ஞாயிறு, 18 ஜூலை, 2021

பெண் கைதிகளுக்கு ஏன் பார்வையாளர்கள் வருவதில்லை..?

aramonline.in - பீட்டர் துரைராஜ் ; கைதிகளை சித்திரவதை செய்வதில், இந்தியாவில் உத்திரப் பிரதேசத்திற்கு அடுத்த  மாநிலமாக  தமிழ்நாடு உள்ளது ! இப்போதுள்ள சிறைகள், அடிமை ஆட்சி கால சிறைகளை விட மோசமாக உள்ளன. எமர்ஜென்சி சிறைக்கொடுமைகளை ஆராய்ந்த ‘இஸ்மாயில் ஆணையத்தின்’ பரிந்துரைகள் இன்னும்  அமலாக்கப்படவில்லை..!

‘சிறைகளில் தொடரும் சித்திரவதைகள்’ என்ற பொருளில்,  வாழ்நாள் சிறைவாசியாக இருந்த தியாகு, சமீபத்தில் நடைபெற்ற  கருத்தரங்கில் பேசினார். “மன்னன் காலத்தில் யானைக்காலால் இடற வைத்து மரண தண்டனை அளிக்கப்பட்டது; தேர்க்காலில் ஏற்றியும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதற்கு மாற்றாகத்தான்   இப்போதைய சிறைகள் இருக்கின்றன. சமூக வாழ்க்கையிலிருந்து பிரித்து ஒருவரை சிறைவாசியாக ஆக்குகிறோம். சிறைவாசியாக இருப்பதுதான் தண்டனை. எனவே சிறைவாசிகளுக்கும் வரம்புகளுக்கு உட்பட்ட உரிமைகள் உண்டு. அதனை பொதுச் சமூகம் உணரவேண்டும். சிறைவாசியாக இருப்பதனாலேயே ஒருவன் அடிமை அல்ல.

செய்த குற்றத்திற்காக ஒருவரைப் பழி வாங்குவது, வஞ்சம் தீர்ப்பது என்பது சிறைகளின் கூறுகளில் ஒன்று. அதே சமயம்  ‘திருத்துவது’,  ‘மறு வாழ்வு’ அளிப்பது போன்ற பணிகளும் சிறைகளுக்கு உண்டு. சிறைச்சாலை என்பது ‘சமுதாயத்தின் நுரையீரல்’ ஆகும். நல்ல காற்றை உள்வாங்கி, கெட்ட காற்றை வெளியேற்றுவது நுரையீரலின் வேலை. நுரையீரல் பாதிக்கப்பட்டால் ஒருவனின் மொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படும். அதேபோல சிறைச்சாலைகள் சரிவர செயல்படவில்லை என்றால்,  ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கப்படும். எனவே சமுதாயத்தின் நலன் காக்கப்பட வேண்டுமானால் சிறைச்சாலைகள் சரிவர செயல்பட வேண்டும்.

ஒரு தாயின் வயிற்றில் பத்து மாதத்திற்கு மேல் சிசு இருந்தால், தாய்க்கும் ஆபத்து; குழந்தைக்கும் ஆபத்து. அதே போல ஒருவரை நீண்டகாலம் சிறைவாசியாக வைத்து இருப்பது சமூகத்திற்கு ஆபத்து.

எட்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒருவரை  சிறையில் வைத்திருக்க கூடாது என்று முல்லா ஆணையம் பரிந்துரைத்தது. வி.ஆர்.கிருஷ்ண அய்யர்,  எத்தகைய குற்றத்தைச் செய்திருந்தாலும், ஒருவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை  போதுமானது (Gestation Period) என்றார்.

விடுதலை செய்யப்பட்டு விடுவோம்‘  என்ற நம்பிக்கைதான் ஒரு சிறைவாசியை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. அந்த நம்பிக்கை இல்லை என்றால், சிறைவாசி நடைபிணமாகிவிடுவான்.

ஒருவன் குற்றவாளியா என்பதை தீர்மானிக்கும்போது (Conviction),  அவன் செய்த குற்றத்தை (crime)  மட்டும் பார்க்க வேண்டும்; அவனை தண்டிக்கும்போது (Punishment) குற்றத்தையும் பார்க்க வேண்டும்; குற்றவாளியையும் பார்க்க வேண்டும் (குற்றவாளியின் வயது, குடும்பச் சூழல், முன் நடத்தை,குற்றம் நடந்த பின்னணி போன்றவை). ஒருவனை விடுதலை செய்யும்போது அந்த மனிதனை மட்டுமே பார்க்க வேண்டும்,குற்றத்தைப் பார்க்கத் தேவையில்லை. (சிறையில் அவன் நடத்தை, குடும்பச் சூழல், வயோதிகம், உடல்நலம் போன்றவை). அப்படிப் பார்த்தால், 34 வருடங்களாகச்  சிறையில் இருக்கும்  84 வயது மாதையன் – ஐ (சந்தனக் கடத்தல் வீரப்பனின் சகோதரர்),  விடுதலை செய்வதால் சமூகத்திற்கு என்ன பாதிப்பு வரப் போகிறது ?

இந்த நாட்டின் தேசப்பிதா என்று அழைக்கப்படும்  காந்தியடிகளைக் கொன்றகோபால் கோட்சே  பத்தே ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டான். விடுதலை செய்தது மகாராஷ்ராவை அப்போது ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு. உச்சநீதிமன்ற தீர்ப்பு, சட்டம், மாநில அரசு  என அனைத்தும் சாதகமாக இருந்தாலும், ராஜீவ் காந்தி வழக்கில் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழுபேர்  விடுதலை செய்யப்படவில்லை.

இறக்கும் நிலையில் உள்ள ஒருவரை அவரது வீட்டிற்கு அனுப்பும் அதிகாரம் சிறை அதிகாரிக்கு உண்டு். கர்நாடகா மாநிலத்தில்  இதைச் செய்கிறார்கள். இறக்கும்நிலையில் உள்ள ஒருவர்,  வீட்டில் கடைசித் தண்ணீரை குடிக்கட்டும் என்ற கொள்கையைப் பார்க்கிறார்கள். Pleasure of dying at home என்று இதைச் சொல்லுவார்கள். கொலை வழக்குப் பிரிவான 302 ன் கீழ், பல இசுலாமியர்கள் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில்  உள்ளனர். பல எளிய மக்கள்  நீண்ட காலம் சிறைவாசிகளாக தமிழ்நாட்டின் பல்வேறு சிறைகளில் உள்ளனர். இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

1967 ல் முதல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற போது, முதலமைச்சராக இருந்த அண்ணா கைதிகளை முன்விடுதலை செய்ய உத்தரவிட்டார். கேரளாவின் இஎம்எஸ் நம்பூதிரிப்பாடு அரசில்,  சிறைத்துறை அமைச்சராக இருந்த வி.ஆர்.கிருஷ்ண அய்யர், ஏழு ஆண்டுகள் சிறையில் இருந்த அனைவரையும் முன்விடுதலை செய்ய உத்தரவிட்டார். தமிழ்நாட்டில் சாதிக் பாஷா சிறைத்துறை அமைச்சராக இருந்த போது பத்து ஆண்டுகள் சிறையில் இருந்த அனைவரையும் விடுதலை செய்துவிடுவார். அதிமுக அரசில் அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமியும் கைதிகளை முன்விடுதலை செய்வதில் எந்த தயக்கமும் காட்ட மாட்டார்.

கைதிகளை முன்விடுதலை செய்ய  பரிந்துரை செய்ய அமைக்கப்பட்ட அறிவுரைக் கழகங்கள் முறையாகக் செயல்படுவதில்லை. இப்படி இருக்கும் நிலைமாறி, பாரபட்சமற்ற முறையில் கைதிகளை முன்விடுதலை செய்வது தொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். ” என்றார் தியாகு.

“பெண் சிறைவாசிகளைக்  காண அவர்களின் குடும்பங்களில் இருந்து பார்வையாளர்கள் வருவதில்லை.சிறை செல்லும் பெண்கள் குடும்பத்திலிருந்து துண்டிக்கப்பட்டவர்களாக ஆகும் அபாயம் உள்ளது. அவர்கள் சிறையில் இருந்து வெளியேறினால் கூட, அவர்கள் சென்று தங்க வாய்ப்பற்ற சூழல் நிலவுகிறது. இதனால் இறுதி காலம் வரையில் சிறையில் இருந்துவிட நினைக்கும் பெண்களும் உள்ளனர் ” என்ற அதிர்ச்சி தகவலை பேராசிரியர் .மார்க்ஸ்  பகிர்ந்து, கவலைப்பட்டார்.

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேசும்போது “இந்தியாவில் 1350 சிறைகள் உள்ளன. தமிழ்நாட்டில் 141 சிறைகள் உள்ளன. இந்தியாவின் மக்கள் தொகையில் 14.2 சதம் முஸ்லிம்கள் உள்ளனர். தேசியக் குற்ற ஆவணக்காப்பக 2019 ஆண்டு அறிக்கையின்படி, தண்டனைக் கைதிகளாக முஸ்லிம்கள் 16.6 % உள்ளனர். விசாரணைக் கைதிகளாக 18.7 % உள்ளனர். தடுப்புக் காவலில் 35.8 % உள்ளனர். அதாவது ,இந்தியாவில் அதிக அளவில் சிறுபான்மையினரும், பட்டியலினத்தைச் சார்ந்தவர் தலித்துகளும்  சிறைகளில் உள்ளனர்.

வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், பேராசிரியர்கள் என பலரை இந்த அரசு பல மாதங்களாக சிறையில் வைத்துள்ளது. இதனால் நல்ல வழக்கறிஞரை வைத்து தங்கள் வழக்குகளில் வாதிட  முடியாமல் போவதால் அவர்கள் தண்டிக்கப்படக் கூடிய வாய்ப்பு உள்ளது. சங்கராச்சாரியார் கைதியாக இருந்தபோது, மலம் கழிக்க வாழை இலை கொடுத்தார்களே ! வருணாமசிரம முறை  சிறைகளிலும் நிலவுகிறது. ஐரோப்பிய நாடுகளில் திறந்த வெளிச் சிறைகள் உண்டு. அங்கு கைதிகளுக்கு தாம்பத்திய உரிமை உண்டு; கைதிகள் தங்கள் மனைவியரோடு இருக்கலாம்” என்றார்.

வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் பேசும்போது “சிறைக்குள் அனுப்பும்போது, கைதிகளை நிர்வாணமாக்கி சோதனை செய்கிறார்கள். இதை தவிர்த்து விமான நிலையங்களில் உள்ளது போல ஸ்கேன் மூலமாக சோதனைச்  செய்யலாமே ! கைதிகளுக்கு தனிமை மன அழுத்தம் விலக பொழுதுபோக்கு வசதிகள், நூலகம், உளவியல் ஆலோசனை போன்றவை செய்துதர வேண்டும்.

பெண் சிறைவாசிகளுக்கு பொதுவாக அடிப்படைத் தேவைகள் கூட கிடைப்பதில்லை. அவர்கள் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும். மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் துணி சரிவர கிடைப்பதில்லை” என்றார்.

‘காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் என்ற அமைப்பு இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.” காவல் சித்திரவதைக்கு எதிரான ஐ நா அவையின்  இணக்கவிதிகளில் இந்தியா கையெழுத்து இட்டுள்ளது. ஆனால் அதற்கான ஏற்பினை (Ratification) இன்னமும் வழங்கவில்லை. அதாவது காவல் சித்திரவதைக்கு எதிரான சட்டத்தை, இந்தியா இன்னமும் இயற்றவில்லை”  என்றார் இந்த கருத்தரங்க நிகழ்வில் முனைப்பாகச் செயல்பட்ட மக்கள் கண்காணிப்பகத்தைச் சார்ந்த ஆசீர் ரஞ்சிதம்.

கட்டுரையாளர்; பீட்டர் துரைராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக