வியாழன், 5 ஆகஸ்ட், 2021

பாடப்புத்தகத்தில் சாதிப் பெயர் நீக்கம்: லியோனி விளக்கம்!

minnambalam.com : பாடப்புத்தகத்தில் தமிழறிஞர்களின் பெயர்களுக்குப் பின்னால் இருந்த சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்து தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி விளக்கமளித்துள்ளார்.தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் அச்சிட்டு வெளியிடப்படும் புத்தகங்களில் தமிழ் சான்றோர்களின் பெயர்களுக்குப் பின்னால் இருந்த சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தாத்தா என வரலாற்றில் அறியப்படும் அறிஞர் உ.வே. சாமிநாதய்யர் பெயருக்குப் பின்னால் இருந்த அய்யர் என்ற சொல் நீக்கப்பட்டது.  இதுபோன்று மேலும் சில தமிழறிஞர்களின் பெயர்களுக்குப் பின்னால் இருந்த சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக இன்று விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி

"தமிழறிஞர்களின் பெயர்களில் சாதிப் பெயர் நீக்கப்பட்ட செய்தியை அறிந்து ஒவ்வொரு பாட நூலாக நான் எடுத்து ஆய்வு செய்தேன். இதில் ஏழாம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை என்னும் கவிஞரின் பெயர் நாமக்கல் ராமலிங்கனார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதுபோன்று உ.வே. சாமிநாதய்யர் பெயரும் மாற்றப்பட்டிருந்தது.

ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை என்ற பெயர் மனோன்மணியம் சுந்தரனார் என்று மாற்றப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் 2019 ல் நடைபெற்றுள்ளது. அப்போது பள்ளிக்கல்வித் தறை அமைச்சராக இருந்தவர் செங்கோட்டையன். பாடநூல் கழகத்தின் தலைவராக வளர்மதி இருந்தார். அவர்களின் காலகட்டத்தில் என்சிஇஆர்டிக்கு பரிந்துரை செய்யப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது புதிய செய்தி அல்ல. திமுக ஆட்சிக்காலத்தில் கடந்த ஒரு மாத காலத்துக்குள் நடந்தது போல செய்திகள் வெளியானது உண்மை அல்ல.

இந்த மாறுதல்கள் தொடருமா அல்லது தலைவர்களின் பெயர்களுடன் சாதிப் பெயர் மீண்டும் சேர்க்கப்படுமா என்பது குறித்து முதல்வரும் துறை அமைச்சரும் முடிவெடுப்பார்கள். இதுகுறித்து கல்வியாளர்களை சந்தித்து ஆலோசித்து என்சிஇஆர்டிக்கு பரிந்துரை செய்து முடிவு எடுப்பார்கள்.

இது போன்ற குழப்பங்கள் ஏற்படாமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை என்று கூறினார்.

-பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக