வெள்ளி, 9 ஜூலை, 2021

ஹைதி அதிபர் படுகொலை? – அமெரிக்கா மற்றும் கொலம்பியாவை சேர்ந்த 17 கூலிப்படையினர் கைது!

nakkheeran.in - ஜ்ப்ரியன் : அமெரிக்கா கண்டத்தின் ஒருப்பகுதியாக கரிப்பியன் தீவு தொடர்களில் உள்ள நாடு ஹைதி. இதன் மக்கள் தொகை சுமார் கிட்டதட்ட 1 கோடியே 10 லட்சம் . இந்த நாட்டின் பெயர் தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஊடகங்களில் அடிக்கடி அடிப்பட்டன. தமிழகத்தில் பாலியல் வழக்கில் பிரபலமான நித்தியானந்தன் இங்குதான் பதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அந்த நாட்டின் அதிபராக இருந்தவர் ஜோவ்னல் மொய்சே. வறுமையினால் பிடியில் இருக்கும் இந்த நாட்டிற்கு பெரிய அளவிலான வருமானமே சுற்றுலா மூலமாகத்தான். இந்த நாட்டிலுள்ள கடற்கரைக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்கள் செல்வார்கள். அதோடு பாலியல், போதை பொருள் சர்வசாதாரணமாக கிடைக்கும். வறுமை, வேலைவாய்ப்பு இல்லாததால் கொள்ளையர்கள், அதிலும் துப்பாக்கி வைத்துள்ள கொள்ளையர்கள் அதிகம். போதை பொருள் கடத்தல் இங்கு அதிகம்.

 கடந்த 50 ஆண்டுகளில் ராணுவ ஆட்சி, கொள்ளையடிக்கவே ஆட்சிக்கு வந்த அரசியல்வாதிகள் என தொடர் துன்பத்தில் உள்ள மக்களுக்கு இயற்கையும் அடிக்கடி இந்த மக்களை துன்புறுத்தும். இயற்கை சீற்றத்தால் கடந்த 25 ஆண்டுகளில் 5 லட்சம் மக்கள் இறந்துள்ளார்கள். இந்தநாட்டின் அதிபருக்கான பொதுத்தேர்தல் 2016ல் நடைபெற்றது, அதில் 26 சதவித மக்களே வாக்களித்தனர். அதில் பெரும்பான்மை வாக்குகளைப்பெற்று மீண்டும் ஜோவ்னல் மொய்சே வெற்றிபெற்று அதிபரானார். நாட்டில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணய் விலை அதிகமாகிவிட்டன. அதற்கு காரணம் கச்சா எண்ணெய் இறக்குமதியில் பெரியளவில் ஊழல்கள் நடந்துள்ளன. இந்த ஊழலில் அதிபருக்கும் தொடர்பு என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. மக்கள் சாலைகளில் வந்து போராடத்துவங்கினர், போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிசூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். இதனால் போராட்டம் இன்னும் வீரியமடைந்தது.

 2018 ஜீலை 7ஆம் தேதி மக்கள் போராட்டம் ஹைதி தலைநகரில் தொடங்கியது. தொடர்ச்சியான இந்த போராட்டத்தில் 187 போராட்டக்காரர்கள், 44 காவல்துறையினர், 2 பத்திரிக்கையாளர்கள் என கொல்லப்பட்டும் போராட்டம் நிற்கவில்லை. 2019 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்றுயிருக்கவேண்டும். ஆனால் நாட்டில் அமைதியற்ற நிலையால் தேர்தலை நடத்தாமல் ஒத்திவைத்தார் அதிபர். ஓராண்டுக்கு பதவி நீட்டிப்பை அவராகவே செய்துக்கொண்டார் ஜோவ்னல் மொய்சே. இதனால் போராட்டங்கள் இன்னும் தீவிரமாகின. 2018 ஜீலை 7 ஆம் தேதி தொடங்கிய போராட்டம் சரியாக மூன்றாண்டுகள் முடிந்து 2021 ஜீலை 7 ஆம் தேதி இரவு அதிபர் ஜோவ்னல் மொய்சே அவரது வீட்டின் படுக்கையறையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவரது மனைவியும் சுடப்பட்டதில் குண்டு காயங்களுடன் அமெரிக்காவின் தனியார் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார். ஹைதி அதிபரின் படுகொலைக்கு அமெரிக்கா, கனடா உட்பட சில நாடுகளின் தலைவர்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

 அதிபர் கொலைக்கு காரணமான குற்றவாளிகளை பிடிக்க நாடு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தியதில் தலைநகரில் ஆயுதம் தாங்கிய ஒருக்குழுவோடு நடந்த துப்பாக்கி சண்டையில் 4 பேர் கொல்லப்பட்டனர். இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் தந்த தகவலின் அடிப்படையில் 17 பேர் கொண்ட கும்பலை கைது செய்துள்ளது போலீஸ். அதில் 15 பேர் கொலம்பியாவை சேர்ந்தவர்கள். அதில் 6 பேர் கொலம்பியா இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். அதோடு அமெரிக்காவை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து நவீன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொலைக்கான காரணத்தை கண்டறிய தீவிரம் காட்டிவருகிறது ஹைதி காவல்துறை. அதிபரை சுற்றி 30க்கும் அதிகமான பாதுகாப்பு வீரர்கள் இருப்பர். 12 வாகனங்களில் பாதுகாப்பு வீரர்கள் பயணம் செய்வர். அவரது வீட்டுக்கும் பாதுகாப்பு உண்டு. அப்படியிருக்க பாதுகாப்பு படையினரை மீறி உள்ளே சென்று கூலிப்படையினர் எப்படி சுட்டுக்கொன்றார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள கொலை கும்பலில் இரண்டு அமெரிக்கர்கள் கைதாகியிருப்பது உலகளவில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலையின் பின்னணியில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ உள்ளதா என்கிற கேள்வி எழுகிறது. அதிபரின் படுகொலைக்கு காரணம் எது என்கிற புலனாய்வு தீவிரமாக நடந்துவருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக