உள்ளிட்ட மலர்களும் 900 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. சம்பங்கி, சிவந்தி, மரிக்கொழுந்து, பட்டர் ரோஸ், அரளி, அருகம்புல் மற்றும் உதிரி பூக்களின் விலையும் இரு மடங்கு உயர்ந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக