ஞாயிறு, 25 ஜூலை, 2021

தமிழ்நாட்டில் வடஇந்திய பணியாளர்களை வைத்திருக்கும் முதலாளிகளின் பொய் பிரசாரம்

 Kandasamy Mariyappan  :    தமிழ்நாட்டில் ஒருசிலர் வைக்கும் தொடர் குற்றச்சாட்டு..,
தமிழ்நாட்டு மக்கள் இலவசங்களை பெற்றுக்கொண்டு, சாராயக் கடையில் சாராயத்தை குடித்து கொண்டு வேலைக்கு வர மறுக்கிறார்கள் என்பது..!
எனவே எல்லா தொழில் நிறுவனங்களும் வட இந்திய மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை பணியில் அமர்த்துகின்றன என்கின்றனர்.!
இது உண்மைதானா..!?
எந்த ஒரு முதலீட்டாளருக்கும் லாபம் மிகவும் முக்கியம். அந்த லாபத்தை பெற குறைவான சம்பளத்தில் தொழிலாளிகளை அமர்த்திக்கொள்வதும் ஒரு யுத்தி.  
உதாரணத்திற்கு 2010 வரையில் BPO நிறுவனங்கள் BSc, BA படித்த நன்றாக ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கே 20,000 ரூபாய் சம்பளம் கொடுத்தன.! ஆனால் இன்று பல லட்சம் இன்ஜினியரிங் பட்டதாரிகள் இருப்பதால் அதே வேளைக்கு 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே சம்பளம் தருகின்றனர்.!
இன்னும் கூடுதலான பட்டதாரிகள் வட இந்தியாவிலிருந்து வரும்பொழுது, 5,000 - 8,000 ரூபாய் சம்பளத்தில் வட இந்தியர்களை மட்டுமே அந்த பணியில் அமர்த்துவர்.!
அப்படியென்றால் தமிழ்நாட்டு இன்ஜினியரிங் மாணவர்கள் வேலைக்கு சேர மறுக்கிறார்கள் என்று அர்த்தமா.!?
ஒருவனுக்கு உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் என்ற அடிப்படைத் தேவைகள் (Basic Needs) கிடைத்தால் அவன் அடுத்த நிலையைப் பற்றிதான் சிந்திப்பான்.


நமது ஆட்சியாளர்களின் சீரிய முயற்சிகளால் தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு அந்த அடிப்படைத் தேவைகள் கிடைத்துவிட்டது என்பதால்.., அடுத்தபடியாக அவனுடைய தேவைகளை நிறைவேற்றும் அளவிற்கு சம்பளம் இருந்தால் மட்டும்தான் அவன் அந்த இடத்தை விட்டு நகர்வான்.!
புதிய வேலைக்கு வந்த பிறகும் ஏற்கனவே கிடைத்துக் கொண்டிருந்த அடிப்படை தேவைகள் கூட இல்லாத நிலை இருந்தால் அவன் அந்த வேலையை தேர்ந்தெடுக்க மாட்டான்.!
வட இந்திய மாநில மக்களுக்கு அடிப்படை தேவை என்ற நிலையே இல்லாமல் இருக்கிறது.!
உதாரணமாக கட்டுமானத்துறையில் பணியிலிருக்கும் வட இந்தியர்கள் 10,000 - 12,000 சம்பளத்தில், அந்தப் பகுதியிலேயே ஒரு குடிசை அமைத்துக் கொண்டு அதற்குள்ளேயே சமைத்து, உறங்கி வாழ்க்கை நடத்துகின்றனர்.!
இதை மறைக்க முதலாளிகள் எடுத்திருக்கும் தந்திரம்தான் தமிழ்நாட்டுக்காரர்கள் யாரும் வேலைக்கு வருவதில்லை என்ற பொதுக் குற்றச்சாட்டு.!
தமிழ்நாட்டு மக்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்றால், அவர்களுக்கு வருமானம் இல்லையென்றால்...,
இந்த முதலாளிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை எங்கே விற்பார்கள் என்ற அடிப்படை அறிவு இல்லாதவர்கள்தான் இதுபோன்ற முட்டாள் தனமான குற்றச்சாட்டுகளை வைப்பவர்கள்.!
முதலாளிகளின் உண்மையான நோக்கத்தை உணராமல், நாம் இது போன்ற காரியங்களை ஊக்குவிப்பது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல என்பது மட்டும் எனது பார்வை.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக