வியாழன், 15 ஜூலை, 2021

காமராஜர் படித்தவர்தான் ! பெருந்தலைவரை படிக்காத மேதை என்பது பார்ப்பன தந்திரம்

Karthikeyan Fastura : காமராஜரை பற்றி சொல்லும் போது படிக்காத மேதை என்பார்கள்.
ராஜாஜி காலத்தில் பார்ப்பன ஊடகங்கள் தொடங்கி வைத்திருந்த தந்திரம். என்னமோ எழுதப்படிக்கவே தெரியாத ஆள் மாதிரியான ஒரு தோற்றத்தை உருவாக்கி இருப்பார்கள். உண்மையில் அவர் பள்ளிப்படிப்பை முடிக்காதவர் என்றாலும் எண்ணற்ற நூல்களை படித்திருக்கிறார். ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவராக இருந்திருக்கிறார். இந்தியும் அவருக்கு தெரிந்திருக்கிறது. அதனால் தான் அகில இந்திய காங்கிரஸ்க்கு தலைவராக இருந்திருக்கிறார். அவரது அறையில் நூலகம் அளவிற்கு ஏராளமான நூல்கள் இருந்திருக்கின்றன. இவருக்கு பின் வந்த முதல்வர்களில் அறிஞர் அண்ணா மட்டுமே பட்டப்படிப்பை படித்தவர்.
கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்று எவரும் பள்ளிப்படிப்பை தாண்டியவர்கள் அல்லர். ஆனால் நிறைய வாசிப்பு கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். கலைஞர் பல நூல்களை எழுதியவர். பள்ளிப்படிப்பை தாண்டாதது இவர்களின் ஆளுமையில் ஒரு பிரச்சனையாகவே இல்லை.
காமராஜருக்கு மட்டும் ஏன் இந்த தோற்றம் என்பதை சிந்தித்து அந்த பிம்பத்தை உடைப்பது அவசியம். படித்ததலைவர் தான் காமராஜர்.
 
 மாலைமலர் :காமராஜரின் சொந்த ஊரான விருதுநகரில் உள்ள அவரது நினைவு இல்லம், மணிமண்டபம் ஆகியவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
பெருந்தலைவர் காமராஜருக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை
சென்னை:   மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் ஆண்டு தோறும் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
காமராஜரின் 119-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் சென்னை அண்ணாசாலை பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள காமராஜரின் திருஉருவ சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சிலைக்கு கீழே அவரது உருவப்படமும் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

இன்று காலை அரசின் சார்பில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதும் காமராஜரின் உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

காமராஜர் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அவருடன் எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதிமாறன், அமைச்சர்கள் பொன்முடி, வெள்ளக்கோவில் சாமிநாதன், அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், தா.மோ.அன்பரசன், சேகர் பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துணை சபாநாயகர் பிச்சாண்டி, தமிழச்சி தங்கபாண்டியன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் ஜெயசீலன் மற்றும் உயர் அதிகாரிகள் மரியாதை செலுத்தினார்கள்.

காமராஜரின் சொந்த ஊரான விருதுநகரில் உள்ள அவரது நினைவு இல்லம், மணிமண்டபம் ஆகியவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

நூற்றாண்டு மணிமண்டபத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு இன்று காலை கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து நாடார் மகாஜன சங்கம் சார்பில் சத்திரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வித் திருவிழா கொண்டாடப்பட்டது. தொழில் அதிபர் ஏ.பி. செல்வராஜன் தலைமை தாங்கினார். கனிமொழி எம்.பி. விழாவில் பங்கேற்று காமராஜர் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அரசு பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்களை அவர் வழங்கினார்.

விழாவில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஆர். சீனிவாசன், தங்கப்பாண்டியன், சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல் ராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு கலெக்டர் மேகநாதரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து நாடார் மகாஜன சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமையில் காமராஜர் நினைவு இல்லத்தில் பெண்கள் நோட்டு புத்தகங்களை வைத்து மரியாதை செய்தனர்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக