திங்கள், 16 ஆகஸ்ட், 2021

ஆப்கன் அதிபர் மாளிகையை கைப்பற்றிய தாலிபன்கள் - Taliban enters presidential palace in Kabul

BBC வணக்கம் நேயர்களே, இத்துடன் இன்றைய நேரலையை நிறைவு செய்கிறோம்.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும். காபூலிலேயே தங்கியிருப்பேன்: முன்னாள் அதிபர் கர்சாய்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலேயே தாம் தொடர்ந்து தங்கியிருக்கப் போவதாக முன்னாள் அதிபர் ஹமீது கர்சாஸ் காணொளி வெளியிட்டுள்ளார்.
தமது பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள காணொளியில், "நமது நாட்டில் உள்ள பிரச்னைகள் தீர்க்கப்பட்டு நல்வழியும் அமைதியும் நிலவும் என்று நம்புகிறேன்," என்று கூறியுள்ளார்.
 "தாலிபன் இஸ்லாமிய இயக்கத்தின் பாதுகாப்பு படையினர், எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கு மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
அதில் மட்டுமே பாதுகாப்பு படையினரும் தாலிபன்களும் கவனம் செலுத்த வேண்டும்," என்று கர்சாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் 2001ஆம் ஆண்டில் அமெரிக்கா ஆக்கிரமிப்பு படையெடுப்பு மேற்கொண்ட பிறகு அந்த நாட்டின் முதலாவது அதிபராக கர்சாய் பதவி வகித்தார். 2
014ஆம் ஆண்டுவரை அவர் பதவியில் தொடர்ந்தார். அதன் மூலம் ஆசிய நாடுகளிலேயே ஒரு நாட்டின் அதிபராக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

 காபூல் நகரில் 11 மாவட்ட மையங்களில் முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாக தாலிபன் இயக்க செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த மாவட்ட மையங்களில்தான் முக்கிய அரசுத்துறை அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
தலைநகருக்குள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே தங்களுடைய ஆயுதமேந்திய போராளிகள் நுழைந்ததாக அவர்கள் கூறினர்.
முன்னதாக, அதிபர் மாளிகையை தாலிபன்கள் கைப்பற்றியதாக கூறப்பட்ட நிலையில், தற்போது எங்கெல்லாம் தங்களுடைய கட்டுப்பாடு உள்ளது என்பதை தாலிபன்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அனைத்து விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது.

அங்கு ராணுவ விமானங்கள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையால் அந்த நாட்டின் வான்பரப்பில் பறக்க மாட்டோம் என்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடக்கலாம் என்று அந்நாட்டுக்கான அமெரிக்க தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கை குறிப்பை வெளியிட்டுள்ளது.

இன்று மாலை காபூல் நகருக்குள் இயங்கி வந்த அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது. அங்கு பணியாற்றி வந்த தூதர் உள்பட அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாக விமான நிலைய வளாகத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
அந்த வளாகத்திலேயே தற்காலிகமாக தூதரகம் செயல்படவும் ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது காபூல் விமான நிலைய பாதுகாப்பை நேட்டோ கூட்டுப்படையினர் கவனித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று இரவு விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி சூடு நடப்பதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

விமான நிலைய வளாகத்துக்குள் சில விமான நிறுவனங்களின் ஊழியர்கள், குடியுரிமை அதிகாரிகள் சிலர் மட்டுமே இருக்கிறார்கள்.

விமான நிலையத்தில் இருந்து தாயகத்துக்கு திரும்ப முற்படுவோருக்கு உதவியாக தமது படையினர் விமான நிலையத்தில் இருப்பதாக நேட்டோ செகரட்டரி ஜெனரல் யென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள அதிபர் மாளிகையின் கட்டுப்பாட்டை தாலிபன்கள் எடுத்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அங்கு களத்தில் உள்ள முழுமையான தகவலை அறிய முடியவில்லை.

உள்ளூர் செய்தியாளர் பிலால் சர்வாரி பிபிசியிடம் கூறும்போது, அரசு தரப்புடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த இரண்டு அப்கானியர்களிடம் பேசியதில் இருந்து அமைதியான முறையில் ஆட்சியை ஒப்படைத்து விட பேச்சுவார்த்தை நடந்த வேளையில், அதிபரும் அவரது அமைச்சரவையின் மூத்த தலைவர்களும் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

இந்த நிலையில், ஆப்கன் அரண்மனையை கைப்பற்றிய பிறகு, அங்கு பணியாற்றிய ஊழியர்களிடம் உடனடியாக காலி செய்யுமாறு தாலிபன்கள் வற்புறுத்தியதாக அங்கு பணியாற்றிய ஊழியர்கள் கூறினர்.

அதிபரின் மாளிகையை தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்ட தகவலை தாலிபன்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால், இது தொடர்பான தகவல்கள், அந்நாட்டு அரசு தரப்பு அதிகாரிகளிடம் இருந்து இன்னும் வெளிவரவில்லை.

பிபிசி செய்தியாளர் யால்டா ஹக்கிம் நேரலையில் செய்தி வழங்கிக் கொண்டிருந்தபோது, அவரது செல்பேசியில் அழைத்துப் பேசியுள்ளார் தாலிபன் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன்.

"ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து மக்களும் பாதுகாப்பாக உள்ளனர்," என்று அவர் தெரிவித்தார்.

"ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இதை ஒன்றை உறுதிப்படுத்துகிறோம். குறிப்பாக காபூல் நகரவாசிகள், அவர்களின் உடைமைகள், உயிர் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும். யார் மீதும் பழிவாங்கும் நடவடிக்கை இருக்காது," என்று அவர் குறிப்பிட்டார்.

"நாங்கள் இந்த நாட்டு மக்களின் சேவகர்கள்," என்றும் அவர் தெரிவித்தார்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதர் ரோஸ் வில்சன் தமது தூதரகத்தில் இருந்து வெளியேறி விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தூதரகத்துக்கு வந்துள்ளார்.

முன்னதாக, நகருக்குள் இருந்த தூதரகத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அந்த தூதரகத்தின் கொடிக்கம்பத்தில் இருந்த அமெரிக்க கொடி அகற்றப்பட்டு விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இயங்கி வந்த தமது தூதரகம், தற்காலிகமாக அந்த நகர விமான நிலைய வளாகத்துக்கு மாற்றப்படுவதாக அமெரிக்க உள்துறை செயலாளர் ஆன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.

ஏபிசி நியூஸிடம் இது தொடர்பாக பேசிய அவர், "இதுபோன்ற சூழ்நிலைகளுக்காகவே எங்களுடைய சில படையினர் அங்கு உள்ளனர். அந்த நாட்டில் பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் நாங்கள் இருப்பதை உறுதிப்படுத்தவே இதை செய்கிறோம். காபூலில் உள்ள தூதரகத்தில் இருப்பவர்கள் விமான நிலைய வளாகத்துக்கு வரழைக்கப்பட்டுள்ளனர்," என்று கூறினார்.

தூதரக ஊழியர்களின் பட்டியல் முழுமையாக உள்ளதால் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான இரட்டிப்பு முயற்சிகள் முழுமையாக மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள நிலைமையை, வியட்நாமின் செய்கான் சம்பவத்துடன் ஒப்பிடுவது தவறு என்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்து விட்டது என்றும் அன்டனி பிளிங்கென் கூறினார்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அசாதாரணமான சூழ்நிலை நிலவுவதால் அங்குள்ள விமான நிலையத்துக்கு ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக சயீதி* என்ற மாணவர் நடந்தே வந்ததாக பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

"எனது கால்கள் காப்பு காய்ச்சியது போல் ஆகிவிட்டன. நிற்கவே சிரமப்படுகிறேன்," என்று அவர் கூறினார்.

"காபூலின் தற்போது ராணுவ நகரம் போல காட்சியளிக்கிறது. அங்கிருப்பவர்கள் பாரம்பரிய உடையில் ஆயுதங்களுடன் காட்சியளிக்கிறார்கள். வானை நோக்கி துப்பாக்கியால் சுடுகிறார்கள். அதை பார்க்கும்போது எனது பெற்றோர் கூறிய ஜிஹாதி கதைகள்தான் நினைவுக்கு வருகின்றன," என்று சயீதி தெரிவித்தார்.

இஸ்தான்புல்லில் முதுகலை பட்டப்படிப்பு கல்வியை தொடருவதற்காக விமான நிலையம் வந்துள்ளார் சயீதி. கல்லூரி விடுமுறையை கழிக்க காபூலுக்கு வந்த அவர், மீண்டும் தமது இஸ்தான்புல் திரும்புகிறார்.

"இப்போது நான் திரும்புகிறேன். ஆனால், எனது பெற்றோரின் நிலை தெரியவில்லை. அவர்கள் தப்பிக்க வழியே இல்லை. இங்கு எதிர்காலம் இருக்கும் என எனக்குத் தோன்றவில்லை," என்று அவர் கூறினார்.

ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தில் ராஜீய நிலையிலான தங்களுடைய இருப்பு தொடர்ந்து உறுதி செய்யப்படும் என்று நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது.

"ஆப்கானிஸ்தானில் உள்ள நிலைமைகளை தொடர்ந்து கவனித்து வருகிறோம். அங்கு கூட்டுப்படை வீரர்களின் பாதுகாப்பு முக்கியம். தேவைக்கு ஏற்ப இதில் மாற்றம் செய்யப்படும்," என்று நேட்டோ கூறியுள்ளது.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் பல இடங்களில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்பதாக சம்பவங்களை நேரில் பார்ப்பவர்களும் உள்துறை அமைச்சக அதிகாரிகளும் கூறுவதாக ராய்ட்டர்ஸ் சர்வதேச செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

வந்துகொண்டிருக்கும் செய்திகாபூலுக்குள் தாலிபன்கள் - சூறையாடல்களை தடுக்க நுழைந்ததாக அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சூறையாடல்கள் நடப்பதை தடுக்க நகர எல்லையில் காத்திருந்த தமது ஆயுதமேந்திய போராளிகளை உள்ளே நுழைய உத்தரவிட்டுள்ளதாக தாலிபன் செய்தித்தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளதாக ஆப்கானிஸ்தானின் டோலோ தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தகவலை பிபிசியால் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த இயலவில்லை.

நகரின் பல இடங்களில் இருந்த சோதனைச் சாவடிகளில் இருந்து பாதுகாப்புப் படையினர் வெளியேறி விட்டதால் குழப்பத்தையும் சூறையாடல்களையும் தவிர்க்கவே தங்களுடைய போராளிகள் நகருக்குள் நுழைந்ததாக அந்த செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

தங்களுடைய போராளிகளைக் கண்டு மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று தாலிபன்கள் அறிக்கை வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் மோசமடைந்து வரும் அரசியல் நிலைமை குறித்து விவாதிக்க கோப்ரா அவசர கூட்டத்தை கூட்டியிருக்கிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

மிகவும் முக்கியமான காலகட்டத்தில் அவசரகால ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் அங்கம் வகிக்கும் குழுதான் கோப்ரா.

இந்த நிலையில், ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் எனப்படும் பிரிட்டன் மக்களவை வரும் 18ஆம் தேதி கூடும் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

காபூல் சிறைகளில் உள்ள தங்களுடைய சகாக்களை அதிரடியாக சிறைக்குள் நுழைந்து விடுவித்துள்ளனர் தாலிபன்கள்.

அங்குள்ள மிகப்பெரிய சிறைச்சாலையான புல் இ சார்க்கிக்குள் ஞாயிற்றுக்கிழமை மாலையில் தாலிபன்கள் ஆயுதமேந்திய போராளிகள் குழு நுழைந்தனர்.

அந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்த தாலிபன்களை அடையாளம் கண்டு அவர்களை போராளிகள் விடுவித்தனர். முன்னதாக, பக்ராம் விமானப்படை தளத்தில் உள்ள சிறையையும் தங்கள் கட்டுப்பாட்டுக்கு தாலிபன்கள் கொண்டு வந்தனர்.

பாக்ராம் சிறைச்சாலையில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் குழுவினர், தாலிபன்கள், பிற தீவிரவாத குழுக்களைச் சேர்ந்தவர்கள் உள்பட சுமார் ஐந்தாயிரம் பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

வந்துகொண்டிருக்கும் செய்திஆப்கானிஸ்தானை விட்டு அஷ்ரஃப் கனி சென்றதாக தகவல்

Image caption: அஷ்ரஃப் கனி, ஆப்கானிஸ்தான் அதிபர்

ஆப்கானிஸ்தானை விட்டு அந்நாட்டின் அதிபர் அஷ்ரஃப் கனி சென்று விட்டதாக அங்குள்ள அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவருகின்றன.

தலைநகர் காபூலை தாலிபன் போராளிகள் சூழந்துள்ள வேளையில், இந்த செய்தி வெளி வந்துள்ளது.

அந்த நாட்டின் துணை அதிபர் அம்ருல்லா சாலேயும் நாட்டை விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானின் கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளையும் தாலிபன்கள் தங்களுடைய கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து விட்டனர். பல மாகாணங்களில் ஆளுநர்கள் தாங்களாகவே ஆட்சி அதிகாரத்தை தாலிபன்களிடம் ஒப்படைத்து விட்டு சரணடைந்து விட்டனர்.

இந்த நிலையில், தாலிபன்கள் ஆக்கிரமிப்பைத் தொடங்கிய 10 நாட்களுக்குள்ளாகவே நாட்டின் அனைத்து இடங்களிலும் அவர்களின் போராளிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே, இன்று பிற்பகலில் ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா. சிறப்புப் பிரதிநிதியுடன் அதிபர் அஷ்ரஃப் கனி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளிவந்தது.

இந்த நிலையில், தாலிபன்கள் வசம் ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாடு செல்வதால், அதிபர் பதவியில் இருந்து அஷ்ரஃப் கனி பதவி விலக வேண்டும் என்று அவருக்கு அழுத்தம் அதிகரித்தது.

அவரது அமைச்சரவையில் இருந்த பலரும் அமைதியாக ஆட்சிப்பொறுப்பை ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக இன்று மாலையில் அறிவித்தனர்.

இந்த நிலையில், அதிபர் அஷ்ரஃப் கனி நாட்டை விட்டு சென்று விட்டதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது.

அமெரிக்க தூதரக ஊழியர்களுடன் சீறிப்பறந்த ராணுவ ஹெலிகாப்டர்கள்

Image caption: காபூலில் உள்ள தூதரகத்தில் இருந்து பறந்தபோது, தாலிபன்களின் தாக்குதலைத் தவிர்க்க புகையை கக்கியபடி விமான நிலையம் நோக்கிப் பறந்த அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர்கள்.

ஆப்கானிஸ்தானில் ஆட்சி ஒப்படைப்பு தொடர்பாக அரசு தரப்புடன் தாலிபன்கள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் வேளையில், காபூலில் உள்ள தூதரகத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களை பாதுகாப்புடன் விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்ல ராணுவ ஹெலிகாப்டர்களை பயன்படுத்தியிருக்கிறது. அமெரிக்க ராணுவம்.

இன்று மாலையில் அங்குள்ள தூதரகத்தில் இரண்டு ஹெலிகாப்டர்கள் தூதரகத்தில் தரையிறங்கி பிறகு சில மணி நேரத்தில் ஊழியர்களுடன் விமான நிலையம் நோக்கிப் பறந்தது.

தூதரகத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியே வந்த பிறகு அதை விரைவில் மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று என்பிசி நியூஸ் செய்தியாளர் ரிச்சர்ட் ஏங்கெல் கூறுகிறார்.

ஏற்கெனவே அமெரிக்க தூரகத்தில் பணியாற்றி வந்த தூதரக அதிகாரிகள் காபூல் விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் எவ்வளவு நேரம் காத்திருப்பார்கள் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

காபூலில் உள்ள மீதமுள்ள ஊழியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது தொடர்பாக தாலிபன்களுடன் அமெரிக்க தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க அதிகாரியை மேற்கோள்காட்டி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


என்ன நடக்கும் என்று அஞ்சுகிறோம்: ஆப்கானிஸ்தான் பெண் எம்.பி.

தாலிபன்கள் காபூல் நகரை சுற்றிவளைத்துவிட்ட நிலையில், காபூலில் இருப்பவர்கள் என்ன நடக்குமோ என்று அஞ்சுவதாக கூறியுள்ளார் ஃபர்சானா கொச்சா என்ற ஆப்கானிஸ்தான் பெண் எம்.பி. நகரில் துப்பாக்கி சத்தம் கேட்பதாகவும், பலர் தப்பி ஓடுவதாகவும், வேறு பலர் தங்கள் வீடுகளில் ஒளிவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக