திங்கள், 20 செப்டம்பர், 2021

5000 ஆண்டுகளுக்கு மேல் பழைமை; முன்னோர்கள் ஆயுதம் தீட்டிய இடம் கண்டுபிடிப்பு! விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த நாராயணபுரம்

மலைத்தொடர்
விகடன் - அ.கண்ணதாசன்  : மலைத்தொடர்..    புதிய கற்காலத்தில், மிகப்பெரிய இனக்குழுவாக இப்பகுதியில் வாழ்ந்த மனிதர்கள், தங்களின் ஆயுதங்களைத் தீட்டுவதற்காகப் பயன்படுத்திய இடம் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆங்காங்கே கிடைக்கப் பெறும் ஒவ்வொரு தொல்லியல் பொருளும், சின்னங்களும் ஓவியங்களும் நம்மிடையே வியப்பை ஏற்படுத்துவதோடு,
நம் முன்னோர்களின் பண்டைய கால வாழ்வியலை மேன்மேலும் எடுத்துரைத்து வருகின்றன. அந்த வரிசையில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த நாராயணபுரம் பகுதியில் உள்ள மலைக்குன்று ஒன்றில் புதிய கற்கால மனிதர்கள் தங்களுடைய ஆயுதங்களைக் கூர்மை செய்வதற்காக (பட்டை தீட்டுதல்) பயன்படுத்திய இடம் கண்டறியப்பட்டுள்ளது.
கருவிகளைப் பட்டை தீட்டிய போது ஏற்பட்ட அக்குழிகள் சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானதாக இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, திருவண்ணாமலை வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வத்திடம் பேசினோம். “நானும் என் நண்பர்களும் செஞ்சியை அடுத்த பாக்கம் மலைப்பகுதியை ஒட்டியபடி கள ஆய்வு மேற்கொண்டிருந்தோம். அப்போது அப்பகுதியில் வந்த சிறுவன் நிதீஷ் குமார் என்பவரிடம் பேச்சுக் கொடுத்தோம். அச்சிறுவன் பேசிக்கொண்டிருக்கும்போது நாராயணபுரம் – செத்தவரை இடையே உள்ள ஒரு சிறிய மலைக்குன்றில் `காட்டேரியின் கால் தடம்’ உள்ளது என்று கூறினான். எங்களுக்கும் அந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆர்வம் வந்தது. அதைத் தொடர்ந்து அச்சிறுவனின் தந்தையிடம் கூறிவிட்டு, அச்சிறுவனுடன் அந்த மலைப் பகுதிக்குச் சென்றோம். நாராயணபுரம் ஏரியை ஒட்டியபடி அமைந்திருந்த மலைக்குன்றுப் பகுதியை அடைந்தோம். சுமார் 100 அடி உயரம் உள்ள அச்சிறு குன்றின் மீது ஏறியபோது, அதன் மேற்பரப்பு மிகவும் தட்டையாகப் பரந்து விரிந்து காணப்பட்டது. அச்சிறுவன் கூறிய இடம் அதுதான்.

அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பழங்கால கற்கோடாரி... இத்தனை ஆண்டுகள் பழைமையானதா?!

Also Read

அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பழங்கால கற்கோடாரி… இத்தனை ஆண்டுகள் பழைமையானதா?!

அங்கு இயற்கையாகவே அமைந்த சுனை ஒன்று நீருடன் காணப்பட்டது. சுனையைச் சுற்றி ஆங்காங்கே சிறு சிறு குழிகள் தென்பட்டது. அவற்றை ஆய்வு செய்தபோது, அவையாவும் கற்கால மனிதர்கள் தங்களுடைய கல் ஆயுதங்களைக் கூர்மைப்படுத்தப் பயன்படுத்திய இடம் என்பதைக் கண்டறிந்தோம். அக்குழிகள் யாவும் சிறு சிறு தொகுப்புகளாக அந்தக் குன்றின் மீது ஆங்காங்கே காணப்பட்டன.

இந்தச் சிறு குன்றானது செத்தவரை, பாக்கம் மற்றும் தடாகம் மலைத் தொடர்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது. கற்கால மனிதர்கள், தங்களின் ஆயுதங்களைத் தீட்டும்போது நீர் தேவைப்படும் என்பதால் நீர் ஊற்றை ஒட்டியபடி உள்ள இடங்களைத்தான் தேர்வு செய்வார்கள். அதன்படி பார்த்தால், இங்கு இயற்கையாகவே அமையப்பெற்ற வற்றாத நீர் ஊற்று ஒன்று இருப்பதாலும், குன்றின்மீது சமவெளிப் பரப்பு அதிக அளவில் இருப்பதாலும் இப்பகுதியில் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இவ்விடத்தைத் தங்கள் ஆயுதங்களைக் கூர் தீட்டும் இடமாகத் தேர்வு செய்திருக்கலாம்.

மக்கள் வழிபடும் புதிய கற்காலக் கருவிகள்
மக்கள் வழிபடும் புதிய கற்காலக் கருவிகள்

இக்குன்றின் மத்தியிலுள்ள சுனையைச் சுற்றியபடி மேற்பரப்பில் ஆங்காங்கே சிறு சிறு தொகுப்புகளாக 15 இடங்களில் குழிகள் காணப்படுகின்றன. இக்குழிகள் யாவும் சராசரியாக 30 – 32 செ.மீ நீளமும்; 7 – 8 செ.மீ அகலமும்; 4 – 5 செ.மீ ஆழமும் கொண்டுள்ளன. இங்குள்ள 15 தொகுப்புகளில் சிதையாதபடி 159 குழிகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளோம். ஒரு சில குழிகள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. அதேபோல, இந்தக் குன்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் கற்கால ஆயுதங்களும் கண்டறியப்பட்டுள்ளன. அவையாவும் புதிய கற்காலத்தைச் சேர்ந்தவையாகும். இதைத் தவிர்த்து ஊரில் ஆங்காங்கே நிலப்பகுதியில் கற்கால ஆயுதங்களைக் கண்டுள்ளதாக அந்த ஊரைச் சேர்ந்த சிலர் தெரிவித்தனர். இதுபோன்ற கற்கால ஆயுதங்களை இப்பகுதியில் உள்ள மக்கள், ஆங்காங்கே வைத்து வழிபட்டு வருகின்றனர். பொதுவாக பழைய கற்கால மனிதர்கள் உபயோகித்த கருவிகள் யாவும் சொரசொரப்புடன் காட்சியளிக்கும்.

பர்கூரில் 50,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால ஆயுதங்கள் கண்டெடுப்பு!

புதிய கற்கால மனிதர்கள் அதைச் சீர்செய்து வழவழப்புப் தன்மையுடன் மாற்றி உபயோகிக்கத் தொடங்கினர். அதுமட்டுமல்லாமல் நாடோடியாகவும், வேட்டைச் சமூகமாகவும் வாழ்ந்த பழைய கற்கால மனிதர்கள், புதிய கற்காலத்தில் ஓரிடத்தில் இனக்குழுவாக வாழத் தொடங்கினர். இங்கு அதிக அளவில் காணப்படும், ஆயுதங்களைப் பட்டை தீட்டப் பயன்படுத்திய குழிகள் மற்றும் ஆயுதங்களை வைத்துப் பார்க்கையில், இவ்விடத்தை ஒட்டிய மலைப்பகுதியில் புதிய கற்காலத்தில் மிகப்பெரிய இனக்குழு ஒன்று வாழ்ந்துள்ளதை நம்மால் அறிய முடிகிறது. ஏனெனில், இதற்கு முன்பாகக் கண்டறியப்பட்ட இதுபோன்ற குழிகள் குறைந்த எண்ணிக்கையிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தப் பகுதியில் அதிக எண்ணிக்கையில் ஒரே இடத்தில் கண்டறிந்துள்ளோம்.

சுனை
சுனை

எனவே, இக்குழிகள் யாவும் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புதிய கற்கால மனிதர்களால் ஆயுதங்களைத் தீட்டப் பயன்படுத்திய இடமாக இருக்கலாம் என்று கருதமுடிகிறது. இக்குன்றின் மீது உள்ள இந்தக் குழிகளை இவ்வூர் மக்களும், ’காட்டேரியின் கால்தடங்கள்’ என்றே அழைத்துவருகின்றனர். அதுமட்டுமன்றி, இக்குன்றின் சில பகுதிகள் ஆங்காங்கே சிதைக்கப்பட்டு வருவது வேதனை அளிக்கக்கூடியதாக உள்ளது. சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேல் தொன்மை வாய்ந்த இப்பகுதியைத் தமிழகத் தொல்லியல்துறை முறைப்படி ஆவணம் செய்து, இப்பகுதியைப் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்க முன்வர வேண்டும்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக