திங்கள், 12 ஜூலை, 2021

சிபிஎஸ்சி தமிழ் பாட நூலையும் நாங்களே அச்சடிப்போம்! திண்டுக்கல் லியோனி

 மின்னம்பலம் :தமிழ்நாட்டு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவராக திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளரான திண்டுக்கல் லியோனி அண்மையில் நியமிக்கப்பட்டார்.
அவரது நியமனத்துக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடங்கி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வரை எதிர்ப்பு தெரிவித்தனர்.
லியோனி முன்பு பட்டிமன்றங்களில் பேசிய சில கருத்துகளை முன் வைத்து, லியோனியை இந்தப் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.
ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து எந்த பதிலும் அளிக்காமல் இருந்தார்.
இந்நிலையில் இன்று (ஜூலை 12) பாடநூல் கல்விப் பணிகள் கழகத் தலைவராக லியோனி பொறுப்பேற்றுக் கொண்டார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று லியோனியை அவரது இருக்கையில் அமரவைத்தார்.



பிறகு செய்தியாளர்களிடம் லியோனி பேசியபோது அவர் மீதான பல விமர்சனங்களுக்கு பதிலாகவே அது அமைந்தது.

“33 ஆண்டுகள் ஆசிரியர் பணியாற்றி 2011 ஆம் ஆண்டு ஆசிரியர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றேன். அன்று வைத்த பாடப் புத்தகத்தை மீண்டும் பத்து வருடங்கள் கழித்து 2021 இல் கையிலெடுக்க வைத்திருக்கிறார் முதல்வர்.

இங்கு வந்த பிறகு இந்த பணியின் பொறுப்பு பற்றி மேலாண்மை இயக்குனர் மணிகண்டன் ஐ.ஏ.எஸ். அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கிறேன். 33 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றிய அனுபவத்தைப் பயன்படுத்தி பாட நூல்களை மானவர்களுக்கு மகிழ்ச்சிகரமான அனுபவமாக மாற்றுவதுதான் என் நோக்கம். அதேபோல அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்துவதில் முதல்வர் தீவிரமாக இருக்கிறார். அதற்கு எங்களால் முடிந்த அத்தனை பணிகளையும் செய்வோம்.

நான் பிஎட் படித்தபோது, ’தெரிந்ததில் இருந்து தெரியாதது, புரிந்ததில் இருந்து புரியாதது, எளிமையில் இருந்து கடினம்’ இதைத்தான் கல்வியின் நோக்கம் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இது சங்கிலித் தொடராக செயல்பட வேண்டும். அதன்படியே எனது பணி இருக்கும்.

புத்தகங்களை விற்கும் லாபத்தை வைத்துதான் கல்வியியல் கழக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது என்பதை அறிந்தேன். இப்படி ஒரு சுயம் நிறைந்த கழகத்தில் பணியமர்த்தப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய பணிக் காலத்தில் லியோனி இந்த முத்திரையைப் பதித்தார் என்று சொல்லும் அளவுக்கு இந்தக் கழகத்தைக் கொண்டு செல்வேன்”என்று கூறினார் லியோனி.

பாடப் புத்தகங்களில் கலைஞர் வாழ்க்கை வரலாறு இடம்பெறுமா என்ற கேள்விக்கு, “நான் 11 ஆவது படிக்கும்போது தமிழ் பாடத்தில் முதல் பகுதியாக அண்ணாவின் பட்டமளிப்பு விழா பேருரை இருந்தது. அந்தப் பாடத்தை அண்ணாவின் குரலிலேயே என் தமிழாசிரியர் நடத்தினார். அது இன்னும் என் நினைவில் இருக்கிறது. என்னுடைய காலகட்டத்தில் முதல்வர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் ஆலோசனையோடு கலைஞரின் இலக்கியப் பணி, கல்விப் பணி, சமூக நீதிப் பணி உள்ளிட்ட அத்தனை பணிகள் பற்றியும் மாணவர்கள் அறிந்துகொள்ள 1 ஆம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்பில் இருந்து வைப்பதற்கு முழு முயற்சி எடுப்பேன்”என்று பதிலளித்தார் லியோனி.

சிபிஎஸ்சி பாடத்தில் தமிழ் பண்பாடுக்கு எதிரான பொய்யான தகவல்கள் இடம்பெறுவது பற்றிய கேள்விக்கு, “இப்போது கூட திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா, சிபிஎஸ்சி பாடத் திட்டத்தில் தமிழ் கட்டாயம் ஆக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அதைக் கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்ளச் செய்திருக்கிறார். சிபிஎஸ்சி பாடத் திட்டத்துக்கும் தமிழ் பாடப் புத்தகங்களை அச்சடிக்கும் பொறுப்பையும் தமிழ்நாட்டு பாட நூல் கழகமே பெறும்” என்று பதிலளித்தார் லியோனி.

லியோனி பதவியேற்றபோது அருகே நின்ற அவரது மனைவி ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக