வியாழன், 5 ஆகஸ்ட், 2021

தலித் வீராங்கனைகளாலேயே இந்தியா தோற்றது” - சாதி வெறியால் வந்தனாவின் குடும்பத்தை இழிவுசெய்த இளைஞர்கள்!

kalaingar seythikal :இந்திய மகளிர் அணி அரையிறுதியில் தோல்வியடைந்தவுடன், வந்தனா கட்டாரியாவின் கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதி இளைஞர்கள், வந்தனா கட்டாரியா குடும்பத்தினர் மீது சாதிய வன்மத்தைக் கக்கியுள்ளனர்.ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்தது இந்திய மகளிர் ஹாக்கி அணி. ஆனால், அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய அணி, அடுத்து வெண்கலப் பதக்கத்திற்காக விளையாட உள்ளது.டோக்கியோ ஒலிம்பிக்கில், காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் அடித்து இந்திய மகளிர் ஹாக்கி அணி காலிறுதிக்கு முன்னேற முக்கியப் பங்காற்றியவர் வந்தனா கட்டாரியா.

இந்திய மகளிர் அணி அரையிறுதியில் தோல்வியடைந்தவுடன், வந்தனா கட்டாரியாவின் கிராமத்தைச் சேர்ந்த பிற சாதி இளைஞர்கள் இருவர், வந்தனா கட்டாரியா குடும்பத்தினர் மீது சாதிய வன்மத்தைக் கக்கியுள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ரோஷ்னாபாத் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் வந்தனா கட்டாரியா. இந்திய மகளிர் அணி தோல்வியடைந்ததும், வந்தனா வீட்டின் முன் பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளனர் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள்.

"தலித் வீராங்கனைகளாலேயே இந்தியா தோற்றது” - சாதி வெறியால் வந்தனாவின் குடும்பத்தை இழிவுசெய்த இளைஞர்கள்!

மேலும், வந்தனாவின் குடும்பத்தினரை கிண்டல் செய்ததோடு, பட்டியலினத்தவர்கள் அதிகம் இருந்ததாலேயே இந்திய மகளிர் ஹாக்கி அணி தோல்வியடைந்ததாகவும், அனைத்து விளையாட்டுகளிலிருந்தும் பட்டியலினத்தவர்களை வெளியேற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக வந்தனாவின் சகோதரர் போலிஸாரிடம் புகார் அளித்துள்ளார். அதில், “போட்டி முடிந்ததும் எங்களது வீட்டிற்கு வெளியே பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. நாங்கள் வெளியே சென்று பார்த்தபோது எங்கள் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு ஆதிக்கசாதி இளைஞர்கள் வீட்டிற்கு முன் ஆடிக்கொண்டிருந்தனர்.

அவர்கள் எங்கள் குடும்பத்தை சாதி ரீதியாக அவமதித்தனர். மேலும், அதிக பட்டியலினத்தவர்கள் அணியில் இருந்ததால்தான் இந்தியா தோற்றது எனவும், அனைத்து விளையாட்டுகளிலிருந்தும் பட்டியலினத்தவர்களை வெளியேற்ற வேண்டும் எனவும் கோஷமிட்டனர்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவதூறு செய்த இருவரையும் போலிஸார் கைது செய்துள்ளனர். விளையாட்டுப் போட்டிகளின்போது நாட்டின் ஒருமைப்பாடு சிலாகிக்கப்படும் வேளையில், சிலர் சாதிய வன்மத்தை வெளிப்படுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக