சனி, 28 ஆகஸ்ட், 2021

தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கமும், டெல்லி பல்கலைக்கழகத்தின் விளக்கமும்; – ஒரு பார்வை

விகடன் - ஆ.பழனியப்பன்  :  தமிழ் எழுத்தாளர்கள் பாமா, சுகிர்தராணி, மறைந்த வங்க எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி ஆகியோரின் படைப்புகளை டெல்லி பல்கலைக்கழகம் நீக்கியதற்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்த நிலையில், அது குறித்து பல்கலைக்கழகம் விளக்கமளித்திருக்கிறது.
தமிழ் எழுத்தாளர்கள் பாமா, சுகிர்தராணி, வங்க எழுத்தாளர் மறைந்த மகாஸ்வேதா தேவி ஆகியோரின் படைப்புகள் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளன. பாமாவின் ‘சங்கதி’, சுகிர்தராணியின் ‘கைம்மாறு’, ‘என்னுடல்’ ஆகிய படைப்புகளும் வங்க எழுத்தாளர் மறைந்த மகாஸ்வேதாதா தேவியின் ‘திரௌபதி’ என்ற படைப்பும் டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்தன. அவற்றைப் பல்கலைக்கழகம் திடீரென நீக்கியிருக்கிறது.
‘இந்தப் படைப்புகளைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கும் முடிவை பல்கலைக்கழகத்தின் மேற்பார்வைக்குழு எடுத்திருக்கிறது. இந்த முடிவுக்கு, பல்கலைக்கழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்விக்குழு உறுப்பினர்கள் 15 பேர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். ஆனால், அதையும் மீறி இந்தப் படைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத் துறையைச் சேர்ந்த பேராசிரியர்களுக்குத் தெரியாமலேயே இரவோடு இரவாக படைப்புகள் நீக்கப்பட்டுள்ளன’ என்று செய்திகள் வெளியாகியுள்ளன. பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழறிஞர்களும், எழுத்தாளர்களும், அரசியல் தலைவர்களும் நீக்கப்பட்ட இந்தப் பாடங்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்..... >தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், `கல்விப்புலத்தின் தனித்தன்மையையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கவேண்டிய பல்கலைக்கழக நிர்வாகங்களும் பாடத்திட்டக் குழுக்களும் தங்கள் பொறுப்பிலிருந்து பிறழ்ந்து ஆளுங்கட்சியின் நிர்பந்தங்களுக்கு அடிபணியும் இழிநிலைக்குத் தாழ்ந்துவிடக் கூடாதென வலியுறுத்துகிறோம்.
எழுத்தாளர் பாமா
எழுத்தாளர் பாமா

எழுத்தாளர்கள் மகாஸ்வேதா தேவி, பாமா, சுகிர்தராணி ஆகியோரது படைப்புகளை பாடத்திட்டத்திலிருந்து நீக்குவதென்ற டெல்லி பல்கலைக்கழகத்தின் முடிவை ஏற்க முடியாது. அந்தப் பாடங்கள் பாடத்திட்டத்தில் தொடர வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

“எழுத்தாளர்கள் பாமா, கவிஞர் சுகிர்தராணி ஆகியோரின் எழுத்துகளை கட்சி அரசியல், மதவாதக் கண்ணாடிகள் அணிந்து பார்க்கும் வழக்கத்தைக் கைவிட்டு, அவற்றை டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்த்திட வேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். “டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்தாளர் பாமாவின் ‘சங்கதி’, தமிழ்க் கவிஞர் சுகிர்தராணியின் ‘கைம்மாறு’, ‘என்னுடல்’ ஆகிய மொழியாக்கப் படைப்புகளை அந்தத் துறைப் பேராசியர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லாமலேயே, மேற்பார்வைக்குழுவின் ஆலோசனையின்பேரில் பல்கலைக்கழக நிர்வாகம் நீக்கியிருப்பது ஒருதலைபட்சமான முடிவு. இது எவ்வகையிலும் ஏற்க முடியாத செயலாகும்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

பெண்கள் உரிமை, ஒடுக்கப்பட்டோர் விடுதலை, மானுட மேன்மை குறித்து பல படைப்புகளை வழங்கிவரும் எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணி ஆகியோரின் எழுத்துகளைக் கட்சி அரசியல், மதவாதக் கண்ணாடிகள் அணிந்து பார்க்கும் வழக்கத்தைக் கைவிட்டு, அவற்றை டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்த்திட வேண்டும் எனப் பல்கலைக்கழக நிர்வாகத்தையும் ஒன்றிய அரசையும் வலியுறுத்துகிறேன்” என்று மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார்.

கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து டெல்லி பல்கலைக்கழகம் விளக்கம் ஒன்றை வெளியிட்டது. அதில், “மேற்பார்வைக்குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில்தான் பி.ஏ ஆங்கிலம் 5-வது செமஸ்டருக்கான பாடத்திட்டத்தை டெல்லி பல்கலைக்கழகம் ஏற்றுக்கொண்டது. பாடத்திட்டத்தின் உள்ளடக்கம் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை. சம்பந்தப்பட்ட அனைவரின் ஆலோசனைகளைப் பெற்றும், அனைத்துத் தளங்களிலும் கலந்துரையாடல் நடத்தியும் பாடத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பாடத்திட்டத்தின் இறுதி உள்ளடக்கத்தை பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறை வடிவமைத்தது. பல்கலைக்கழகத்தின் நிர்வாகக்குழுவால் அமைக்கப்பட்ட அதிகாரம் பெற்ற மேற்பார்வைக்குழு, கலந்தாலோசித்தும், ஆங்கிலத்துறையின் தலைவர் பரிந்துரைகளை ஏற்றும், பாடத்திட்டத்தை இறுதி செய்தது. பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.du.ac.in என்ற இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.

டெல்லி பல்கலைக்கழக அறிக்கை
டெல்லி பல்கலைக்கழக அறிக்கை

பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும்விதமாக பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சாதி, இனம், மதம் ஆகியவற்றைத் தாண்டி தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற பல்வேறு அறிஞர்களின் படைப்புகள் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. கல்வியில் சிறந்து விளங்க சாதி, மத வேறுபாடுகளுக்கு அடிபணியத் தேவையில்லை என்று பல்கலைக்கழகம் நம்புகிறது.

ஒரு மொழிப் பாடத்திட்டத்தில் இடம்பெறும் இலக்கியப் படைப்புகள் எந்தவொரு தனிநபரின் உணர்வுகளையும் புண்படுத்தாத வகையில் இருக்க வேண்டும். முற்காலத்திலும், தற்காலத்திலும் சமூகத்தின் உண்மைத்தன்மைகளை வெளிப்படுத்தும் பேதமற்ற இலக்கியப் படைப்புகள் தேவை என்பதை பல்கலைக்கழகம் உணர்கிறது. எழுத்திலும் கருத்திலும் பாடத்திட்டங்களை உள்வாங்கும் இளம் தலைமுறையினருக்கு இத்தகைய உள்ளடக்கிய அணுகுமுறை முக்கியமானது” என்று அந்த அறிக்கையில் டெல்லி பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

டெல்லி பல்கலைக்கழகத்தின் விளக்கத்தை விமர்சித்திருக்கிறார், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன்.

“டெல்லி பல்கலைக்கழகம் தனது பாடத்திட்டத்திலிருந்து மகாஸ்வேதா தேவி, பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகளை நீக்கியது குறித்து எனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தேன். தமிழக முதல்வர் மற்றும் பலரும் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக டெல்லி பல்கலைக்கழகம் விளக்கக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அந்த விளக்கம் ஓர் உயர் கல்வி நிறுவனத்தின் தகுதியைப் பிரதிபலிப்பதாக இல்லை. நேரடியாக இந்தப் படைப்புகள் ஏன் நீக்கப்பட்டன என்று அந்த அறிக்கை கூறவில்லை. ஆனாலும் அவர்களின் நோக்கத்தை வெளிப்படுத்தவும் தவறவில்லை.

அதில், நான்கு காரணங்களைச் சொல்கிறார்கள். ஒன்று, பல பிரபல அறிஞர்களின் படைப்புகளைக் கொண்டு வரப்போகிறோம் என்கிறார்கள். பாடத்திட்டத்துக்கோ, படைப்புக்கோ, பிரபலம் என்பது ஒரு தகுதியாக ஒருபோதும் இருக்க முடியாது. இப்படி ஒரு தகுதியை பல்கலைக்கழகம் பேசுவது அறிவுத்துறையின் வீழ்ச்சியையே காட்டுகிறது.

சுகிர்தராணி
சுகிர்தராணி
Ram Nada

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

இரண்டாவது காரணம், நல்லிணக்கத்தையும், பன்முகத் தன்மையையும் பிரதிபலிக்க வேண்டுமென்பது. நல்லிணக்கம் எப்படி உருவாகும்? ஒடுக்குமுறைகள் நிறைந்த சமூகம் நல்லிணக்கம்கொண்டதாக இருக்க முடியுமா? சுகிர்தராணி, பாமா ஆகிய இரு ஆளுமைகளின் படைப்புகளும் சாதிய ஒடுக்குமுறையை, பாலின ஒடுக்குமுறையைப் பற்றிப் பேசுபவை. பன்மைத்துவம் என்பது எல்லோரையும் உள்ளடக்கியதாக அமைவது; பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், சமூகக் குழுக்களின் இருப்பை, அடையாளத்தை, பங்களிப்பை, வரலாற்றை அங்கீகரித்து சமத்துவத்தை உறுதி செய்வதாகும். பெண்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான இடம் மறுக்கப்படுவது எப்படி பன்மைத்துவ பாரம்பர்யத்தைப் போற்றுவதாக இருக்க முடியும்? இந்தக் கேள்வியை பொது சமூகத்தின் முன்வைத்து உரையாடல் நிகழ்த்தும் ஆற்றல்மிக்க படைப்பாளிகள் இவர்கள். இந்தியக் கல்விப் புலத்தில் தேவைப்படும் முக்கியமான பகிர்வுகள் இவை. ஆகவே இரண்டாவது காரணமும் இற்று விழுகிறது.

மூன்றாவது, யாரையும் புண்படுத்தக் கூடாதாம். ஒடுக்குமுறைக்கு ஆளாகிறவர்கள் புண்பட்டுவிடக் கூடாது; நியாயம், நீதி மறுக்கப்படுபவர்கள் புண்பட்டுவிடக் கூடாது என்றாலும் புரிந்துகொள்ள முடியும். யாரையும் என்றால் என்ன பொருள்? ஒரு சமூகக் குழுவை சார்ந்தவர்கள் பிற சமூகக் குழுக்கள் மீது வேறுபாடு பாராட்டினால், உயர்வு தாழ்வு கற்பித்தால் யாரும் புண்படக் கூடாது என்று நடுநிலை வகிக்க முடியுமா… அது உண்மையில் நடுநிலையா… சுகிர்தராணி, பாமா படைப்புகள் யாரை புண்படுத்துவதாகப் பல்கலைக்கழகம் கருதுகிறது?

நான்காவது, கடந்தகாலத்தையும், நிகழ்காலத்தையும் உண்மையில் பிரதிபலிக்க வேண்டுமாம். சமூகத்தில் பாலின ஒடுக்குமுறை இருப்பது உண்மையில்லையா… ஒடுக்கப்பட்ட சமூகத்து பெண்கள் இரட்டை ஒடுக்குமுறையை எதிர்கொள்வது உண்மை இல்லையா… இன்னமும் கையால் மலம் அள்ளும் கொடுமை முடிவுக்கு வரவில்லை என்பது உண்மையில்லையா… இந்த உண்மைகளையே சுகிர்தராணியும் பாமாவும் பேசியுள்ளனர். உண்மையில், உண்மை பேசுவதுதான் டெல்லி பல்கலைக்கழகத்துக்குப் பிரச்னைபோல.

டெல்லி பல்கலைக்கழகம் நீக்கியிருக்கும் பாடங்களில் சுகிர்தராணி எழுதிய இரு கவிதைகள், பாமாவின் `சங்கதி’ நாவலிலிருந்து சில அத்தியாயங்கள் ஆகியவை அடக்கம். நீக்கப்பட்ட சுகிர்தராணியின் கவிதைகளில் ஒன்று, கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் வலி நிறைந்த வாழ்க்கை குறித்தது. மற்றொன்று, இயற்கையும் பெண் உடலும் சுரண்டப்படுவது பற்றியது. பாமாவின் `சங்கதி’ நாவல் ஒடுக்கப்பட்ட பட்டியல் சாதிப் பெண்களின் போராட்டத்தை அடிப்படையாகக்கொண்டது. பாலினமும் சாதியும் ஒருசேர ஒடுக்கப்பட்ட பெண்களைத் துரத்துவதை உயிர்ப்போடு பேசுகிற படைப்பு அது.

டெல்லி பல்கலைக்கழகம்
டெல்லி பல்கலைக்கழகம்

காலத்தின் கண்ணாடியாக உண்மைநிலையைப் பிரதிபலிக்கும் இந்தப் படைப்புகளை நீக்கியதுதான் ஒருதலைப்பட்சமான மற்றும் ஜனநாயகத்தை மறுக்கிற முடிவு. ஆனால், டெல்லி பல்கலைக்கழகம் அறிக்கையில் வார்த்தைக்கு வார்த்தை ஜனநாயகம் பற்றிப் பேசுவதுதான் நகைச்சுவை. ஆகவே, டெல்லி பல்கலைக்கழகம் தந்துள்ள விளக்கம் ஏற்புடையது அல்ல. உள்நோக்கத்தோடு இப்படைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. காலகாலமாக இடம் மறுக்கப்பட்டவர்களின் குரல் எழாமல் மீண்டும் நசுக்கப்படுவதன் பிரதிபலிப்பே இந்த நீக்கம். பொதுச் சமூகத்தில் அழுத்தமான சலனங்களைத் தங்களது படைப்புகள் மூலம் ஏற்படுத்திய இவர்களின் படைப்புகள் மறுபடியும் சேர்க்கப்பட வேண்டும் என்பதே உறுதியான கோரிக்கை. இதற்கான குரல்களை ஒன்று சேர்ப்போம். அனைத்து திசைகளிலிருந்தும் பேரோசையாக இந்தக் குரல்கள் எதிரொலிக்கட்டும்” என்று சு.வெங்கடேசன் கூறியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக