புதன், 18 ஆகஸ்ட், 2021

பிடியை இறுக்கும் தலிபான்; கேள்விக் குறியாகும் ஆப்கான் பெண்களின் நிலை....!

The status of women in question in Afghanistan ....!

நக்கீரன் -பா. சந்தோஷ்  :  ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றிருப்பது, அங்கு வசிக்கும் லட்சக்கணக்கான பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாகியிருக்கிறது. பெண்கள் கல்வி கற்கக் கூடாது; பணிக்குச் செல்லக் கூடாது. ஆண் துணையின்றி வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது.
இவற்றை மீறினால் மரண தண்டனைக் கூட வழங்கப்படும். கடந்த முறை தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த போது, பெண்களுக்கு விதிக்கப்பட்ட சட்டங்கள் இவை.
இந்த அடிமைத்தனங்களில் இருந்து மீண்டு, கடந்த 20 ஆண்டுகளாகச் சுதந்திர காற்றைச் சுவாசித்து வந்த ஆப்கான் பெண்களின் எதிர்காலம் மீண்டும் இருண்ட காலத்தை நோக்கித் திரும்பக் காத்திருக்கிறது தற்போது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கட்டுக்குள் கொண்டு வந்திருப்பதால் அங்கிருக்கும் பெண்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
குறிப்பாக, பெண் உரிமைக்காகப் போராடியவர்களின் நிலை என்னவாகும் என்பதைக் கணிக்கவே முடியாது என்கின்றனர் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.


கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் என முன்னோக்கி வந்த பெண் சமூகம், இனி பின்னோக்கிச் செல்லப் போகிறது என்பதைத்தான் இந்த சம்பவங்கள் உணர்த்துகின்றன.
இம்முறை பெண்களுக்கு சில சுதந்திரங்களை வழங்கப்போவதாக தலிபான் அமைப்பு அறிவித்திருந்தாலும், இது வெற்று அறிவிப்பாகவே இருக்கும் என்கின்றன உலகநாடுகள்.

இந்த சூழலில், வெளிநாடுகளில் வசிக்கும் ஆப்கான் பெண்கள், தாயகத்தில் சிக்கி இருக்கும் பெண்களின் நிலை எண்ணி கண்ணீர் வடிக்கின்றன. பெண்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு உரிமை வழங்க வேண்டும் என தலிபான்களுக்கு சர்வதேச நாடுகள் நிர்பந்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 வருங்காலத்தை நினைத்துக் காத்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான பெண்களுக்கு சர்வதேச நாடுகள் என்ன உதவிச் செய்யப் போகின்றன, மீண்டும் அவர்களால் இயல்பாக பள்ளி சென்று கல்வி கற்க முடியுமா, ஆண்களைப் போல பணிக்குச் செல்ல முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 ஆப்கானிஸ்தானை உலக நாடுகள் கைவிட்ட நிலையில், அந்நாட்டு மக்கள் சொல்லொணா துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர். அமைதி காக்காமல் உலக நாடுகள் இனியாவது தாமாக முன்வந்து ஆப்கான் மக்களை, குறிப்பாக, பெண்கள், குழந்தைகளைக் காக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக