வியாழன், 15 ஜூலை, 2021

ஒன்றிய அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்தது! தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஒன்றிய அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்தது!

minnambalam :ஒன்றிய கல்வித் துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்களுடனான தமிழ்நாடு பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்தது என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு ரத்து, தடுப்பூசி தட்டுப்பாடு,எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட 13 கோரிக்கைகள் குறித்து ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து பேசுவதற்காக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று(ஜூலை 15) மாலை டெல்லி சென்றார்.

நேற்று மாலையே டெல்லி வந்த அமைச்சர் தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். இன்று காலை டெல்லியில் வழக்கம்போல் உடற்பயிற்சியை மேற்கொண்டார். நாடாளுமன்ற வளாகத்தில் நீண்ட தூரம் ஓட்டபயிற்சி மேற்கொண்டார். இதுகுறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதையடுத்து இன்று(ஜூலை 15) காலை ஒன்றிய கல்வித் துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்களை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர், ”முதலில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து நீட் தேர்வினால் மாணவர்கள் உயிரிழப்பு, கிராமப்புற மாணவர்களின் பாதிப்பு, நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவின் பரிந்துரைகள் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். இதுகுறித்து பரிசீலிப்பதாக அமைச்சர் உறுதியளித்தார். நீட் தேர்வு விலக்கு தொடர்பாக பேசும்போது, எந்த நிலையிலும் நீட் தேர்வு ரத்து செய்யப்படாது என ஒன்றிய அமைச்சர் தெரிவிக்காதது ஆறுதலாக உள்ளது.

தொடர்ந்து, ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவையும் சந்தித்துப் பேசினோம். தற்போது வரை 1 கோடியே 70 லட்சத்து 38,460 தடுப்பூசிகள் வந்துள்ளன. தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் தடுப்பூசி போதுமானதாக இல்லை. அதனால் தமிழ்நாட்டிற்கு 12 கோடி தடுப்பூசிகள் வழங்க வேண்டும். தடுப்பூசிகளை வீணடிக்காமல் கொள்முதல் செய்யப்பட்டதை விட கூடுதலாக மக்களுக்கு செலுத்தியிருக்கிறோம் என்று கூறினோம். தமிழ்நாடு சிறப்பாக தடுப்பூசி செலுத்தி வருவதாக கூறிய ஒன்றிய அமைச்சர் நிச்சயம் கூடுதல் தடுப்பூசி வழங்குவதாக தெரிவித்தார்.

அதுபோன்று மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று கூறினோம். அமைச்சரும் மிக விரைவில் கட்டுமான பணிகளை தொடங்க நடவடிக்கை எடுப்பதாகவும், கோவையில் எய்ம்ஸ் அமைப்பது குறித்து பரிசீலிப்பதாகவும் தெரிவித்தார். 11 மருத்துவக் கல்லூரிகளின் கட்டுமானம் குறித்த விவரங்களை அளித்தபோது, இங்கு மாணவர் சேர்க்கையை விரைவுப்படுத்த ஆட்களை ஆய்வுக்கு அனுப்புவதாக தெரிவித்தார்.

செங்கல்பட்டு ஹெச்எல்எல், குன்னூர் பாஸ்டியர் தடுப்பூசி மருந்து மையங்கள் மூலம் தடுப்பூசி தயாரிக்க முடியும் என்று கூறினோம். அதுகுறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம். விரைவில் நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்.

கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்புகளை சரிசெய்யவும், மூன்றாம் அலையை எதிர்கொள்ளவும் முதற்கட்டமாக ரூ.800 கோடியை விடுவிப்பதாகவும், திட்ட மதிப்பீடுகளை அளித்த பின் மீதி தொகையை விடுவிப்பதாகவும் கூறினார்.

அந்த வகையில் தமிழ்நாடு பிரச்சினைகள் குறித்து ஒன்றிய அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்தது” என்று தெரிவித்தார்.

-வினிதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக