ஞாயிறு, 11 ஜூலை, 2021

Sulli Deals: முஸ்லிம் பெண்களை விற்க உருவாக்கப்பட்ட ஓப்பன் சோர்ஸ் செயலியால் அதிர்ச்சி

Sulli Deals

BBC : கீர்த்தி துபே - பிபிசி செய்தியாளர் : "சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணை கேலி செய்வது மக்களுக்கு எளிதான விஷயம். இந்த கேலி பெரும்பாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியதாக இருக்கிறது. ஆனால் முஸ்லிம் பெண்களை துன்புறுத்துவதற்காக கீழ்மையின் அனைத்து வரம்புகளும் உடைக்கப்படுகின்றன. இது மிகவும் ஆபத்தானது. சில சமயங்களில் நான் ஏன் சமூக ஊடகங்களில் இருக்க வேண்டும் என்று யோசிக்க ஆரம்பிக்கிறேன். நான் பேசுவதையும் எழுதுவதையும் நிறுத்திவிடவேண்டுமா?

எங்களை சாடும் வசவு சொற்கள், பெண்மையின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, இஸ்லாமுக்கு எதிரான அச்சுறுத்தலும் கூட."

இதை நஸ்ரின் (பெயர் மாற்றப்பட்டது) கூறும்போது, அவருடைய குரலில் பயத்தை விட கோபமே அதிகம் தெரிகிறது.

ஒரு நாள் காலை நீங்கள் எழும்போது, உங்கள் புகைப்படங்களும் தனிப்பட்ட தகவல்களும் இணையத்தில் 'ஏலம் விடப்படுவதைப் பார்க்கிறீர்கள். சிலர் உங்களைப் பற்றி ஆபாசமான கருத்துகளைக் கூறி, உங்களை பேரம் பேசுகிறார்கள். அப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

இந்த மாத தொடக்கத்தில் இதேபோன்ற ஒன்று நடந்தது. பல முஸ்லிம் பெண்களின் சமூக ஊடக படங்களுடன் ஒரு ஓப்பன் சோர்ஸ் செயலி உருவாக்கப்பட்டது. இந்த செயலியின் பெயர் 'சுல்லி டீல்ஸ்". (Sulli Deals)

'சுல்லி' என்பது முஸ்லிம் பெண்களை குறிப்பிட்டுப் பயன்படுத்தப்படும் ஒரு கீழ்த்தரமான சொல்.

இந்த செயலியில் பயன்படுத்தப்படும் முஸ்லிம் பெண்களின் தகவல்கள், ட்விட்டரில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. இதில் இருந்த 80க்கும் மேற்பட்ட பெண்களின் படங்கள், அவர்களின் பெயர்கள் மற்றும் ட்விட்டர் கணக்குகள் பற்றிய விவரங்கள் நீக்கப்பட்டுள்ளன.

இந்த செயலியில் முதலில் எழுதப்பட்டிருந்த வாசகம் - 'உங்கள் சுல்லி டீலை கண்டுபிடியுங்கள்'.

இதைக் கிளிக் செய்தால், ஒரு முஸ்லிம் பெண்ணின் படம், பெயர் மற்றும் ட்விட்டர் கணக்கு, செயலியின் பயனருடன் பகிரப்பட்டது.

முஸ்லிம் பெண்கள், பெண் பத்திரிகையாளர்கள் மீதான இந்த தாக்குதலை இந்திய செய்தி ஆசிரியர்கள் கூட்டமைப்பு, வன்மையாக கண்டித்துள்ளது. பெண் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதற்கு, சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களை பயன்படுத்தும் வழி கவலை அளிக்கிறது என்று அது குறிப்பிட்டுள்ளது.

இந்த ஓபன் சோர்ஸ் செயலி, 'கிட்ஹப்' எனும் தளம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆயினும் இது திங்கள்கிழமை (ஜூலை 5) மாலை இது கிட்ஹப்பால் அகற்றப்பட்டது.

பிபிசி சில கேள்விகளுடன் மின்னஞ்சல் வழியாக கிட்ஹப்பை தொடர்பு கொண்டது. அதற்கு பதிலளித்த கிட்ஹப், "இந்த விவகாரத்தில் செயலியை உருவாக்கியவரின் கணக்கை நாங்கள் முடக்கியுள்ளோம். செய்திகளின் அடிப்படையில், இந்த விஷயம் தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. துன்புறுத்தல், பாகுபாடு மற்றும் வன்முறையை ஊக்குவிக்கும் உள்ளடக்கம், கிட்ஹப்பின் கொள்கைகளுக்கு எதிரானது. இது எங்கள் கொள்கைகளை மீறுவதாகும்," என்று கூறியது.

கிட்ஹப்பின் தலைமை செயல் அதிகாரி எரிகா ப்ரெசியா, இந்தச் செயலியை உருவாக்கியவரின் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக ட்வீட் செய்துள்ளார். இருப்பினும், இவை அனைத்தும் எப்படி நடந்தன என்பதை அவர் விளக்கவில்லை.

'அடுத்து என்ன நடக்கும் எனத் தெரியவில்லை'

இந்த ஆன்லைன் துன்புறுத்தலுக்குப் பிறகு நஸ்ரின் (பெயர் மாற்றப்பட்டது) மிகவும் பயந்துபோயுள்ளார். 'என் பெயரை எழுத வேண்டாம். அடுத்து என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை,"என்று அவர் சொன்னார்.

இந்த செயலியில் புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்கள் ஏலத்தில் வைக்கப்பட்ட முஸ்லிம் பெண்களில் இவரும் ஒருவர்.

Sulli Deals: முஸ்லிம் பெண்களை விற்க உருவாக்கப்பட்ட செயலி

பட மூலாதாரம், Getty Images

"ஒரு ட்வீட்டிலிருந்து இந்த தகவல் எனக்குக் கிடைத்தது. 'நான் ஒரு நல்ல டீலை தேடிக்கொண்டிருந்தேன். அதைக் கண்டுபிடித்தேன். அது என் தவறு அல்ல' என்று ஒரு பயனர் ஒரு பெண்ணின் ஸ்கிரீன் ஷாட் உடன் இந்த செயலி பற்றி எழுதினார் ," என்று நஸ்ரின் பிபிசியிடம் தெரிவித்தார்.

"நான் இந்த செயலிக்குள் சென்றபோது, 'எனக்கு ஒரு சுல்லியை கண்டுபிடி' (FIND ME A SULLI) என்று எழுதப்பட்டிருந்தது.

"நான் அதைத் க்ளிக்செய்ததும், 'இன்றைய உங்கள் டீல்' என்ற தலைப்பின்கீழ் என் படம் மற்றும் ட்விட்டர் கணக்குத் தகவல் இருந்தது."

"இதைப் பார்த்ததும் எனக்குப் பயத்தைக்காட்டிலும் கோபமே அதிகமாக வந்தது. ஏனெனில் இப்படி நடப்பது இது முதல் முறை அல்ல.

முன்னதாக, எனது சில முஸ்லிம் பெண் நண்பர்களின் படங்களைப் பகிர்ந்த, ஒரு ட்விட்டர் பயனர்,'இவர்கள் விற்பனைக்கு' என்று எழுதினார். ஆனால் இந்த முறை துன்புறுத்தலின் நிலை ட்விட்டரைத் தாண்டிவிட்டது என்று நான் திகிலடைந்தேன். எங்களை துன்புறுத்த ஒரு முழுமையான தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை."

"முஸ்லிம் பெண்கள் பேசினால், அவர்களுக்கு பாலியல் வல்லுறவு அச்சுறுத்தல்கள் வருகின்றன. இது போல அவர்கள் ஏலம் விடப்படுகிறார்கள்."

"நீங்கள் எவ்வளவு வலிமையாக இருந்தாலும், இந்த வகையான தாக்குதல் அதாவது உங்கள் படம், தகவல் பகிரங்கப்படுத்தப்படும்போது, அது உங்களை பயமுறுத்துகிறது. உங்களுக்கு மன உளைச்சல் தருகிறது. முதன்முறையாக இத்தகைய துன்புறுத்தல்களை எதிர்கொண்ட பல பெண்கள் தங்கள் கணக்குகளை முடக்கிவிட்டனர். அவர்கள் அந்த அளவிற்கு பயந்துவிட்டார்கள்," என்று நஸ்ரின் தெரிவித்தார்.

ஆனால் இவ்வளவு கோபமும் பயமும் இருந்தபோதிலும், காவல் துறையில் புகார் செய்ய நஸ்ரின் தயாராக இல்லை.

காவல்து றையிடம் புகார் அளிப்பது தொடர்பாக கேட்கப்பட்டபோது, "பல பெண்கள் இதற்கு பலியாகியுள்ளனர். சட்டரீதியான வழி என்னவாக இருக்கும் என்று நாங்கள் யோசித்து வருகிறோம். ஆனால் உண்மையைச் சொல்வதானால், காவல் துறையினர் மீது எனக்கு அதிக நம்பிக்கை இல்லை. முன்னதாக ஈத் நேரத்தில் நான் என் தோழிகளுடன் இருந்தபோது இதேபோன்ற ஒன்று நடந்தது. அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. முஸ்லிம் பெண்களிடம் எதைவேண்டுமானாலும் சொல்வதும் , பின்னர் தப்பிப்பதும் எளிதானது," என்று அவர் சொன்னார்.

Sulli Deals செயலி உருவாக்கப்பட்டது எப்படி?

சிறுபான்மை சமூகங்களின் பெண்கள் இணையதளத்தில் அதிக அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

சிறுபான்மை சமூகங்களின் பெண்கள் இணையதளத்தில் அதிக அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

இந்த செயலி குறித்த தகவலை கண்டுபிடிக்க பிபிசி முயற்சித்தது. இந்தச் செயலி ஜூன் 14 அன்று தொடங்கப்பட்டது என்பதைக் கண்டறிந்தோம். ஜூலை 4-5 க்கு இடையில் மிக அதிகமாக இது பயன்பாட்டில் இருந்தது. மென்பொருள் நிரல்மொழிக் குறியீட்டு வழங்குநர் தளமான கிட்ஹப்பில் உருவாக்கப்பட்ட ஓப்பன் சோர்ஸ் சமூக செயலி இது.

ஓப்பன் சோர்ஸ் தளங்கள் என்றால் என்ன, அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஒரு CODER (குறியீடுகளை உருவாக்குபவர்) மூலம் தெரிந்து கொள்ள பிபிசி முயன்றது.

உண்மையில், ஓப்பன் சோர்சில் நிரல்மொழிக் குறியீடுகள் பொதுவெளியில் வைக்கப்படுகிறது. இதில் நிரல்மொழிக் குறியீட்டாளர்கள் புதிய அம்சங்களைச் சேர்க்கலாம் அல்லது வைரஸை அகற்றலாம்.

இருப்பினும், இந்த குறியீடுகளின் மூலம் செய்யப்படும் மாற்றங்கள் செயலியில் பிரதிபலிக்கிறதா இல்லையா என்பதன் மீதான கட்டுப்பாடு, செயலியின் வடிவமைப்பாளரிடம் உள்ளது.

வடிவமைப்பாளரிடமிருந்து இந்த செயலி டெலீட் ஆகிவிட்டால், டொமைன் பெயர் அமைப்பு வழங்குநரிடம் இந்த செயலி தொடர்பான தகவல்கள் இருக்கும்.

Sulli Deals செயலி இப்போது கிட்ஹப்பில் இல்லை. யார் இதை வடிவமைத்தார்கள் என்பது பற்றிய எந்தத் தகவலும் இல்லை.

'இந்துக்களும் குரல் எழுப்ப வேண்டும்'

தனது நண்பர்களிடமிருந்து செயலியின் ஸ்கிரீன் ஷாட்டைப் ஃபாரா கான் (பெயர் மாற்றப்பட்டது) பெற்றபோது, அவர் தனது வேலை தொடர்பாக வெளியே இருந்தார்.

Social media

பட மூலாதாரம், Social media

"ஜூலை 5 ஆம் தேதி காலையில் உங்கள் படம் ஓர் இணையதளத்தில் இருப்பதாக என் நண்பர்கள் என்னிடம் சொன்னபோது எனக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. இப்போது படங்கள் அகற்றப்பட்டுள்ளன; தளமும் மூடப்பட்டுள்ளது. ஆனால் என் படத்துடன் 'விற்பனைக்கு' (for sale) என்ற குறிச்சொல்லைப் பார்த்து மிகவும் கலக்கம் அடைந்தேன்.

உண்மையைச் சொன்னால், என்ன நடந்தது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, " என்று அவர் கூறுகிறார்.

" என்னைப் பற்றிய கூடுதல் தகவல்கள் அவர்களிடம் இருக்குமா என்ற எண்ணங்கள் என்னை பயமுறுத்தின. அடுத்த கட்டமாக என்னைப் பற்றிய கூடுதல் தகவல்களும் இது போன்ற சில தளங்களில் பகிரங்கப்படுத்தப்படுமா என்று அஞ்ச ஆரம்பித்தேன்.

இதை நினைத்து நான் மேலும் பயந்தேன். ஆனால் தங்கள் உரிமைகளுக்காக எழுதும், பேசும் முஸ்லிம் பெண்கள் மிரட்டப்பட வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம் என்பதை அப்போது நான் உணர்ந்தேன். "

" முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், எங்களின் இந்தப் போராட்டத்தில் தாராளவாத இந்துக்கள், தவறை எதிர்த்து குரல் எழுப்ப வேண்டும் என்று நான் நினைக்கிறேன்."

"சரியான ஒன்றுக்காக, மதம் கடந்து, அனைவரும் நேருக்கு நேர் வந்து தவறை சுட்டிக்காட்ட வேண்டும். நானும் என்னைப் போன்ற பல பெண்களும் ட்வீட் செய்தோம். மகளிர் ஆணையம், டெல்லி காவல்துறை என்று டேக் (tag) செய்து ட்வீட் செய்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைச் செய்கிறவர்களுக்கு காவல்துறை மற்றும் சட்டத்த்தின் மீது எந்த பயமும் இல்லை. எதுவும் நடக்காது என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்." என்று ஃபாரா கான் குறிப்பிட்டார்.

நஸ்ரின் போலவே, ஃபாராவும் போலீசில் புகார் அளிக்க பயப்படுகிறார்.

"எனது பணி காரணமாக இப்போது நான் நகரத்திற்கு வெளியே இருக்கிறேன், உண்மையைச் சொல்வதானால், நான் காவல்துறையிடம் செல்வதா வேண்டாமா என்று கூட இன்னும் முடிவு செய்யவில்லை," என்கிறார் அவர்.

காவல் துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

இந்த துன்புறுத்தலுக்கு எதிராக சில பெண்கள், டெல்லி மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர். மும்பை போலீசார் கிட்ஹப் மற்றும் ட்விட்டரிடமிருந்து தகவல்களை நாடினர்.

செயலியில் பகிரப்பட்ட முஸ்லிம் பெண்களில் சிலர் டெல்லி மற்றும் வேறு சில நகரங்களைச் சேர்ந்தவர்கள்.

இது தொடர்பாக நாங்கள் டெல்லி போலீஸை தொடர்பு கொண்டோம். ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது குறித்து டெல்லி மகளிர் ஆணையம் கேட்டுள்ளது. டெல்லி சைபர் போலீஸ் பிரிவு இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை ஒன்றைப் பதிவு செய்துள்ளது.

மும்பை போலீசிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் துன்புறுத்தலுக்கு ஆளான மும்பையைச் சேர்ந்த ஃபாத்திமா, ஜூலை 5 ம் தேதி சாகினகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, சாகினகா காவல் நிலையம் , ட்விட்டர் இந்தியா மற்றும் கிட்ஹப் ஆகியவற்றுக்கு கடிதம் எழுதி, செயலியை உருவாக்கியவர்கள் மற்றும் அதை ட்விட்டரில் பகிர்ந்தவர்கள் பற்றிய தகவல்களை கோரியுள்ளது.

கிட்ஹப்பில் இருந்து, ஐபி முகவரி, (IP address) இடம் மற்றும் செயலி எப்போது உருவாக்கப்பட்டது என்பது குறித்த தகவல்களை போலீசார் கேட்டுள்ளனர். இதனுடன்,செயலியை உருவாக்க பயன்படுத்தப்பட்ட மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணும் கேட்கப்பட்டுள்ளது.

இது தவிர, ட்விட்டரில் இருந்து சில ஆட்சேபகரமான ட்வீட்களை நீக்குமாறு கூறியுள்ள போலீஸார், அந்த ட்விட்டர் கணக்கை இயக்கும் நபர்களின் தரவையும் நாடியுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக