புதன், 18 ஆகஸ்ட், 2021

சுப்பிரமணியன் சாமி : அனைவரும் வரும் அர்ச்சகராகும் சட்டம்.. ஸ்டாலின் செய்தது சட்டப்படி தவறு.. வழக்கு தொடுப்பேன்

 Shyamsundar  -   Oneindia Tamil  :  சென்னை: தமிழ்நாட்டு அரசின் 'அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்' திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடுக்க போவதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
பல வருட முயற்சிக்கு பின், பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பின் தமிழ்நாட்டில் அனைவரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் அமலுக்கு வந்து இருக்கிறது.
அர்ச்சகர் பயிற்சி பெற்ற நபர்கள் பல வருடங்களாக தங்களுக்கு பணி நியமன ஆணை கொடுக்க வேண்டும் என்று போராடி வந்த நிலையில் 3 நாட்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் அனைவரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை கொண்டு வந்தார்.
மயிலாப்பூரில் இருந்து தொடங்கப்பட்டு உள்ள இந்த திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாடு முழுக்க விரிவுபடுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு முழுக்க பல்வேறு கோவில்களில் இதற்கான பணியாணைகள் வழங்கப்பட உள்ளது.


இந்த நிலையில் 'அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்' திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடுக்க போவதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில், திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு சிரமங்களுக்கு இடையில்தான் முதல்வராகி இருக்கிறார்.
அவர் தி.க கட்சியினரின் கைகளில் சிக்கி தவறான முடிவுகளை எடுத்து வருகிறார். அரசு அதிகாரத்தின் வழியாக தவறாக செயல்பட்டு வருகிறார்.
 இதேபோல்தான் கே. கே நகரில் பள்ளி ஒன்றின் விவகாரத்தில் அரசு தவறாக செயல்பட்டது. ஒரே ஒரு ஆசிரியர் செய்த தவறுக்கு பள்ளியையே தவறு செய்தது போல நடத்தினார்.

அந்த பள்ளியை அவர் அரசுடைமையாக்க முயன்றார். நான் தலையிட்டு ஆட்சியை கலைக்க முயற்சிப்பேன் என்றதும்தான் அவர் பின் வாங்கினார். இப்போது புதிதாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளார். பயிற்சி முடித்த 58 பெருக்கும் அவசரமாக பணி நியமன ஆணைகளை வழங்கி உள்ளார். ஸ்டாலினின் இந்த முடிவு தவறானது.


ஒரு கோவிலின் நியமன உரிமைகள் எல்லாம் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அறங்காவலர் மட்டுமே நியமனங்களை மேற்கொள்ள முடியும். அப்படி இருக்கும் போது முதல்வருக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது. இதை தி.கவினர் கொண்டாடுகிறார்கள். இந்து அறநிலைய சட்டம் - 1959ல் இயற்றப்பட்டது. அந்த சட்டத்தை மீறி முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டுள்ளார். முதல்வர் என்பதால் அவர் தனது விருப்பத்திற்கு ஏற்றபடி செயல்களை செய்ய முடியாது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்ஷிதர்களின் உரிமைக்காக போராடியது நான்தான். இதற்காக உச்ச நீதிமன்றம் வரை சென்றேன். அப்போது சிதம்பரம் கோவில் தீட்ஷிதர்களின் கட்டுப்பாட்டில் இருக்கலாம் என்று தீர்ப்பு வந்தது. இவர்களின் உரிமையை அரசு பறித்த போது அதை நான் பெற்றுத்தந்தேன். அதே போல அறங்காவலர் உரிமையில் அரசு தலையிட்டிருக்கிறது. இதற்கு எதிராக சட்ட போராட்டம் மேற்கொள்வேன்.

    M.K.Stalin, I thought, would not repeat his father's mistakes on the issue of Temples. MK got a snub
    from Supreme Court in my Sabhanayagar Natraj Temple case of 2014. In the recent DMK meddling with Temple priests postings, it has become necessary for me to go to Court too.
    — Subramanian Swamy (@Swamy39) August 16, 2021

சட்ட விதிகளை சுட்டிக்காட்டி சென்னை ஹைகோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு தொடுப்பேன். இந்த முடிவை முதல்வர் உடனடியாக திரும்ப பெற வேண்டும். பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் உடனே வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால் வழக்குகளை அவர் சந்திக்க நேரிடும். அவர் இந்து மத கோட்பாடுகளில் தலையிடுகிறார். அதை தடுக்கவே இந்த சட்ட போராட்டத்தில் நான் ஈடுபட இருக்கிறேன் என்று சுப்பிரமணியன் சாமி பேட்டி அளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக