சனி, 21 ஆகஸ்ட், 2021

தமிழ் திரையுலகின் ஆவணங்கள் கவனிப்பார் அற்ற நிலையில் ! பிலிம் நியூஸ் ஆனந்தனின் அந்தப் பொக்கிஷங்கள் கேட்பாராற்று

May be an image of 3 people and text that says '9 FNE 7 10 11 13 15 17 21 21'
May be an image of 4 people

பாண்டியன் சுந்தரம்  : தமிழ் திரைப்பட வரலாற்று நூல்கள் பலவற்றுக்கும் ‘சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு' என்ற புத்தகம்தான் அடிப்படை ஆவணம்.இது தமிழ்சினிமாவின் பெரிய சொத்து.அதில் அவ்வளவு தகவல்கள், போட்டோக்கள் இருக்கின்றன...
இந்த நூலை,  தொகுத்து அளித்தவர் முதல் தமிழ் திரைப்பட மக்கள் தொடர்பாளர் என்று கொண்டாடப்பட்ட ‘பிலிம் நியூஸ்’ ஆனந்தன். 
இவர் தனக்குத் தானே பெயர் சூட்டிக்கொண்டவர். இவர் தாத்தா கிருஷ்ணசாமி முதலியார் சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ்ப் பேராசியர். அவருக்கு 4 பிள்ளைகள்.
ஆனந்தன் அப்பா ஞானசாகரம், இரண்டாவது மகன். பேரன்கள் எல்லோருக்கும் 80 ஆண்டுகள் கெட்டியான ஆயுள் என்று கணித்துச் சொல்லியிருக்கிறார் ஜோதிடர். ஆனால் அண்ணன் கோபாலகிருஷ்ணனும்  சித்தப்பா மகன் ராமகிருஷ்ணனும் பெரியம்மை கண்டு ஒரே மாதத்தில் அடுத்தடுத்து இறந்துவிட்டார்கள்.
துக்கம் தாளாமல் ரயிலில் கிளம்பி வட இந்தியாவுக்கு யாத்திரை போய் வந்திருக்கிறார் தாத்தா. பிறகு ஆனந்தன் பிறக்க அக்குழந்தைக்கு ஜாதகம் எழுத அப்பா மறுத்துவிட்டார். 

அந்தக் காலத்தில் ஜாதகம் குறித்து கொடுப்பவர் சொல்கிறபடி தான் பெரும்பாலும் பெயர் வைப்பார்கள். எனவே ஆனந்தனுக்கு பெயர் வைக்காமல் ‘மணி’ என்ற செல்லப் பெயரில் அழைத்திருக்கிறார்கள்.
5 வயதானபோது திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்க்க அழைத்து சென்றார் அப்பா. பார்க்க அழகாக இருந்த ஆனந்தனைத் தூக்கி  மடியில் அமர்த்திக்கொண்டார் தலைமையாசிரியர். உன் பெயர் என்ன என்று கேட்டார். ஆனந்தன் கொஞ்சமும் யோசிக்காமல் ‘அனந்த கிருஷ்ணன்’ என்று ஒரு பெயரை சட்டென்று அடித்து விட்டிருக்கிறார்.  அப்பாவுக்குத் தூக்கி வாரிப்போட்டது. பிள்ளைக்குப் பெயர் வைக்காத விஷயத்தை அப்பா சொல்ல, ‘இந்தப் பெயர், மணி என்பதைவிட நல்ல பெயராக இருக்கிறதே! இதையே வைத்துவிடுவோம்’ என்ற தலைமையாசியர்,  அனந்த கிருஷ்ணன் என்றே பதிவு செய்துவிட்டார். பிறகு அதேபெயர் நிலைத்துவிட்டது.
அனந்தகிருஷ்ணன் சுருக்கமாக ஆனந்தன் ஆகிவிட்டார்.
1954-இல் பிலிம்சேம்பர் பத்திரிகைக்காக ஸ்டுடியோவில் நடக்கும் படப்பிடிப்பை பற்றிச் செய்தி சேகரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆனந்தன் திரைக்கலைஞர்களை கேமராவில் படம் பிடித்து வந்தார்.
இவர் கல்லூரித்  தோழன் தேவராஜன் நடத்தி வந்த பிலிம்நியூஸ் பத்திரிகையில் இவர் எடுத்த படங்கள் வெளிவந்தன. இதனால் ஆனந்தன், பிலிம்நியூஸ் ஆனந்தனாக மாறினார்.
1958-இல் எம்.ஜி.ஆர்.,  நாடோடி மன்னன் படம் தயாரித்துக் கொண்டிருந்த நேரம். அலுவலக மேலாளராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். அவரது மேஜையில் நாடோடி மன்னன் பட ஸ்டில்கள் இருந்தன. பத்திரிகைகளுக்கு விளம்பர ஏஜென்ட் மூலமாகத்தான் ஸ்டில்கள் அனுப்புவது அன்றைய வழக்கம்.
“ஐயா பத்திரிகையாளர்கள் அனைவரும் எனது நண்பர்கள், இந்த ஸ்டில்களை அவர்களுக்கு நான் கொடுக்கட்டுமா?” - என்று கேட்க, “பத்திரிகைகளில் ஸ்டில் வரவேண்டும், இதை யார் கொடுத்தால் என்ன நீங்களே கொடுங்களேன்” - எனக் கூறி ஸ்டில்களை ஆனந்தனிடம் கொடுத்தார்.
அடுத்த வாரமே எல்லா பத்திரிகைகளிலும் ஸ்டில்கள் ஜொலிக்க ஆரம்பித்தன. எம்.ஜி.ஆர். ஆனந்தனை அழைத்துப் பாராட்டினார். P.R.O. என்ற திரைப்பட செய்தித் தொடர்பாளர் என்ற புதிய தொழில் ஆரம்பமாவதற்கு காரணமானது இந்த சம்பவம்தான்!
ஆனால் எஸ்.எஸ். ராஜேந்திரன் நடித்த  'நாட்டுக்கொரு நல்லவன்’  படத்தின் டைட்டிலில்தான் ‘பொதுஜனத் தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன்’ என முதன்முதலில் போடப்பட்டது. பெயரைத் திரையில் பார்த்ததும் பத்திரிகைச் சகோதரர்கள் அனைவரும் கை தட்ட ஆனந்தன் கண்கலங்கி அழுதுவிட்டார். இப்படித்தான் திரைப்பட மக்கள் தொடர்பு என்ற துறை தமிழ் சினிமாவில் பிறந்தது.!
அப்போது சென்னை இராயப்பேட்டை நியூ காலேஜ் அருகில் குடியிருந்தார் பிலிம்நியூஸ் ஆனந்தன். அவர் வீட்டுக்கு
சென்று வராத சினிமா நிருபர்களே இருக்க முடியாது. பலதகவல்களுக்காக, பலமுறை  அவரைத் தொந்தரவு
செய்தாலும் ஒவ்வொரு முறையும் முகம் சுளிக்காமல், குறிப்பாக, எந்த பலனையும் எதிர்பாராமல் திரைப்படம் சம்பந்தமான புகைப்படங்கள், செய்திகள், விளக்கங்களைத் தருவார். தமிழ் திரைப்படம் பற்றி எந்த சந்தேகம் என்றாலும், அவருக்கு போன் அடிக்கலாம்.
‘ஆனந்தன்’ என்று மறுமுனையில் அவரே பேசுவார். வீட்டுக்குச் சென்றால், அவருடைய உயிரான மனைவி வாஞ்சையுடன் உபசரிப்பார்கள். சில ஆண்டுகளாக அவர் பார்வைக் கோளாறில் கஷ்டப்பட்டபோது, அந்தம்மா படித்துத் தகவல்களைச் சொல்ல, பிலிம் நியூஸ் ஆனந்தன் அவற்றை ஆவணமாக்கினார்.
இந்த ஆண்டு, இந்தப் படம் வெளியானது எனப் பல தகவல்களை மனிதர் புட்டு, புட்டு வைப்பார். நடிகர்கள், நடிகைகள்,
தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அவரிடம் தகவல்கள் பெறாத நபர்களே
இருக்கமுடியாது. சம்பந்தப்பட்ட பட நிறுவனங்கள், நடித்த நடிகர்களிடம் கூட புகைப்படங்கள் இருக்காது. ஆனால், அவர் பாதுகாத்து வைத்து இருப்பார். எந்த நேரத்திலும் அதைக் கொடுத்து உதவுவார்.
தமிழ் சினிமாவில் முதல் படம் கீசகவதம். அந்தப் படத்தைத் தயாரித்து இயக்கியவர் நடராஜ முதலியார். அவரைப்
படமெடுத்த ஒரே நபர் பிலிம்நியூஸ் ஆனந்தன்தான்.நடராஜ முதலியாரின் மகன் தனது அப்பா போட்டோவை ஒரு
கண்காட்சியில் பார்த்துவிட்டு, அவரிடம் வந்து குமுறி அழுதிருக்கிறார்.
பிலிம்ஸ் ஆனந்தன் இல்லாவிட்டால், தமிழ் சினிமா தகவல்கள், போட்டோக்கள் யாருக்கும் தெரியாமல் போய் இருக்கும். அதேபோல், முதல் பேசும்படமான
காளிதாஸ் நாயகி டி.பி.ராஜலட்சுமி அவர்களையும் படமெடுத்து இருக்கிறார். அவர் கேமராவில் சிக்காத நடிகர், நடிகைகளே அந்தக் காலத்தில் கிடையாது.
அவருடைய படைப்புகள் அரசுடைமை ஆக்கப்பட்டது. பல ஆண்டுகளாக அவர்சேகரித்த தகவல்கள்,
போட்டோக்கள் ராயப்பேட்டை வீட்டில் இருந்து சென்னை தரமணி பிலிம் சிட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
"அப்போது சின்னக் குழந்தை போல அழுதேன். என் குழந்தை என்னை விட்டுப் போவதைப் போல கலங்கினேன்" என்று ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
இப்போதும் பிலிம் நியூஸ் ஆனந்தனின் அந்தப் பொக்கிஷங்கள் கேட்பாராற்று
தரமணி பிலிம் சிட்டியில் கிடக்கிறது என்று கூறப்படுகிறது.
அதை நவீனப் படுத்த வேண்டும். அந்தத் தகவல்களை டிஜிட்டல் ஆக்கவேண்டும். அப்போதுதான் தமிழ்சினிமா வரலாறு இன்னும் பல நுாறு ஆண்டுகள் நிலைத்து நிற்கும். 21-3-2016-இல் காலமான பிலிம் நியூஸ் ஆனந்தனின் ஆசையும் கூட அதுதான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக