வியாழன், 19 ஆகஸ்ட், 2021

சிலிண்டர் விலை - மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை!

 மின்னம்பலம் : சிலிண்டர் விலையைக் குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று சட்டப் பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
சிலிண்டர் விலை மாதம்தோறும் உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த எட்டு மாதங்களில் 150 ரூபாய்க்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மேலும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டு தற்போது 875 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விலை உயர்வால் ஏழை மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் சூழலில் நேற்று, பாமக தலைவர் ஜி.கே.மணி இது தொடர்பாகச் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
சிலிண்டர் விலை உயர்வால் ஏழை எளிய மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்த விலை உயர்வைக் குறைக்க ஒன்றிய, மாநில அரசுகள் முயற்சி செய்ய வேண்டும் என்று கூறினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “எரிவாயு சிலிண்டரின் மூலம் தமிழக அரசுக்கு எந்த வருமானமும் வரவில்லை. விலையைத் தீர்மானிப்பது எல்லாம் ஒன்றிய அரசும், எண்ணெய் நிறுவனங்களும்தான்.

சிலிண்டர் விலையைக் குறைக்க ஒன்றிய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தும். ஆனால், விலையைக் குறைப்பதற்கான அதிகாரம் மாநில அரசிடம் இல்லை” என்று கூறினார்.

அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, சிலிண்டர் விலை உயர்வு தொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பிரதமரிடம் பேசி சிலிண்டர் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுப்பார் என்று கூறியதால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

-பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக