செவ்வாய், 7 செப்டம்பர், 2021

ஆப்கானில் அரபி மொழி பேசும் தாலிபான்கள் கர்ப்பிணி காவலரை சுட்டு கொன்றனர்

பானு நெகர் கொல்லப்படும் போது அவர் 8 மாத கர்பிணி என்கின்றனர் அவரது குடும்பத்தினர்

BBC  : ஆப்கானில் அரபி மொழி பேசும்  தாலிபான்கள் கர்ப்பிணி காவலரை  சுட்டு கொன்றனர்
பானு நெகர் கொல்லப்படும் போது அவர் 8 மாத கர்பிணி என்கின்றனர் அவரது குடும்பத்தினர்
ஆப்கானிஸ்தானில் தாலிபன் புதிய ஆளுகைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் வேளையில், புதிய அரசு பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டும் தாலிபன் அழைப்பு விடுத்திருக்கிறது.
அங்கு கடந்த 20 ஆண்டுகளாக பெண்கள் அனுபவித்து வந்த ஜனநாயக உரிமைகளை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தாலிபன் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் கர்ப்பிணியாக இருந்த காவலர் ஒருவரை தாலிபன்கள் சுட்டுக் கொன்ற சம்பவத்தை பார்த்ததாக சிலர் பிபிசியிடம் கூறியுள்ளனர்.
கொல்லப்பட்ட அந்த பெண் காவலரின் பெயர் பானு நெகர் என ஆப்கானிஸ்தானின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானின் மத்திய பகுதியில் இருக்கும் கோர் மாகாண தலைநகரான ஃபிரோஸ்கோவில், பானுவின் உறவினர்கள் முன்னிலையில் அவர் கொல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது.ஏற்கெனவே ஆப்கானிஸ்தானில் பெண்கள் அடக்குமுறைக்கு ஆளாவதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

பானு நெகரின் மரணத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என பிபிசியிடம் தாலிபன்கள் கூறியுள்ளனர். மேலும் அவரின் மரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

"எங்களுக்கு அந்த சம்பவம் குறித்து தெரியும். தாலிபன்கள் அவரை கொலை செய்யவில்லை என்பதை நான் உறுதி செய்கிறேன். நாங்கள் அச்சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம்" என தாலிபன் செய்தித் தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித் கூறியுள்ளார்.

ஏற்கெனவே முந்தைய அரசிடம் வேலை செய்தவர்களுக்கு தாலிபன் பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாகவும், பானு நெகரின் மரணத்துக்கு தனிப்பட்ட விரோதம் அல்லது மற்ற காரணங்கள் உள்ளதா என விசாரித்து வருவதாகவும் சபியுல்லா கூறினார்.

கர்ப்பிணி - கோப்புப் படம்

பானு நெகரின் மரணம் குறித்து தெளிவான விவரங்கள் கிடைக்கவில்லை. ஃபிரோஸ்கோ நகரத்தில் உள்ள பலரும் தாலிபன்களுக்கு எதிராக வாய் திறந்தால், பழிவாங்கும் நோக்கில் தாங்கள் தாக்கப்படலாம் என்கிற பயத்தில் இருக்கிறார்கள்.

இருப்பினும், பானு நெகர் தாலிபனால் அடித்து துன்புறுத்தப்பட்டு, அவரது கணவர் மற்றும் குழந்தைகள் முன்னிலையில் கடந்த சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாக மூன்று பேர் பிபிசியிடம் கூறியுள்ளனர். உள்ளூர் சிறையில் பணியாற்றிய பானு நெகர், எட்டு மாத கர்ப்பிணி ஆக இருந்தார் என்று கூறப்படுகிறது.

ஆயுதமேந்திய மூன்று பேர் சனிக்கிழமை அன்று அவர் வீட்டில் நுழைந்தனர். அவர்கள் அரபு மொழி பேசியதாக சம்பவத்தைப் பார்த்தவர்களில் ஒருவர் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தாலிபன்கள் ஆப்கனின் அதிகாரத்துக்கு வந்ததில் இருந்து, சகிப்புத்தன்மை மிக்கவர்கள் போல தங்களைக் காட்டி வருகிறார்கள். ஆனால் ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் கொடுங்கோன்மையும், அடக்குமுறைகளும் தொடர்ந்து நிலவுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

மத ரீதியில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் துன்புறுத்தப்படுவது, பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கொல்லப்படுவது போன்ற சம்பவங்களை மனித உரிமை குழுவினர்கள் ஆவணப்படுத்தி வருகின்றனர்.

ஒடுக்கப்பட்ட பெண்கள் போராட்டம்

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள்

கடந்த சனிக்கிழமை ஆப்கன் பெண்கள், தாங்கள் வேலை செய்யும் உரிமைக்காகவும், புதிதாக அமையவிருக்கும் அரசில் இடம்பெறுவது தொடர்பாகவும் போராட்டம் நடத்தினர்.

உரிமைக்காகப் போராடிய பெண்கள், அதிபர் மாளிகையை நோக்கிச் செல்ல முயன்ற போது கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் மிளகு ஸ்ப்ரே போன்றவற்றால் தாங்கள் இலக்கு வைக்கப்பட்டதாக பெண்கள் குழுவினர் தெரிவித்தனர்.

தாலிபன்கள் தானியங்கி துப்பாக்கியில் தோட்டோக்களை பொருத்தும் கருவியைக் கொண்டு பெண்களை தாக்கினர் என போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவ ர்ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் எப்படி தனியாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்படுவார்கள், பெண்களுக்கு பெண்களே பாடம் எடுப்பது அல்லது வயதான ஆண்கள் பாடம் எடுப்பது என விரிவான விளக்கங்களை தாலிபன் சமீபத்தில் வெளியிட்டது. அந்த நாட்டில் கல்வி நிலையங்களுக்கு வரும் மாணவிகள் கட்டாயம் அபயா அல்லது நிகாப் அல்லது ரோப் அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதும் இங்கே நினைவுகூரத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக