செவ்வாய், 6 ஜூலை, 2021

பீட்டர் அல்போன்ஸ் ஆணைய தலைவரான உண்மை காரணம்! திமுகவினரை தவிர்க்கிறாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்?

 மின்னம்பலம் : சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் தேர்தலில் வாய்ப்பு வழங்க இயலாது.
அதனால் தேர்தலில் வாய்ப்பு கிடைக்காத மாசெக்கள் வருத்தப்படாதீர்கள். உங்கள் மாவட்டங்களில் உங்கள் பொறுப்பில் உள்ள தொகுதியில் நம் கூட்டணி சார்பாக யார் நின்றாலும் வெற்றி பெற வையுங்கள்.
அதை வைத்து உங்களுக்கு நான் மார்க் போடுவேன். தேர்தலுக்குப் பின் திமுக ஆட்சியில் உங்களுக்கு உரிய பதவிகளை கொடுப்பேன்” என்று பேசினார்.
ஸ்டாலினின் இந்த வார்த்தைகளை ஏற்று சீட் கிடைக்காத மாவட்டச் செயலாளர்கள் பலர் தங்கள் பெற்றுக் கொடுத்த வெற்றிக்கேற்ப புதிய அரசில் தங்களுக்கு ஏதாவது வாரியத் தலைவர் பதவியோ ஆணைய பதவியோ கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் ஆட்சி அமைத்த பின் கொரோனா கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்கிய முதல்வர் ஸ்டாலின் அதைத் தவிர வேறெதிலும் கவனம் செலுத்தவில்லை. ஜூன் மாத பிற்பகுதியில் இருந்துதான் பிற விஷயங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.



இந்த சூழலில்தான் சிறுபான்மை ஆணையத் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸுக்கும், கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய தலைவராக தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன்.குமாருக்கும் பதவி அளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். மேலும் சமீபத்தில் அதிமுகவில் இருந்தும், அமமுகவில் இருந்தும் ஏராளமானோர் சமீப நாட்களாக அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டு வருகிறார்கள். அவர்களும் ஏதாவது ஒரு பதவியைக் குறிவைத்துதான் திமுகவுக்கு வருகிறார்கள்.

இந்த நிலையில் பத்து வருடங்களுக்குப் பின் அமைந்த திமுக அரசின் முதல் இரு முக்கிய நியமனங்களிலும் கட்சிக்காக தொடர்ந்து உழைத்த திமுகவினரே இல்லை என்பதை சுட்டிக் காட்டுகிறார்கள் திமுக நிர்வாகிகள்.

அவர்களில் சிலரிடம் பேசியபோது, “ பீட்டர் அல்போன்ஸ் சிறுபான்மை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் காங்கிரஸ் கட்சி சார்பாக இருமுறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். சிறுபான்மை நல வாரியம் மூலம் சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு உதவிகளையும், ஒன்றிய மாநில அரசுகளின் நலத்திட்டங்களையும் செய்ய முடியும். திமுகவிலேயே சிறுபான்மை ஆணையத் தலைவராக தகுதி பெற நிறைய பேர் உள்ளனர். ஆனால் பீட்டர் அல்போன்சை நியமித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

இதேபோல லட்சக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்ட தமிழக கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் தலைவராக திமுகவின் தோழமை அமைப்புத் தலைவரான பொன்.குமார் நியமிக்கப்பட்டுள்ளார். கட்டுமான தொழிலாளர் வாரியம் சில ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி புழங்கும் அமைப்பு. இதன் தலைவராக திமுகவைச் சேர்ந்த ஒருவரை நியமித்திருக்கலாம். ஆனால் ஏனோ இதையும் தோழமை அமைப்புக்குக் கொடுத்துவிட்டார் தலைவர்.

மேலும் முதல்வரான பிறகு கட்சிக்காரர்களை அதிகம் சந்திப்பதை தவிர்த்து வருகிறார் ஸ்டாலின். அதற்கு முன் அறிவாலயத்துக்கு வருபவரை எளிதில் மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், வெளியூர்களில் இருந்து வந்திருக்கும் கட்சி நிர்வாகிகள் சந்தித்துவிட முடியும். ஆனால் முதல்வரான பிறகு ஸ்டாலின் அறிவாலயம் வந்தபோதும் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சிகளில்தான் அதிகம் பங்கெடுக்கிறார்கள். அந்த மாவட்டத்துக்கு சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள்தான் அப்போது அனுமதிக்கப்படுகிறார்கள். முதல்வரை சந்திக்கக் காத்திருக்கும் பிற மாவட்ட கட்சியினருக்கு சந்திக்க நேரம் கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் மனுவை அறிவாலய நிர்வாகிகளிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர். தேர்தலுக்குப் பின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டமே ஒருமுறைதான் நடந்திருக்கிறது. அதுவும் முக்கால் மணி நேரத்துக்கும் குறைவாகவே நடந்தது.

மாவட்டச் செயலாளர்களை, கட்சி நிர்வாகிகளை சந்தித்தால் அவர்கள் வாரியம் உள்ளிட்ட பதவிகளைக் கேட்பார்களோ என்று முதல்வர் தவிர்த்துவிடுவதாக தெரிகிறது. இது தொடர்ந்தால் எம்.எல்.ஏ. அல்லாத கட்சி நிர்வாகிகள் பலர் விரக்தி அடைந்துவிடுவார்கள்” என்கிறார்கள்.

நாம் இதுபற்றி திமுக மேல்மட்டப் புள்ளிகள் சிலரிடம் பேசினோம்.

“பீட்டர் அல்போன்ஸுக்கு சிறுபான்மை ஆணைய தலைவர் பதவி கொடுத்தது முதல்வர் ஸ்டாலினுடைய தனிப்பட்ட விருப்பம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு தென் காசி சீட் கொடுக்கப்பட்டபோது அதில் பீட்டர் அல்போன்ஸ் போட்டியிட வேண்டும் என்பது ஸ்டாலினின் விருப்பம். இது தொடர்பாக அவரே பீட்டரிடம் பேசினார். ஆனால் பீட்டர், ‘இல்லீங்க. என் மனைவிக்கு உடல் நிலை சரியில்லை. இந்த நிலையில் நான் அவருடன் இருக்கணும். தேர்தலில் நின்றால் பிரச்சாரத்திலும் கவனம் செலுத்த முடியாது’ என்று சொல்லி மறுத்துவிட்டார். அப்போதே பீட்டருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார் ஸ்டாலின்.

மே 2 தேர்தல் முடிவுக்குப் பின் மே 4 ஆம் தேதி பீட்டர் அல்போன்ஸின் மனைவி காலமாகிவிட்டார். இந்த நிலையில்தான் பீட்டரை தனிப்பட்ட சோகத்திலிருந்து மீட்டு பொதுவாழ்க்கையில் ஈடுபடுத்த வேண்டும் என்பதற்காகவே அவருக்கு சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் பதவியைக் கொடுத்தார். அதிலும் காங்கிரஸ் காரர்கள் சிலரே முட்டுக் கட்டைபோட்டதைத் தாண்டியும் அவருக்கு அப்பதவியைக் கொடுத்தார். இதேபோல பொன்.குமார் திமுகவின் தோழமை அமைப்பாக பல ஆண்டுகளாக செயல்பட்டு வருவதால் அப்பதவியைக் கொடுத்தார். இப்போதுதான் கொரோனா பரவல் குறைந்திருக்கிறது. மாசெக்கள் கூட்டத்தில் கொடுத்த வாக்குறுதியை ஸ்டாலின் விரைவில் நிறைவேற்றுவார். பாருங்கள்” என்கிறார்கள்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக