வியாழன், 8 ஜூலை, 2021

யூடுப் சானலில் சாதித்து காட்டிய வில்லேஜ் குக்கிங் கிராமத்து இளைஞர்கள்

 

Abilash Chandran   : வில்லெஜ் குக்கிங் சானலின் வளர்ச்சி கூறுவதென்ன?

ஊடகங்களில் மிக வேகமாக பணம் சம்பாதிக்க, புகழ் பெற சாத்தியமுள்ளது
சினிமா தான். அதிலும் ஒரு படைப்பாளியாக விரும்புவோர் உதவி இயக்குநராகி,
பல வருடங்கள் போராடி ஒரு தயாரிப்பாளரைப் பெற்று, பல மாதங்கள் உழைத்து திரைக்கதையை உருவாக்கி,
நடிகர்களை ஒப்பந்தம் செய்து, படப்பிடிப்பு நடுவில் நின்று விடக் கூடாதே எனப் பதபதைத்துக் கொண்டு எடுத்து முடித்து,
திரையரங்குகள் அமைந்து வந்து வெளியிட்டு, மக்களிடமும் ஊடகத்திலும் கவனிப்பும் பாராட்டும் கிடைத்து …
அப்பாடா என்றாகி விடும்.
வருடத்தில் நூற்றுக்கணக்கில் வெளியாகும் படங்களில் விரல் விட்டு எண்ணுமளவுக்கு படங்களே இப்படி இயக்குனருக்கு பணமும் பெயரும் சம்பாதித்து தருகின்றன.


அதுவும் உங்கள் படம் 5 கோடி பட்ஜெட் என்றால் இயக்குநர் சம்பளமாக 25 லட்சம் வருமா?
ஆனால் அதை அடைய நீங்கள் 10-20 வருடங்கள் வாழ்க்கையை வாடகை அறைகளிலும் இருட்டிலும் தியாகம் செய்ய வேண்டும். ராம் தமிழ் மட்டுமல்ல இந்திய சினிமாவின் மகத்தான படைப்பாளிகளில் ஒருவர். ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் இருந்து சினிமாவில் இருக்கிறார்.
அவருடைய படங்கள் தேசிய விருதையும், உலகத் திரைப்பட விழாக்களில் அங்கீகாரமும் பெற்றிருக்கின்றன. ஆனால் சில வருடங்களுக்கு அவர் BOFTA திரைப்பட க்கல்லூரியில் விரிவுரையாளராக சம்பளத்துக்கு வேலை பார்க்கிறார் என அறிந்து மிகவும் நொந்து போனேன்.
அவரிடம் மாணவராக இருப்பது ஒரு கொடுப்பினை தான், ஆனால் மாத சம்பளத்துக்கு வேலை செய்யும் இடத்தில் ஏன் அவரை நாம் வைத்திருக்கிறோம்?
ராமாவது மீண்டுமொரு நல்ல படமெடுத்து மேலும் சாதனைகள் படைப்பார். இன்னும் சில இயக்குநர்கள் படமெடுக்கும் வாய்ப்பில்லாமல் சிறிய வேலைகளை சினிமாவுக்குள் செய்து ஒடுங்கிப் போய் விடுகிறார்கள்.

இப்போது அப்படியே யுடியூப் சேனல்களின் உலகத்துக்கு வாருங்கள். வில்லேஜ் குக்கிங் சானலை மூன்று வருடங்களுக்கு முன்பு சில கிராமத்து இளைஞர்களும் ஒரு பெரிசும் சேர்ந்து ஆரம்பிக்கிறார்கள். அவர்களுக்கு படக்கருவியின் நுட்பங்களோ, கதை சொல்லும் திறனோ, ஒரு துறைசார் நிபுணத்துவமோ இல்லை. அவர்கள் யுடியூபில் வருவதற்காக வருடக்கணக்கில் வாழ்க்கையை தியாகம் செய்யவோ தயாராகவோ இல்லை. யுடியூபில் என்னென்னமோ செய்து பார்த்து சரி வராமல் வில்லெஜ் புட் பாக்டெரி பாணியில் வெளிப்புறத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் கிராமத்து சமையலை செய்து படம்பிடிப்பு பதிவேற்றுகிறார்கள். அது பெரிய வரவேற்பு பெற்று இன்று 1 கோடி பின் தொடர்பவர்களைப் பெற்றிருக்கிறார்கள். மாத வருமானம் நிச்சயம் லட்சங்களில் இருக்கும். ராகுல் காந்தி இவர்களுடைய ஷோவில் வரும் வரை இவர்கள் இப்படி சம்பாதிக்கிற விசயம் ஊர்க்காரர்களுக்கே தெரியாது. இப்போது முதல்வரின் நிவாரண நிதிக்கு 15 லட்சம் கொடுக்குமளவிற்கு வளர்ந்திருக்கிறார்கள். நம்மில் எத்தனை பேரால் வருடத்திற்கு 15 லட்சம் வருமானம் ஈட்ட முடியும்?

ரொம்ப அவமானமாக இருக்கும் என்பதால் நான் தமிழ் எழுத்தாளர்களை இந்த விசயத்துக்குள் கொண்டு வரவே இல்லை. சினிமாவே கலைஞர்கள் சம்பாதிக்க சிறந்த இடம் எனும் போது யுடியூபர்கள் அதையும் இப்போது கடந்து போகிறாரக்ள். அடுத்த ஒரு பத்தாண்டில் வெகுஜன கலைஞர்கள் கோடம்பாக்கத்தை அல்ல யுடியூபை நோக்கியே படையெடுப்பார்கள். ஏனென்றால் இந்த பெரிய  தொழில்நுட்ப அறிவும் கலை அனுபவமும் இல்லாத  இளைஞர்களாலே இவ்வளவு சம்பாதிக்க முடியுமெனில் திறமையும் அறிவும் படைத்தவர்களால் என்னென்ன முடியும்? (இவர்களை மட்டம் தட்டும் விதமாக நான் இதைச் சொல்லவில்லை.)

ஆனால் வழமையான உள்ளடக்கத்தை வைத்து யுடியூபில் குப்பை கொட்ட முடியாது. செலிபிரிட்டி ஊடகவியலாளர்கள் சமூகப் பிரச்சனைகளை விவாதித்து சில லட்சம் பார்வைகளைப் பெற முடியும். செலிபிரிட்டி நடிகர்கள், ரியாலிட்டி நட்சத்திரங்கள் நிறுவனங்களின் துணை கொண்டு காணொலிகளை பதிவேற்றி விளம்பரங்களைப் பெற முடியும். ஆனால் கோடிகளைத் தொட அதிரடியான, எதிர்பாராத, வித்தியாசமான காரியங்களை படம்பிடிக்கும் யுடியூபர்களாலே முடியும். செக்ஸ், வன்முறை, சாகசம், சமையல் என இனி ஊடகங்களின் கவனம் செல்லும் என நினைக்கிறேன். ஆங்கிலத்தில் paradigm shift என சொல்வார்கள். அப்படியான ஒன்று இங்கு நிகழ்ந்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக