செவ்வாய், 6 ஜூலை, 2021

இருப்பைவிட அதிகமாகத் தடுப்பூசி செலுத்தியது எப்படி?- அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

 தமிழ் - இந்து  : தமிழக அரசு நிர்வாகத் திறமையுடன் கரோனா தடுப்பூசிகளைக் கூடுதலாகச் செலுத்தியிருக்கிறது என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று (ஜூலை 06) அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:
"ஜூலை 21-ம் தேதியிலிருந்து இந்தியாவில் தயாராகும் ஒட்டுமொத்தத் தடுப்பூசிகளின் அளவில் 75 சதவீதத்தை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்குப் பிரித்து அனுப்பும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. தமிழகத்திற்குக் கூடுதல் தடுப்பூசிகள் வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். மேலும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு டெல்லியில் முகாமிட்டு இதனை நேரடியாகத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.



நாளை என்னையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளரையும், டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரைச் சந்திக்குமாறு முதல்வர் கூறியுள்ளார். 9-ம் தேதி அவரைச் சந்தித்து, கூடுதல் தடுப்பூசிகள், எய்ம்ஸ் மருத்துவமனை நிலை குறித்து அவருக்கு விளக்கவிருக்கிறோம்.

இந்த நிலையில், 1,57,76,550 தடுப்பூசிகள் வந்திருந்தாலும், நேற்று முன்தினமும் ஒரு அரசியல் இயக்கத்தின் தலைவர் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறார். எவ்வளவு தடுப்பூசிகள் வந்தன, எவ்வளவு செலுத்தினீர்கள், எவ்வளவு மிச்சமாயின எனப் பல கேள்விகளைத் தொடர்ச்சியாகக் கேட்டுள்ளார். நாங்களும் அவருக்குத் தொடர்ந்து பதில் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

இதுவரை, 1,57,76,550 தடுப்பூசிகள் வந்துள்ளன. நேற்று இரவு வரை 1,58,78,600 செலுத்தியிருக்கிறோம். கையிருப்பில் 63,460. 1.75 லட்சம் தடுப்பூசிகள். எப்படிக் கூடுதலாக வந்தன எனக் கேட்கலாம்.

தமிழகத்தில் ஜனவரி 16 முதல் தடுப்பூசி போடப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வரும் வரை 3.5-4 லட்சம் வரை தடுப்பூசிகள் வீணாகிவிட்டதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அறியப்பட்டது. தமிழகத்தில் தடுப்பூசிகளை வீணடித்துவிட்டதாக அப்போது குற்றச்சாட்டும் வந்தது.

அதன்பின் ஆட்சியமைத்த திமுக, வீணான 3.5 லட்சம் தடுப்பூசிகளையும் சேர்த்து, 1.75 லட்சம் தடுப்பூசிகள் கூடுதலாக இருக்கும் வகையில், நிர்வாகத் திறமையுடன் கூடுதலாகச் செலுத்தியிருக்கிறது. ஒரு 'வயலில்' (Vial) 10 பேருக்குத் தடுப்பூசி என்றால், மருந்தின் அளவைக் குறைத்துப் பலருக்கும் போடப்படுகிறதா என்று கேட்கலாம். மருந்தின் அளவில் குறைவேதும் இல்லை.

மருந்தைக் குப்பியில் அடைக்கும்போது 16-24% கூடுதலாக மருந்தை அடைக்கிறார்கள். அந்த மருந்தை மிகச் சாமர்த்தியமாக, ஒரு வயலில் இருந்து 11 பேருக்கு சுகாதாரத்துறையினர் செலுத்தியிருக்கின்றனர். ஒரு தடுப்பூசியைப் பயன்படுத்தும் போது நிச்சயமாக 11 பேர் இருப்பதை உறுதி செய்துவிட்டு செலுத்துவதால் தடுப்பூசி வீணாவதில்லை.

தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வரவர மக்கள்தொகை, கரோனா பாதிப்புக்கு ஏற்ப மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பப்படுகின்றன".

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக