திங்கள், 16 ஆகஸ்ட், 2021

ஆப்கானிஸ்தான்! அச்சத்தில் தப்பி ஓடும் மக்கள்!.. விமானத்தில் தொங்கிக்கொண்டு சென்ற 3 பேர் கீழே விழுந்து உயிரிழப்பு

 மாலைமலர் :ஆப்கானிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்... விமானத்தில் தொங்கிக்கொண்டு சென்ற 3 பேர் கீழே விழுந்து பலி
காபூலில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானப்படை விமானம் ஒன்றை சுற்றி பலர் ஓடி வருவதும், அதன் மீது அமர்ந்திருப்பதுமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்... விமானத்தில் தொங்கிக்கொண்டு சென்ற 3 பேர் கீழே விழுந்து பலி
புறப்பட்டு செல்லும் விமானத்தில் ஏற முயற்சிக்கும் மக்கள்
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். நேற்று தலைநகரம் காபூலை  கைப்பற்றிய அவர்கள், அதிபர் மாளிகையையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நாட்டின் முழு கட்டுப்பாடும் தலிபான்கள் கையில் வந்ததையடுத்து, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் வெளியேறி வருகின்றனர். தலிபான்கள் ஆட்சியில் என்ன நடக்குமோ? என்ற பீதியில் ஏராளமான ஆப்கான் மக்களும் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் விமான நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் காபூல் விமான நிலையத்தை தலிபான் அமைப்பு மூடியுள்ளதுடன் விமான சேவைகளையும் நிறுத்தி வைத்துள்ளது.


இந்நிலையில் அங்கிருந்து குறைந்த அளவிலான விமானங்களே இயக்கப்படுகின்றன. அந்த விமானங்களில் ஏறி எப்படியாவது தப்பி செல்ல வேண்டும் என பலர் முண்டியடிக்கின்றனர். இதற்காக உயிரைப் பயணம் வைக்கின்றனர். காபூலில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானப்படை விமானம் ஒன்றை சுற்றி பலர் ஓடி வருவதும், அதன் மீது ஏறுவதுமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இதேபோல் அமெரிக்க விமானப்படை விமானத்தில் ஏற இடம் கிடைக்காததால் சிலர் தொங்கிக்கொண்டு பயணம் செய்துள்ளனர். இவ்வாறு பயணித்தவர்களில் 3 பேர் விமானத்தில் கீழே விழுந்து உயிரிழந்தனர். இது தொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது. நெஞ்சை பதற வைக்கும் இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.

   நக்கீரன் - பா. சந்தோஷ்  :  தலைநகர் காபூலை கைப்பற்றியதை அடுத்து, ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானும் தலிபான்களின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் வருகிறது. இதனிடையே, அதிபர் அஷ்ரஃப் கனி தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிகாரம் தலிபான்கள் வசம் சென்றிருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முக்கிய நகரங்களை கைப்பற்றி வந்த தலிபான்கள் இறுதியாக தலைநகர் காபூலிலும் நுழைந்தனர். தலிபான்கள் கை ஓங்கிய நிலையில் அதிகாரத்தை அவர்களுக்கே விட்டு தர, அந்நாட்டின் அதிபர் அஷ்ரஃப் கனி ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, அமைதியான முறையில் ஆட்சி மாற்றத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
நாட்டின் நிர்வாகத்தைக் கவனிக்கும் இடைக்கால அரசின் தலைவராக முன்னாள் அமைச்சர் அலி அகமது ஜலாலி அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானை விட்டு இம்மாத இறுதியில் அமெரிக்க படைகள் முற்றாக வெளியேற உள்ளனர். இந்நிலையில், குந்தூஸ், கந்தஹார் உள்ளிட்ட முக்கிய நகரங்களை மின்னல் வேகத்தில் கைப்பற்றிய தலிபான்கள் இறுதியில் தலைநகர் காபூலையும் தங்கள் வசம் கொண்டு வந்து அதிகாரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.  

பழமைவாத தலிபான்கள் வசம் அதிகாரம் வந்துவிட்டதால் ஆப்கானிஸ்தான் மக்களில் பலர் அச்சமடைந்து, மூட்டை முடுச்சிகளுடன் பாகிஸ்தானில் தஞ்சம் புக முற்பட்டுள்ளனர். இதற்காக பாகிஸ்தானை ஒட்டிய ஆப்கானிஸ்தான் எல்லையில் ஏராளமானோர் காத்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
The people of Afghanistan fleeing in fear of the conservative regime!

இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளைப் பாதுகாப்பாக மீட்க அதிபர் பைடன் ஆயிரம் வீரர்களை அங்கு அனுப்பியுள்ளார். காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சில ஹெலிகாப்டர்கள் வந்த நிலையில், அதில் ஏறி பல அதிகாரிகள் வெளியேறிவிட்டனர். மேலும், வெளியே செல்லும் முன் முக்கிய ஆவணங்கள் பலவற்றை அமெரிக்க அதிகாரிகள் எரித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


1996- ஆம் ஆண்டு முதல் 2001- ஆம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வந்தது. 2001- ஆம் ஆண்டு நியூயார்க்கில் உலக வர்த்தக மையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, அதற்கு பதிலடி தரும் விதமாக அமெரிக்கா படைகள் ஆப்கானிஸ்தானில் நிலைக்கொண்டன. 20 ஆண்டுகள் ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் இறந்த நிலையில், பல்லாயிரக்கணக்கான கோடி அமெரிக்க டாலர்களும் இழப்பு ஏற்பட்டது.


இதைத் தொடர்ந்து, இம்மாத இறுதியில் படைகளைத் திரும்பப் பெற அமெரிக்க அதிபர் பைடன் முடிவு செய்துள்ளார். இந்தச் சூழலில் தான் பழமைவாத தலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை மீட்டெடுத்துள்ளனர். இதையடுத்து, அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கனி நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.  அவருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் வேறு நாட்டு சென்றுவிட்டதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்காக, ஏர் இந்தியா நிறுவனம் சிறப்பு விமானத்தை இயக்கியது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியிருக்கும் நிலையில், அங்குள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சென்றது. அங்கிருந்து 129 பேருடன் அந்த விமானம் டெல்லி வந்தடைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக