திங்கள், 16 ஆகஸ்ட், 2021

சிலருக்கு தாலிபான், இசிஸ் (ISIS)- இஸ்லாமிய அரசு எல்லாம் புரட்சிகர அமைப்புக்கள்தான்.

May be an image of 1 person

Sharmila Seyyid  :   ஆப்கானிஸ்தான்  தோழிகள் இருவர்  2017 ஆம் ஆண்டு முதல் எனக்குப் பரிச்சயம். இவர்களுடன் ஒரு மாதம் 10 நாட்கள் ஒரே அறையில் வசித்துப் பழகியிருக்கிறேன்.
இனி எப்போது சந்திப்போமோ என்ற வருத்தமுடன் பிரியும் போது ஞாபகத்திற்கு வைத்துக் கொள்ளவென உடைகளை மாற்றிக் கொண்டோம்.
என்னிடம் என் தோழி நெகினாவின் நீல நிறத்தினாலான ஒரு சட்டையும், அவளிடம் எனது ஒரு சிவப்பு பிளாசா பேண்டும் உள்ளது. லீனா எனக்கொரு ”பஸ்மினா” தாவணியைத் தந்தாள். நான் இந்தியாவில் குறத்திப் பெண்ணிடம் வாங்கிய கற்கள் பதித்த மாலையை அவளுக்குத் தந்தேன்.
சில நாட்களாகவே வாட்சப் வழியாக அவர்களைத் தொடர்பு கொள்வதற்கு நானும் வேறுபல சகோதரிகளும் இணைந்து செயற்பட்டோம். மிகவும் உடைந்த மனதுடன் இருந்தேன்.
அவர்களின் தொடர்பு கிடைக்காமல் ஏமாறும்போதெல்லாம் அவர்களைப் பற்றியே ஏனைய தோழிகளுடன் பிதற்றிக்கொண்டிருந்தேன்.
என் தோழி லீனாவின் மகள் அங்குள்ள ஒட்டுமொத்தக் குழந்தைகளின் ஞாபகமாக என்னிதயத்தைப் பிடித்திருந்தாள். அங்குள்ள நிலவரங்களைச் செய்திகளாகப் படித்தும் காட்சிகளாகக் கண்டும் மனக்கிலேசம். மததீவிரவாதிகளின் ஆட்சி என்பது முழுப் பிராந்தியத்திற்குமே அச்சுறுத்தலானது.

ஆப்கான் நாட்டைத் தாலிபன்கள் கைப்பற்றியதன் முழுமையான எதிரொலியைக் காண இன்னும் சில மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும். ஆனால் அங்கு மக்கள் இருப்பார்களா? மக்கள் எப்படியாவது எல்லை கடந்துவிடத் துடித்தபடி இருக்கிறார்கள். எங்காவது போய்விட வேண்டும் என்கிறார்கள்.
 இறுதியாக இன்று காலை எனதிரு தோழிகளுடனும் பேசக் கிடைத்தது. அவர்கள் இப்போது வரையும் உயிருடன் இருக்கிறோம் என்றார்கள். எந்நேரமும் எங்களுக்கு ஆபத்து நேரலாம் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.  
தலைநகர் காபூலைக் கைப்பற்றிய தாலிபானியர்கள் நகரிலிருந்த அலுவலகங்கள், வங்கிகளுக்குள் நுழைந்து அங்கு பணியில் இருந்த பெண்களைத் துப்பாக்கி முனையில் வெளியேற்றி வீடுவரையும் கொண்டு சென்று சேர்ப்பித்துவிட்டு, ”இனி பெண்கள் யாரும் வேலைக்குத் திரும்பக் கூடாது. இவர்களுக்குப் பதிலாக ஆண் உறவினர்கள் பணியில் இணையலாம்” என்று உத்தரவிட்டுள்ளார்கள்.

இதுவொரு சின்ன உதாரணம். மத அடிப்படைவாதிகள் ஆட்சிக்கு வந்தால் அவர்களின் முதல் குறி பெண்கள். எனது தோழியின் சகோதரி வங்கிப் பணியாளர். பட்டப்படிப்பு முடித்து வங்கித் துறையில் அனுபவம் பெற்று அதற்கான அனைத்துத் திறன்களுடன் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியில் இருந்துள்ளார். பெண்களின் கல்விக்கும், தொழில் உரிமைகளுக்குமான தடைகள் முன்பு தாலிபானியர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்த நடைமுறைதான். இப்போது ஆப்கான் தலைநர் காபூல் வரையும் வந்துவிட்டது.

இது நிகழ்கால யதார்த்தம். கடந்த 24 மணி நேரங்களுக்கு முன்பாக நடந்தேறிய ஒரு நிகழ்ச்சி மட்டுமே இது. மிகவும் சாதாரணமாக உயிர்ச்சேதமில்லாமல் நடந்தேறிய ஒரு நிகழ்ச்சி. பெண்களின் கழுத்துக்களை பொது இடங்களில் சீவி எறிந்த, கசையடிகளால் வதைத்துக் கொன்ற, கௌரவக் கொலைகளுக்கு பலியிட்ட பல நூறு பெண்களின் புதைகுழிகள் ஆப்கானிஸ்தானில் உள்ளன. ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், ஈரான் – ஈராக் எல்லைப் புறப் பகுதிகளில், சிரியாவில் -  இங்கெல்லாம் கௌரவக் கொலை என்பது மிகச் சாதாரணம். இதற்குப் பலியாகுவது எப்போதும் பெண்கள் என்பது எழுதப்படாத விதி.

மத தீவிரவாதிகளின் ஆட்சிகளில் பெண்களுக்கு எந்த உரிமைகளும், கௌரவங்களும் இருப்பதற்கில்லை. துளியும் இல்லை. ஈராக் எல்லையிலும் சிரியாவிலும் இதைத்தான் இசிஸ் (ISIS) இஸ்லாமியத் தீவிரவாதிகள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ISIS மத தீவிரவாதிகள் கற்பனாவில் வாழ்கிறவர்கள், மனிதாபிமானத்திற்கு விரோதமானவர்கள் என்று சொல்கிற முஸ்லிம்களில் பலர் ஆப்கான் தாலிபானியர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிவித்து பாராட்டு விழா நடாத்துகிறார்கள். மத தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில், ஆட்சியில் வாழ விரும்பாது அந்நிலத்து மக்கள் எப்படியாவது எல்லைகடந்துவிடத் துடிக்கிறார்கள். ஆனால் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் மதவாதிகளுக்கோ அவ்வளவு புளகாங்கிதம்.

அவர்கள் சொல்லும் காரணங்கள், -
1) தாலிபன் இயக்கம் அமெரிக்காவின் தயாரிப்பு
2) தாலிபானியர்களுக்கு மத அடிப்படைவாதத்தைக் கற்பிப்பதற்கான புத்தகங்களை அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் தயாரித்தன
3) தலிபானியர்கள் தீவிரவாதிகள் இல்லை, அவர்கள் எந்தத் தீவிரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டவர்கள் இல்லை. அவர்கள் புரட்சியாளர்கள் - அமெரிக்க வல்லரசை எதிர்த்து 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி தங்கள் நிலத்தை மீட்டெடுத்துள்ளார்கள்.
சோவியத்தை அழிப்பதற்காக  பல தீவிரவாத அமைப்புக்களை அமெரிக்கா உருவாக்கியது, தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் தான் உருவாக்கிய தீவிரவாத அமைப்புக்களை எதிர்த்துப் போர் செய்து தொட்டிலும் ஆட்டிப் பிள்ளையும் கிள்ளிய அமெரிக்காவின் குரூர முகம் இங்கு யாருக்கும் தெரியாததில்லை. மத்திய கிழக்கு நாடுகள் பலவற்றை இப்படித்தான் அமெரிக்கா சிதைத்தது, உண்மை.  
ஆனால் அமெரிக்க ஏகாதிபத்திய அரசியலுக்கும் தாலிபான்களின் சமகால வெறியாட்டத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை.

தலிபானியர்கள் தீவிரவாதிகள் இல்லை, அவர்கள் எந்தத் தீவிரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டவர்கள் இல்லை என்று சொல்கிறவர்களின் பார்வையில், பெண்களை அடக்கியொடுக்கும் எந்த நடவடிக்கையும் தீவிரவாதம் கிடையாது. இப்படியானவர்களுக்கு தாலிபான், இசிஸ் (ISIS)- இஸ்லாமிய அரசு எல்லாம் புரட்சிகர அமைப்புக்கள்தான்.  

 பெண்களின் உரிமைகளைப் பறிக்கும், அவர்களின் சுதந்திரமான நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும், வாழ்வுக்கு அச்சுறுத்தலான வன்முறை நடவடிக்கைகளால் பெண்களை ஒடுக்கும் நடவடிக்கைகள் மதவாதிகள் வாழ்வின் ஒரு பகுதி. பெண்களைப் பாதுகாப்பதே இவர்கள் புரட்சியின் பிரதான அடையாளம்.
மதவாதிகள் அவர்கள் இந்துவாக, கிறிஸ்தவம், இஸ்லாம், பௌத்தம் என்று எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் – தீவிரமயப்படுவதற்கு அவர்களின் மதப் பற்று ஒன்றே போதும்.  மதச் சிந்தனைகளால் புழுத்துப்போனவர்களின் மூளையை எந்தவொரு ஏகாதியத்திய நாட்டின் பல்கலைக்கழக புத்தகங்களாலும் சலவை செய்ய முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக