வெள்ளி, 16 ஜூலை, 2021

மேகதாது அணை கட்ட சாத்தியமில்லை: தமிழக பிரதிநிதிகளிடம் ஒன்றிய அமைச்சர்!

minnambalam.com : மேகதாது அணை கட்டுவது தொடர்பாகக் கர்நாடகாவுக்கு எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை என ஒன்றிய அமைச்சர் கூறியதாகத் தமிழக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். .. கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக சட்டப்பேரவைக் கட்சிகள் குழு நேற்று டெல்லி சென்றது. தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி, அ.தி.மு.க. சார்பில் ஜெயக்குமார், ம.தி.மு.க. சார்பில் வைகோ, பா.ம.க சார்பில் ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பாலகிருஷ்ணன், விசிக சார்பில் திருமாவளவன், மமக சார்பில் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தமிழக சட்டப்பேரவை கட்சிகள் குழு ஒன்றிய அமைச்சரைச் சந்திப்பதற்கு முன்னதாக, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில், துரைமுருகன் தலைமையில் ஆலோசனை நடத்தியது.

இதன்பின்னர் பிற்பகலில், ஒன்றிய நீர் வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து, மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி அளிக்கக் கூடாது” என்று வலியுறுத்தியது. மேலும் “மேகதாது அணைக் கட்டும் கர்நாடக அரசுக்குக் கண்டனம், தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்துக் கட்சிகள் முழு ஆதரவு, இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் சென்று ஒன்றிய அரசிடம் அளிப்பது” என முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை வழங்கியது.

சுமார் 45 நிமிடங்கள் ஒன்றிய அமைச்சருடன் அனைத்து கட்சிகள் குழு ஆலோசனை நடத்தியது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறுகையில், “கர்நாடக அரசுக்கு எந்த வகையிலும் மேகதாது அணையைக் கட்ட துணைபோகக் கூடாது என்று நாங்கள் இங்கு வந்துள்ள நோக்கத்தைத் தெளிவாக ஒன்றிய அமைச்சரிடம் கூறினோம்.

டிபிஆர் எனப்படும் திட்ட அறிக்கை தயாரிக்க ஒன்றிய நீர்வள ஆணையம் அனுமதி அளித்ததைச் சுட்டிக்காட்டினோம். இதற்கு ஒன்றிய அமைச்சர், ‘எந்த வகையிலும் மேகதாது அணை கட்ட முடியாத நிலை அவர்களுக்கு உள்ளது. காரணம் திட்ட அறிக்கை தயாரிக்க நாம் என்னென்ன நிபந்தனைகள் விதித்தோமோ அதில் எதையும் அவர்களால் செய்ய முடியவில்லை.

திட்ட அறிக்கை வழங்க வேண்டுமானால், காவிரி கீழ்பாசன மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முழு ஒப்புதலைப் பெற வேண்டும். காவிரி ஆணையத்தின் முழு ஒத்துழைப்பைப் பெற வேண்டும். அதன் பிறகு ஒன்றிய நீர்வள ஆணையத்தின் அனுமதி பெற்று வர வேண்டும். இதையெல்லாம் கொண்டுவந்தால் அனுமதி தருவோம் என்று சொன்னோம். இந்த நிபந்தனைகளை அவர்கள் பூர்த்தி செய்யவில்லை.

அவர்களாக நினைத்து அவர்களாகத் திட்ட அறிக்கையைத் தயாரித்து வந்துள்ளார்கள். அதனால் அவர்கள் திட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதனால் கர்நாடக அரசின் திட்டம் நிறைவேறாது' என்று ஒன்றிய அமைச்சர் தெரிவித்தார்.

நாங்கள் வந்தது ஒருவகையில் வெற்றி என்று சொல்வோம். நீங்கள் மேகதாது அணை கட்ட அனுமதி கொடுப்போம் என்று கூறியதாக தெரிவித்தார்களே என்று ஒன்றிய அமைச்சரிடம் கேட்டதற்கு, அவர் எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை. திட்டவட்டமாகச் சொல்கிறோம் அணை கட்டுவதற்கான நிலை தற்போது எழவில்லை என்று கூறினார்” என்றார் துரைமுருகன்.

4 மாநிலங்களுடன் நடத்தும் பேச்சுவார்த்தைக்குச் செல்வீர்களா என்ற கேள்விக்கு இல்லை என்று பதிலளித்தார்.

வைகோ பேசுகையில், “ஒன்றிய அரசும், கர்நாடக அரசும் சேர்ந்து சதி செய்கிறது என்று சொன்னதற்கு, அது தவறான கருத்து என்று ஒன்றிய அமைச்சர் மறுத்தார்” எனக் கூறினார்.

பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக