சனி, 21 ஆகஸ்ட், 2021

Buddha collapsed out of Shame தாலிபானின் கொடூரங்கள் பற்றிய விருது பெற்ற திரைப்படம்

Amazon.com: Buddha Collapsed Out of Shame [Import anglais] : Movies & TV

 வெட்கத்தினால் உடைந்தழிந்து போனார் புத்தர்
- எம்.ரிஷான் ஷெரீப்  :              ஒரு ஐந்து வயது ஏழைச் சிறுமி. அவளைச் சூழவும் துப்பாக்கிகள் குறிபார்த்திருக்கின்றன. அவளது நெஞ்சளவு குழி தோண்டப்பட்டு அதில் பலவந்தமாக இறக்கி விடப்படுகிறாள். கற்களாலெறிந்து கொல்லப்பட தீர்ப்பளிக்கப்படுகிறாள். அவ்வாறு செய்யப்பட அவள் செய்த குற்றம்தான் என்ன?
            அவள் சிறைசெய்யப்பட்ட இடத்தில் இன்னும் சில சிறுமிகள். ஆளுக்கொரு குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அவர்களது கண்களும் வாயுமிருக்குமிடத்தில் மட்டும் துளைகளிடப்பட்ட பைகளால் முகங்கள் மூடப்பட்டிருக்கின்றன. புதிதாக அங்கே கொண்டு வந்து விடப்பட்ட ஐந்து வயதுச் சிறுமி அவர்களைப் பார்த்துக் கேட்கிறாள்.
'அந்தப் பையை எடுத்து விடுங்கள். நீங்கள் யாரென்று நான் பார்க்க வேண்டும்.'
'முகத்தைக் காட்டுவதற்கு நான் அச்சப்படுகிறேன்.'
'யாரைப் பார்த்துப் பயப்படுகிறீர்கள்?'
'அந்தப் பையன்களைப் பார்த்து'
'ஏன்?'
'நான் என் முகத்தை மறைக்காதிருந்தால் அவர்கள் என்னைக் கல்லாலெறிந்து கொன்று விடுவார்கள்.'
'அவர்கள் எதற்காக உன்னைக் கைது செய்தார்கள்?'

'எனது கண்கள் ஓநாயின் கண்களைப் போல அழகாக இருப்பதாகச் சொல்லிக் கைது செய்தார்கள்'
'அவர்கள் இந்தச் சின்னக் குழந்தையை எதற்காகக் கைது செய்தார்கள்?'
'இந்தக் குழந்தை லிப்ஸ்டிக் போட்டிருந்ததாகச் சொல்லி தடுத்து வைத்துள்ளார்கள்'
'இந்தக் குழந்தையிடம்தான் லிப்ஸ்டிக் இல்லையே?'
'அந்தப் பையன்களே பூசிவிட்டு, இங்கே தடுத்து வைத்துள்ளார்கள்.'
'உன்னை எதற்காகக் கைது செய்தார்கள்'
'நான் மிகவும் அழகாக இருப்பதாகச் சொல்லிக் கைது செய்தார்கள்.'
'உன்னை எதற்காகக் கைது செய்தார்கள்?'
'சுவிங்கம் மென்றுகொண்டே பள்ளிக்கூடம் போனதற்காகக் கைது செய்துள்ளார்கள்'
'சுவிங்கம் மெல்வது பாவமான ஒரு விடயமல்ல?'
'எனது புத்தக அட்டையில் உதைப்பந்தாட்ட வீரரொருவரின் படம் இருந்தது'
          அடுத்த வீட்டுச் சிறுவன் கல்வி கற்பதைப் பார்த்து அந்த ஐந்து வயதுச் சிறுமிக்கு, பள்ளிக்கூடம் சென்று கல்வி கற்கும் ஆர்வம் எழுகிறது. அவளிடமோ அப்பியாசக் கொப்பியோ, பென்சிலோ இல்லை. வாங்குவதற்கு வீட்டிலும் பணம் இல்லை. கடைக்காரரின் யோசனைக்கிணங்க, வீட்டில் அவள் வளர்க்கும் கோழியிட்ட நான்கு முட்டைகளை எடுத்துக் கொண்டுபோய் சந்தையில் விற்கப் பாடுபடுகிறாள். அதிலும் இரண்டு முட்டைகள் விழுந்து உடைந்து விடுகின்றன. மீதியிரண்டைப் பாடுபற்று விற்றுக் கிடைக்கும் பணத்தில் ஒரு கொப்பி வாங்குகிறாள். பென்சில் வாங்கப் பணம் போதவில்லை. எனவே வீட்டுக்கு வந்து தாயின் லிப்ஸ்டிக்கை வைத்து எழுதலாம் என்ற எண்ணத்தோடு அதை எடுத்துக் கொண்டு அந்தச் சிறுவனோடு பள்ளிக்கூடத்துக்கு வருகிறாள்.
          அது ஆண்கள் மட்டுமே படிக்கும் பள்ளிக்கூடம். எனவே அவளை வகுப்பில் சேர்த்துக் கொள்ளாது, அங்கிருந்து போய்விடுமாறு பணிக்கிறார் ஆசிரியர். அங்கிருந்து வெளியேறும் அவள் வேறு பாடசாலைகள் தேடித் தனியாகப் பயணிக்கிறாள். பெண்கள் தனியாகப் பயணிப்பதுவும், அவர்கள் பாடசாலைக்குச் செல்வதுவும், லிப்ஸ்டிக் போன்ற ஒப்பனை சாதனங்களை வைத்துக் கொள்வதுவும் தண்டனைக்குரிய குற்றங்களாக அறிவிக்கப்பட்டிருக்குமொரு மண்ணில் எல்லா விதத்திலும் குற்றவாளியாக இருக்கும் சிறுமி, அவ்வாறான கலாசாரக் காவலர்களிடம் சிக்கிக் கொண்டால் என்னென்ன தண்டனைக்குள்ளாவாள்?
            ஒரு மார்க்கத்தின் பெயரைச் சொல்லி, அதில் குறிப்பிடாத சட்டங்களை வைத்துக் கொண்டு, மக்களை ஏய்த்தும், அச்சுறுத்தியும், பலவந்தமாக இணங்கச் செய்து அதன் மூலமாகத் தம் அதிகாரங்களை நிறுவியும், உடன்படாதவர்களுக்கு மிகக் கொடூரமான தண்டனைகளைப் பகிரங்கமாக விதித்தும் ஆப்கானிஸ்தானில் தம்மை நிலைநிறுத்திக் கொண்டது தாலிபான் எனும் அமைப்பு. அத் தாலிபான்கள் உடைத்திருக்காவிட்டாலும் கூட, மௌன சாட்சியாக, காலம் காலமாக அவ்வாறான தண்டனைகளைப் பார்த்தவாறு அங்கு நின்றிருந்த உயரமான புத்தர் சிலைகள், தம்மால் அம் மக்களைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற வெட்கத்தினால் ஒரு காலத்தில் உடைந்தழிந்து போயிருக்கக் கூடும். அவ்வளவு கொடூரங்கள். அவ்வளவு தண்டனைகள்.
            'Buddha Collapsed out of Shame' எனும் இத் திரைப்படமானது, ஆப்கானிஸ்தானில் உலகப் புகழ்பெற்ற புராதன புத்தர் சிலைகளிருந்த மலையருகே, அவற்றின் சிதிலங்களினூடு படமாக்கப்பட்டிருக்கிறது. திரைப்படத்தின் ஆரம்பத்திலும், இறுதியிலும் இச் சிலைகள் குண்டு வைத்துத் தகர்க்கப்படும் நிஜக் காட்சியை இணைத்திருக்கிறார் இயக்குனர் ஹனா மெக்மல்பஃப். அம் மலைக் குன்றுகளில் இன்றும் கூட மக்கள் வறுமைக்கும், அச்சத்துக்குள்ளானபடியும் வாழ்ந்து வருகிறார்கள்.
            அவர்களுள் பக்தாய் எனும் ஐந்து வயது சிறுமி, அப்பாஸ் எனும் அவள் வயதொத்த சிறுவன், மற்றும் தாலிபான் படைச் சிறுவர்கள் ஆகியவர்களைப் பிரதான மற்றும் காத்திரமான கதாபாத்திரங்களாகக் கொண்டு இயக்குனர் ஹனா மெக்மல்பஃப் இயக்கியிருக்கும் 'Buddha Collapsed out of Shame' எனும் இத் திரைப்படமானது, தாலிபான்கள் கை விட்டுச் செல்ல நேர்ந்த பின்னரும் இப் பிராந்தியத்திலுள்ள மக்கள் அன்றாடம் எதிர்கொள்ள நேரும் வறுமை, அடிப்படைக் கல்வி கூட மறுக்கப்படும் பெண்களின் அவலநிலை, ஆணதிகாரம் மற்றும் பெண்ணடிமை நிலைப்பாடு, தொடர்ச்சியான யுத்தங்கள் சிறு மனங்களைப் பாதித்திருக்கும் விதம், அவை அவர்களது விளையாட்டுக்களில் பிரதிபலிக்கும் தன்மை போன்றவை பற்றித் தெளிவாகப் பேசியிருக்கிறது.
            மத்திய ஆப்கானிஸ்தானின் மிகப் பெரிய பிராந்தியமாக இருப்பது பாமியன் பகுதியாகும். 'பிரகாசிக்கும் ஒளியின் இடம்' என அழைக்கப்படும் இந்த பாமியன் பகுதி புராதன புத்தர் சிலைகளுக்கும், பண்டைய எண்ணெய் வர்ண ஓவியங்களுக்கும் பிரசித்தி பெற்றிருந்தது. இங்குள்ள மலைத் தொடரில் செதுக்கப்பட்டுள்ள இரண்டு புத்தர் சிலைகளும் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என தொல்பொருள் ஆய்வியலாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். தாலிபான்கள் இப் பிராந்தியத்தைக் கைப்பற்றியதையடுத்து, 2001 ஆம் ஆண்டு தாலிபான்களின் தலைவரினது கட்டளைக்கேற்ப இச் சிலைகள் பல வாரங்களாக குண்டு வைத்தும், பீரங்கித் தாக்குதல்கள் மூலமும் தகர்க்கப்பட்டு அழிக்கப்பட்டன.
            தாலிபான்கள் மிக இறுக்கமான சட்ட திட்டங்களுடன் 1996 ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தார்கள். இவர்களது ஆட்சியில் அடிப்படை வாத நடவடிக்கைகளோடு, தீவிரவாத நடவடிக்கைகளும் தலைதூக்கியதைக் கண்டு, உலகின் பல பிரதான நாடுகள் தமது எதிர்ப்பினைத் தெரிவித்ததால், ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நிலைகுலைய வேண்டி ஏற்பட்டது. ஆட்சி கைவிட்டுப் போனாலும் கூட, தாலிபான்களும் அவர்களது தீவிரக் கொள்கைகளும் ஒருபோதும் மாறவில்லை. அவர்கள் இன்றும் கூட தம் கொள்கைகளையும் தண்டனைகளையும் மறைமுகமாகப் பரவ விட்டவாறு உலவிக் கொண்டேயிருக்கிறார்கள்.
            இவ்வாறான நிலைமையில், படப்பிடிப்பு கேமராக்களை அனுமதிக்காத அத் தாலிபான்களின் மண்ணிற்கே சென்று அத் தாலிபான்களால் மக்களுக்கு இழைக்கப்படும் கொடூரங்களைப் படம்பிடித்து உலகுக்குச் சொல்ல ஒருவருக்கு எந்தளவு தைரியமும், உயிரச்சமற்ற ஆர்வமும் இருக்கவேண்டும்? அதிலும் பதின்ம வயதிலிருக்கும் ஒரு இளம்பெண் அதைச் செய்யப்போனால் எவ்வளவு ஆபத்துக்களை அவள் எதிர்நோக்குவாள்? அவளது வீட்டில் இதனை எப்படி அனுமதிப்பார்கள்? ஆனால் எல்லாவற்றையும் தாண்டி, சாதித்துக் காட்டியிருக்கிறார் ஈரானைச் சேர்ந்த இளம் பெண் இயக்குனர் ஹனா மெக்மல்பஃப்.
            ஹனாவின் குடும்பத்தினருக்கு இச் சாதனைகள் புதிதல்ல. ஹனாவின் தந்தை மூஸின் மெக்மல்பஃப், தாய் மர்ஸியா மெக்மல்பஃப் மற்றும் மூத்த சகோதரி சமீரா மெக்மல்பஃப் ஆகியோர் தனித்தனியாகவும், குடும்பத்தோடு இணைந்தும் திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர்கள். சர்வதேச விருதுகள் பலவற்றை வென்றவர்கள். இப் பின்னணியிலிருந்து வந்தவர்தான் ஹனா மெக்மல்பஃப் எனும் இளம் பெண் இயக்குனர்.
            ஹனா இதற்கு முன்பும் தனது சிறு வயதில் குறுந் திரைப்படம் மற்றும் ஆவணப்படங்களை எடுத்து சாதனை படைத்தவர். 'Buddha Collapsed out of Shame' எனும் இத் திரைப்படம் இவரது முதலாவது முழு நீளத் திரைப்படம். இத் திரைப்படமும் சர்வதேச திரைப்பட விழாக்கள் எல்லாவற்றிலும் திரையிடப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் பல விருதுகளை வென்ற சாதனைத் திரைப்படம் ஆகும். ஒரு திரைப்படம் அதுவும் இயக்குனரின் முதல் திரைப்படமே ஏறத்தாழ இருபது சர்வதேச விருதுகளை வென்றெடுப்பதென்பது சாதாரணமானதொரு சாதனையல்ல. தொடர்ந்து வரும் அவருடனான நேர்காணல் இன்னும் பலவற்றைத் தெளிவுபடுத்தும்.
- எம்.ரிஷான் ஷெரீப்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக