சனி, 28 ஆகஸ்ட், 2021

புதிய மேம்பாலம் இடிந்து விழுந்தது ஏன்?: அமைச்சர் எ.வ.வேலு

மின்னம்பலம் :மதுரை நத்தம் சாலையில் கட்டப்பட்டு வந்த புதிய மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை நத்தம் சாலையில் மதுரை-செட்டிகுளம் இடையே 7.3 கிலோமீட்டர் தொலைவில், 694 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
 இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பாலம் கட்டும் பணி நடைபெற்று வரும், நிலையில், இன்று (ஆகஸ்ட் 28) வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென ஒரு தூணிலிருந்து மற்றொரு தூணுக்கு இணைக்கும் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் சிலர் சிக்கினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், போலீசார் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் இடிபாடுகளில் சிக்கிக் காயமடைந்த இரண்டு தொழிலாளர்களை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி ஆகாஷ் சிங் என்பவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா என்பது குறித்து மீட்புக்குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், “ ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நகாய் நிறுவனம் இந்த பாலத்தைக் கட்டி வருகிறது. சுமார் 7 கிமீ நீளம் கொண்டது இந்த பாலம். இந்த செய்தி தெரிந்ததும் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று ஆட்சியரிடம் கூறியுள்ளேன். என்னென்ன உதவிகள் வேண்டும் எனக் கேட்டு உதவச் சொல்லியிருக்கிறேன்.

ஏற்கனவே கட்டிடங்களை ஆய்வு செய்ய 4 குழு அமைக்கப்பட்டுள்ளது. சாலைப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படும். இயந்திர கோளாறு காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்று இனி நடக்காமல் இருக்க அரசிடம் சொல்லி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

அதுபோன்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கவி, வினிதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக