ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

ஆப்கானிஸ்தான் விவகாரம்- ஜி7 நாடுகள் நாளை மறுநாள் ஆலோசனை

 மாலைமலர்  :ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் சுதந்திரம், கல்வி, வேலை உரிமைகள் குறித்து பல்வேறு நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
லண்டன்:   ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள். ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தலிபான்களின் ஆட்சிக்கு பயந்து அந்நாட்டு மக்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
அவர்கள் விமானத்தில் மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்து ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
வெளிநாடுகளில் வாழும் ஆப்கான் மக்கள் தாங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை என்றும் கூறி வருகின்றனர்.
காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்
ஆப்கானிஸ்தானின் நிலை குறித்து அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட 21 நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கை ஒன்றில், ஆப்கானிஸ்தானின் நிலையை உலக நாடுகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அங்குள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் சுதந்திரம், கல்வி, வேலை உரிமைகள் குறித்து கவலையாக உள்ளது என்றும் தெரிவித்தன.

அதே சமயம் தலிபான் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில், பெண்கள் சுகாதாரத் துறையிலும், பிற துறைகளிலும் வேலை செய்யலாம் என்றும் இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கான உரிமைகளை வழங்க தலிபான் உறுதி பூண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஆலோசனை செய்ய ஜி-7 நாடுகளின் மாநாடு இந்த வாரம் கூட்டப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் ஏற்கனவே அறிவித்திருந்தனர். தற்போது போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ஆகஸ்ட் 24ம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஜி-7 நாடுகளின் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

‘ஜி7 தலைவர்களுடன் ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து அவசர ஆலோசனை நடத்துவதற்காக கூட்டத்தைக் கூட்ட உள்ளதாக போரிஸ் ஜான்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து பாதுகாப்பான வெளியேற்றங்களை உறுதி செய்வதற்கும், மனிதாபிமான நெருக்கடியை தடுப்பதற்கும், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஆதரவளிப்பதற்கும் சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து செயல்படுவது இன்றியமையாதது’ என்றும் போரிஸ் ஜான்சன் கூறி உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக