வெள்ளி, 9 ஜூலை, 2021

தலிபான்களிடம் சரண் அடையும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள்

 தினத்தந்தி :காபுல், ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படையினருக்கும் பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது.
தலிபான்களை ஒழிக்கும் நடவடிக்கையில் உள்நாட்டு அரசுக்கு உதவியாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் 20 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தது.  
ஆனால், இந்த உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர தலிபான்களுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நடைபெற்ற அமைதிப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. ஆப்கானிஸ்தான் அரசுடன் தலிபான்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் அமெரிக்க படை மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்பன உள்ளிட்ட முடிவுகள் எட்டப்பட்டன.
அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து செப்டம்பர் 11-ம் தேதிக்குள் வெளியேறவும் முடிவு செய்யப்பட்டது.



இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில் இருந்து நோட்டோ அமெரிக்க படைகள் முழுவதும் திரும்பபெறும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நேட்டோ படையில் இடம்பெற்றுள்ள பிற நாட்டு வீரர்கள் திரும்பப்பெறப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க படைகள் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் முழுவதும் திரும்பப்பெறப்பட உள்ளனர். இதனால், அமெரிக்க படைகள் தங்கி இருந்த படைத்தளங்கள் கைவிடப்பட்டு வருகின்றன.

அமெரிக்க படைகள் வெளியேறி வருவதால் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர். அமெரிக்க வீரர்களால் கைவிடப்பட்ட படைத்தளங்களை தலிபான்கள் கைப்பற்றி வருகின்றனர்.

மேலும், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு அஞ்சி ஆயிரக்கணக்கான ஆப்கன் வீரர்கள் அண்டை நாடான தஜகிஸ்தான் நாட்டிற்கு தப்பிச்செல்கின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க படைகள் வெளியேறி வருவதால் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் பலரும் தலிபான்களிடம் சரண் அடைந்து வருகின்றனர்.

தங்கள் ஆயுதங்களை தலிபான்களிடம் வழங்கி ஆப்கானிஸ்தான் வீரர்கள் சரண் அடைந்து வருகின்றனர். பஹ்லான் மாகாணத்தில் உள்ள ஆப்கன் வீரர்கள் தலிபான்களுடன் சரண் அடையும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக