புதன், 11 ஆகஸ்ட், 2021

ஓ.பி.சி. (27% ) இடஒதுக்கீடு மாநில அரசுகளுக்கே அதிகாரம் .. பாஜகவை பணியவைத்த மாநில அரசுகள்

 நக்கீரன் செய்திப்பிரிவு  :  ஓ.பி.சி. பிரிவினர் யார் என்பதை வரையறுக்க மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா மக்களவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் 671 சாதியினர் பயனடைவார்கள் எனத் தெரிகிறது. இது பற்றி விரிவாகப் பார்ப்போம்!
கடந்த 2018- ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டத்தின் 102- வது திருத்தத்தின் மூலம் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காண்பதற்கு மாநில அரசுகளுக்கு இருந்த அதிகாரம் நீக்கப்பட்டது.
மத்திய அரசின் நடவடிக்கை மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்கும் செயல் எனக்கூறி எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இவை தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காண்பதற்கு மாநில அரசுகளுக்கு இருந்த அதிகாரத்தை நீக்கியது.
இச்சூழலில் 27% இட ஒதுக்கீட்டுக்கான இதர பிற்படுத்தப்பட்டோர்  (ஓ.பி.சி.) பட்டியலில் எந்தெந்த சாதியினரைச் சேர்ப்பது என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை மீண்டும் மாநில அரசுகளுக்கே வழங்கிட அரசியலமைப்பு 127 ஆவது சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நேற்று (10/08/2021) கொண்டு வரப்பட்டது.



செல்ஃபோன் ஒட்டுக்கேட்பு விவகாரத்தினால் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் முற்றிலுமாக முடங்கிய நிலையில், இதர பிற்படுத்தப்பட்டோர் மசோதா எந்தவித எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றியது. இந்த மசோதாவிற்கு அனைத்துக் கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர். இதற்கு ஆதரவாக 386 பேர் வாக்களித்தனர். ஒருவர் கூட மசோதாவுக்கு எதிராக வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஓ.பி.சி. வகுப்பினரை அடையாளம் காண்பதற்கு மாநில அரசுகளுக்கு இருந்த அதிகாரத்தைப் பறித்த மத்திய அரசு மீண்டும் அதனை மாநிலங்களுக்கே வழங்க முன்வந்ததற்கு மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்திற்கான இட ஒதுக்கீடு பிரச்சனையே காரணமாகக் கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினரை சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பின் தங்கியவர்கள் என வகைப்படுத்தி, அவர்களுக்கு 16% இட ஒதுக்கீடு வழங்கும் வகையில், அம்மாநில சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு சட்டம் கொண்டு வந்தது.

இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் கடந்த மே மாதம் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் கடந்த 2018- ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 102- வது அரசியல் சட்டத் திருத்தத்தின் படி சமூகம் மற்றும் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கே இருப்பதாக அறிவித்தது.
 
இதன் தொடர்ச்சியாக, தற்போது இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் எந்தெந்த சாதியினரைச் சேர்ப்பது என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை மீண்டும் மாநில அரசுகளுக்கு வழங்கும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதற்கு ஆதரவாக வாக்களித்த தி.மு.க. உள்ளிட்ட அனைத்து தமிழக கட்சிகளும் 50% இட ஒதுக்கீட்டு உச்சவரம்பை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
 
ஓ.பி.சி. பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டைத் தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசுகளிடமே வழங்க வேண்டும் என்று தி.மு.க. வற்புறுத்தியது. இட ஒதுக்கீட்டு உச்சவரம்பு 50 சதவீதம் என உள்ள நிலையில், தமிழகத்தில் சட்டத் திருத்தத்தின் மூலமாக 69 சதவீதம் என்ற நடைமுறை உள்ளது.

இச்சூழலில் இட ஒதுக்கீட்டு உச்சவரம்பை அந்தந்த மாநில சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அடுத்தகட்டமாக எழுந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக