ஞாயிறு, 18 ஜூலை, 2021

கேரளா வரதட்சணை மறுப்பு திருமணம் ..

வரதட்சணை வேண்டாம்; பெண்ணே போதும்!

minnambalam :

கேரள மாநிலத்தில், திருமணம் முடிந்ததும் வரதட்சணை வேண்டாம் என்று மணப்பெண் அணிந்திருந்த 50 சவரன் நகைகளை, பெண் வீட்டாரிடமே திரும்ப ஒப்படைத்துள்ளார் மணமகன் கடவுளின் நகரம், படித்தவர்கள் அதிகமுள்ள மாநிலம் என்று கேரளா பெயர் பெற்றிருந்தாலும், இங்குதான் சர்வ சாதாரணமாக 100 சவரன், 200 சவரன் என்று வரதட்சணை வாங்கப்படும் பழக்கமும் உள்ளது. வரதட்சணையில் பல தற்கொலை சம்பவங்களும் நடந்ததை மறுக்க முடியாது. கடந்த மாதத்தில், 100 சவரன் நகை, 1.5 ஏக்கர் நிலம், டொயோட்டா யாரிஸ் கார் ஆகியவை வரதட்சணையாக கொடுத்தும், கார் வாங்கிக் கொடுத்ததில் மகிழ்ச்சி இல்லை. காருக்குப் பதிலாக பணம் வேண்டுமென்று கேட்டு தினமும் துன்புறுத்திய கணவனின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார் விஷ்மாயா என்ற மருத்துவ மாணவி.

இவரைத் தொடர்ந்து, அர்ச்சனா, சுசித்திரா ஆகிய இரு பெண்களும் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டனர். இந்த மூன்று சம்பவங்களும் இந்திய அளவில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வரதட்சணைக்கு எதிராக கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தினார்.

இந்த நிலையில் அதே மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரின் வரதட்சணைக்கு எதிரான புதிய முயற்சி அனைவரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது.

ஆலப்பபுழா மாவட்டத்தின் நூரநாடு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (28). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுருதிக்கும் (21) திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நிச்சயத்தின் போது தனக்கு வரதட்சணை வேண்டாம், உங்கள் மகளை மட்டும் அனுப்பி வைத்தால் போதும் என மணமகன் சதீஷ் கூறியிருந்தார்.

இவர்களுக்கு கடந்த வியாழக்கிழமை அங்குள்ள ஒரு கோயிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. அப்போது மணப்பெண் சுருதி தனது பெற்றோர் சீதனமாக கொடுத்த 50 சவரன் நகைகளை அணிந்து வந்திருந்தார்.

இதையடுத்து திருமணம் முடிந்த பிறகு சுருதி அணிந்திருந்த அனைத்து நகைகளையும் கழற்றி திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் முன்னிலையில் மணப்பெண்ணின் பெற்றோரிடம் சதீஷ் ஒப்படைத்தார். வரதட்சணை விவகாரத்தில் அனைவருக்கும் முன் உதாரணமாக செயல்பட்ட சதீஷின் செயலுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

-வினிதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக