புதன், 14 ஜூலை, 2021

சோனியா-ராகுல்-பிரியங்காவுடன் சந்திப்பு: பிரசாந்த் கிஷோரின் ‘பெரிய’வியூகம்!

சோனியா-ராகுல்-பிரியங்காவுடன் சந்திப்பு: பிரசாந்த் கிஷோரின் ‘பெரிய’வியூகம்!

minnambalam : தேர்தல் உத்தி ஆலோசகரான பிரசாந்த் கிஷோர், அந்தப் பணியில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தாலும்...அவரது சமீபத்திய சந்திப்புகள் இந்திய அளவில் பரபரப்பாக பேசப்படுகின்றன. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை இருமுறை சந்தித்துப் பேசினார் பிரசாந்த் கிஷோர். அதையடுத்து நேற்று (ஜூலை 13) காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய மூவருடனும் பிரசாந்த் கிஷோர் முக்கிய ஆலோசனை நடத்தியிருப்பது தேசிய அரசியலின் கவன ஈர்ப்புப் புள்ளியாக அமைந்துள்ளது.

2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட தேர்தலில் பாஜகவுக்காக தேர்தல் உத்தி வகுக்கும் பணியில் ஈடுபட்டவர் பிரசாந்த் கிஷோர். காங்கிரஸுக்கு எதிரான அடுக்கடுக்கான புகார்களை சமூக தளங்கள் மூலம் பரவவிட்டு மோடிக்கான இமேஜ் பில்டப் பணிகளையும் செய்தார். அதே பிரசாந்த் கிஷோர் 2017 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச தேர்தலில் காங்கிரஸுக்காக பணியாற்றினார். ஆனால் அத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் 2017க்குப் பிறகு முதன் முறையாக ராகுல் காந்தியை டெல்லியிலுள்ள அவரது வீட்டில் நேற்று மாலை பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் உத்திரப்பிரதேசத்தின் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தியும் உடன் இருந்திருக்கிறார். அப்போது காங்கிரஸ் பஞ்சாப் மாநில பொறுப்பாளர் ஹரிஷ் ராவத், அகில இந்திய பொதுச் செயலாளர் வேணுகோபால் ஆகியோரும் இருந்தனர். இவர்களுடனான சந்திப்பின் போது காணொலி வழியாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கலந்துகொண்டிருக்கிறார் என்பது நேற்று நள்ளிரவு வெளியே வந்த தகவல்.

இந்த சந்திப்பு அடுத்து நடக்க இருக்கும் உத்திரப்பிரதேச தேர்தல், பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல்கள் குறித்தானது மட்டுமல்ல, அதையும் தாண்டி 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கானது என்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரத்தில்.

சோனியாகாந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய மூவருடனும் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தியிருப்பதுதான் முக்கியமானது. இதன் மூலம் காங்கிரஸ் வரும் மக்களவைத் தேர்தலுக்கான முக்கியமான உத்தி வகுக்கும் பணியைத் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது. தற்போதைய அரசியல் சூழலில் மூன்றாவது அணி என்பது பாஜகவுக்கே சாதகம் என்பதை உணர்ந்திருக்கிறார் பிரசாந்த் கிஷோர். அண்மையில் சரத்பவாரை மையமாக வைத்து ராஷ்டிரிய மஞ்ச் தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூட்டிய கூட்டத்தில் காங்கிரஸ் கலந்துகொள்ளவில்லை.

அந்தக் கூட்டத்துக்குப் பிறகு காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சிகளை திரட்ட முடியாது என்றே தேசியவாத காங்கிரஸ் கருத்து தெரிவித்தது. பிரசாந்த் கிஷோரும், காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைத்து பயனில்லை என்று கருத்து தெரிவித்தார். மூன்றாவது அல்லது நான்காவது அணிகள் தற்போதைய பாஜகவுக்கு வெற்றிகரமான சவாலாக இருக்குமென்று தான் நம்பவில்லை என்று பிரசாந்த் கிஷோர் பேட்டி கொடுத்தார்.

இந்நிலையில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டுவதே பிரசாந்த் கிஷோருடைய இந்த சந்திப்பின் நோக்கமாக இருக்கிறது. ஏற்கனவே திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், திருணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி, தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஆந்திர முதல்வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் உள்ளிட்ட வலிமையான மாநிலத் தலைவர்களுடன் பிரசாந்த் கிஷோர் நல்லுறவோடு இருக்கிறார். இந்த நிலையில் காங்கிரசையும் இந்த வலிமையான மாநிலக் கட்சிகளையும் 2024 மக்களவைத் தேர்தலில் ஒரே குடையில் கொண்டுவந்திட, பாஜகவுக்கு எதிராக மிகப்பெரிய வியூகம் வகுக்கிறார் பிரசாந்த் கிஷோர் என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக