சனி, 11 செப்டம்பர், 2021

2000 கோடி முதலீடு . 4000 பேருக்கு வேலை வாய்ப்பு! மத்திய கிழக்கு DP World குழுமம் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் .

 கலைஞர் செய்திகள்  : முன்னணி கார் நிறுவனமான ஃபோர்டு, சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதால் இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ள
இதற்கிடையே, தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவில் ஈர்க்கப்பட்டு வருகின்றன. 4000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் DP World நிறுவனத்தின் ரூபாய் 2,000 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று முகாம் அலுவலகத்தில், ஐக்கிய அரபு அமீரக நாடுகளைச் சேர்ந்த DP World குழுமம், தூத்துக்குடி, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், சேலம், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் 2,000 கோடி ரூபாய் முதலீட்டில் கன்டெய்னர் முனையம், சிறு துறைமுகம், குளிர்பதனக் கிடங்கு, பல்பொருள் கிடங்குப் பூங்கா, நவீன வர்த்தகக் கிடங்கு மண்டலம் மற்றும் தகவல் தரவு மையம் போன்றவற்றை நிறுவ திட்டமிட்டு தமிழ்நாடு அரசுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

தமிழ்நாட்டில், ஏற்கனவே DP World குழுமம் 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்து 4,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் கன்டெய்னர் முனையங்கள் (Container Terminal), கன்டெய்னர் சரக்கு நிலையங்கள் (Container Freight Stations), சுங்கக் கிடங்குகள் (Bonded Warehouses), குளிர் பதனக் கிடங்குகள் (Cold Storages), உள்நாட்டுக் கிடங்குகள் (Domestic Warehouses) போன்ற பல உள்கட்டமைப்பு வசதிகளை நிறுவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பூஜா குல்கர்னி, DP World நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ரிஸ்வான் சூமர், தலைமை நிர்வாக அதிகாரி ரஞ்சித் ரே மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக