திங்கள், 23 ஆகஸ்ட், 2021

வெளி மாநிலங்களுக்கு 1000 பஸ்கள் இயக்கம்- 4 மாதங்களுக்கு பிறகு பயணிகள் மகிழ்ச்சி

 மாலைமலர் : சேலத்தில் இருந்து பெங்களூரு, திருப்பதிக்கு 100 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதேபோல ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பஸ் சேவை இன்று தொடங்கி உள்ளது.
வெளி மாநிலங்களுக்கு 1000 பஸ்கள் இயக்கம்- 4 மாதங்களுக்கு பிறகு பயணிகள் மகிழ்ச்சி
கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக தமிழகத்தில் இருந்து கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
மேலும் மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் போன்ற பொதுப்போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்பட்டு இருந்தன. நீண்ட தூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டன.
அந்த மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.
இதற்கிடையில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் மே, ஜூன் மாதங்களில் தீவிரம் அடைந்தது. அதனை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் காரணமாக கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
ஜூலை மாதத்தில் இருந்து படிப்படியாக பாதிப்பு குறையத்தொடங்கின. அதனால் பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், சுற்றுலா தலங்கள், உயிரியல் பூங்காக்கள் தவிர அனைத்தும் படிப்படியாக திறக்கப்பட்டன. பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள்.

இந்த நிலையில், மேலும் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்று முதல் கடற்கரை, பூங்காக்கள், திரையரங்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டன.

தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு போக்குவரத்து சேவையும் தொடங்கி உள்ளன. இன்று அதிகாலை 5 மணி முதல் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து 4 மாதங்களுக்கு பிறகு இன்று தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ரெயில்களில் முன்பதிவு பயணத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருப்பதால் கூட்டம் நிரம்பி வழிகிறது. தற்போது வெளிமாநிலங்களுக்கு பஸ் சேவை தொடங்கி இருப்பதால் ஆர்வத்துடன் பொதுமக்கள் பயணம் செய்தனர்.

தமிழகத்தில் சென்னை, சேலம், தர்மபுரி, கோவை, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து பெங்களூரு, திருப்பதி, மைசூர், ஐதராபாத், விஜயவாடா உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு 1,000 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தேவைக்கேற்ப பஸ் சேவையை அதிகரிப்பதாகவும் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து கர்நாடகா, ஆந்திராவுக்கு 173 அரசு விரைவுப் பஸ்கள் இயக்கப்படுகிறது.

ஆந்திராவுக்கு செல்வதற்காக தயாராக இருக்கும் அரசு பஸ்

பெங்களூருக்கு 121 பஸ்களும், திருப்பதிக்கு 52 பஸ்களும் இயக்கப்படும். பயணிகள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி பயணம் செய்ய வேண்டும் என்று விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.

இதேபோல விழுப்புரம் போக்குவரத்து கழகத்தின் சார்பாக சென்னையில் இருந்து பெங்களூரு, திருப்பதிக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. கோயம்பேட்டில் இருந்து திருப்பதிக்கு திருவள்ளூர் வழியாக 60 பஸ்களும், மாதவரத்தில் இருந்து தடா காளஹஸ்தி வழியாக 50 பஸ்களும் இயக்கப்படுகிறது. நெல்லூருக்கு 40 பஸ்களும் இயக்கப்பட்டன.

சென்னையில் இருந்து சித்தூருக்கு 10 பஸ்களும் இயக்கத் தயாராக இருந்தன. வேலூரில் இருந்து பெங்களூரு, திருப்பதிக்கு 50 பஸ்களும், திருவண்ணாமலையில் இருந்து திருப்பதி பெங்களூருக்கு 50 பஸ்களும், விழுப்புரத்தில் இருந்து பெங்களூரு, திருப்பதிக்கு 50 பஸ்களும் இயக்கப்படுகிறது.

சேலத்தில் இருந்து பெங்களூரு, திருப்பதிக்கு 100 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதேபோல ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பஸ் சேவை இன்று தொடங்கி உள்ளது.

நெல்லூர், கர்ணூல், ஐதராபாத் ஆகிய இடங்களில் இருந்து 150 பஸ்கள் சென்னைக்கு இயக்கப்படுகிறது. கர்நாடக மாநிலம் மைசூர், பெங்களூருவில் இருந்து 50 பஸ்கள் இயக்கப்படுகிறது.

கோயம்பேட்டில் பஸ் சேவை இன்று தொடங்கிய போதும் பஸ்களில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. 50 சதவீத பயணிகளுடன் பஸ்கள் இயக்கப்பட்டன. முதல் நாள் என்பதால் முழு இருக்கைகளும் நிரம்பவில்லை.

கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு இன்று அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. முதல் கட்டமாக 250 பஸ்கள் ஓசூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருக்கோவிலூர், கோவை, திருச்சி, மதுரை, கும்பகோணம், காஞ்சிபுரம், சென்னை, ஊட்டி ஆகிய இடங்களுக்கு இயக்கப்பட்டன.

தமிழகத்தின் வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் உள்ள வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு, கோலார் தங்கவயல் ஆகிய ஊர்களுக்கு 23 பஸ்கள் இயக்கப்பட்டன.

சேலத்தில் இருந்து பெங்களூருக்கு வழக்கமாக 42 அரசு பஸ்கள் இயக்கப்படும். இதில் 34 பஸ்கள் இன்று காலை முதல் இயக்கப்பட்டன. 8 குளிர்சாதன வசதி உடைய பஸ்கள் இயக்கப்படவில்லை.

இதே போல மேட்டூரில் இருந்து மாதேஸ்வரன் மலை, கொள்ளேகால் வழியாக 18 பஸ்கள் வழக்கமாக மைசூருக்கு இயக்கப்படும். இன்று காலை இதில் 10 பஸ்கள் இயக்கப்பட்டன. காலை 6 மணிக்கு பின்பு இந்த பஸ்கள் மாநில எல்லையை கடந்து தமிழகத்துக்குள் வந்தது. இதுவரை இரு மாநிலங்களின் எல்லையான அத்திப்பள்ளி வரை மட்டுமே இருமாநில பஸ்களும் இயக்கப்பட்டு வந்தன.

இதனால் கர்நாடகாவில் இருந்து தமிழகம் செல்வோர், அத்திப்பள்ளியில் இறங்கி அங்கிருந்து தமிழக பஸ்களையும், தமிழகத்தில் இருந்து செல்வோர் ஓசூர் எல்லையில் இறங்கி அத்திப்பள்ளிக்கு வந்து கர்நாடக பஸ்களையும் பிடித்து பயணித்து வந்தனர்.

தற்போது இரு மாநிலங்கள் இடையே மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கி உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல இரு மாநிலங்களுக்கு இடையே தனியார் பஸ்கள், ஆம்னி பஸ்களையும் இயக்க பஸ் உரிமையாளர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இதற்கான முன்பதிவும் தொடங்கப்பட உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக