சனி, 3 ஜூலை, 2021

இலங்கை செயற்கை உர பாவனையை தடை செய்துள்ளது! இது வெற்றி அளிக்குமா?

 Farm to Table  : செயற்கை உரம் / பசளை இல்லாத விவசாயம் சாத்தியமா ?
By வடகோவை வரதராஜன்
இலங்கை அசு தடாலடியாக செயற்கை உரம்./ பசளை  பாவனையைத் தடைசெய்துள்ளது. இதன் சாதக பாதக்கங்கள்  பற்றி அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்
மண்ணில் இறங்கிப் பயிர் செய்யாதவர்களும்,  எந்தவித விவசாய அறிவு இல்லாதவர்களும் இதுபற்றி  தத்தமது பத்திரிகைகளான  முகநூலில் எழுதிக் குவித்த வண்ணம் இருக்கிறார்கள்.
மக்களைக் குழப்புகிற இந்த பதிவுகள் விவசாயிகளை பெரும் இக்கட்டுக்குள்ளாக்குகின்றன. முதலாவதாக இந்த  செயற்கை பசளைகளை,  விவசாய இரசாயனங்கள் என்ற பதம்கொண்டு அழைப்பதை நிறுத்த வேண்டும்.
செயற்கை பசளையான, பொட்டாசியம் குளோரைட்டு என்ற உப்பு விவசாய இராசயனம் என்றால், கறியுப்பாக நாம் பயன்படுத்தும் சோடியம் குளோரைடு என்ற உப்பும் இராசயனமேதான்.
பொட்டாசியம் குளோரைடு, பொசுபேற்று, யூரியா ஆகியவற்றை, செயற்கை உரங்கள் அல்லது அசேதன உரங்கள் என்ற பெயரால் அழைப்போமாயின் அரைவாசிக் குழப்பங்கள் தீர்ந்துவிடும்.
செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட  பூச்சிக்கொல்லிகள், களைகொல்லிகள் என்பனவே அபயாகரமான விவசாய இராசயனம்கள் ஆகும்.



முதலில் தாவரங்களுக்குத் தேவையான சத்துக்களைப்பார்போம்.
1) மாமூலகங்கள் ~
நைதரசன்( N ), பொசுபரசு (p), பொட்டாசியம் (  k ) என்பன அதிக அளவிற்க்கு பயிர்களுக்கு தேவைப் படுகின்ற சத்துக்களாகும்.
இதில் நைதரசன், பதியவளர்சிக்கும், பொட்டாசியம் வேர் வளர்ச்சிக்கும்  நோய்எதிர்ப்பு திறனுக்கும் தண்டு வளர்ச்சிக்கும், பொசுபரசு தானியம், விதைகள் என்பன உருவாக்கத்திற்கும் அவசியமானவை.
2 ) நுண்மூலகங்கள்  (Micro elements) ~
மகனிசியம், கல்சியம், கந்தகம், என்பன நுண்மூலகங்கள் எனப்படும். இவை பயிர்களுக்கு சிறிய அளவில் தேவைப்படும்.
3) சுவட்டு மூலகங்கள்  ( Race elements) ~ செப்பு, நாகம், போறன்,--- போன்றவை நுண்மூலகங்கள் எனப்படும். இவை மிககுறைந்த அளவில் பயிர்களுக்குத் தேவைப்படும்.
மேற்சொன்ன மூலகங்களில் ஏதாவது ஓன்று குறைவுபட்டாலும் பயிர் வளர்ச்சி பாதிக்கப்படும். நுண்மூலகங்களினதும், சுவட்டு மூலகங்களினதும் போதாமை பயிர்களில் பெரிதாக வெளித்தெரியாது. ஆனால் மாமூலகங்களின் போதாமை பயிர்களில் பெரிதாக காட்டப்பட்டு விளைச்சல் பெரிதளவில் பாதிக்கப்படும்.
இந்த மாமூலகங்களில் நைதரசனை கொண்ட யூரியா, பெற்றோலிய உபவிளைவாகத் தயாரிக்கப்படுகிறது. பொடட்டாசியம் குளோரைட்டு உப்பு, பொட்டாசிய உப்பு பாறைகளில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. பொசுபரசு, பொசுபரசு பாறைகளில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது.
இலங்கையில் எப்பாவல என்ற இடத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட  பொசுபரசு உப்பு , எப்பாவல அப்பிறைற் என்ற பெயரில்  செயற்கைp பசளையாக விற்பனை செய்யப்படுகிறது.
அறுபதுகளில் அறிமுகப் படுத்தப்பட்ட பசுமைப்புரட்சியின்போது இந்தச் செயற்கைப் பசளைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து இந்த செயற்கைப் பசளைக்கு தூண்டல் பேறுடைய வீரிய இனங்ளான கலப்பு பிறப்பாக்கல் விதைகளும் (High breed seeds)  தேர்வுமுறை மூலம் கண்டு பிடிக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட விதைகளும் (Selected breed seeds)  அறிமுகம் செய்யப் பட்டன.
விவசாயத்தைப் பற்றி அறிவற்ற பல பதிவாளர்கள் இந்த High breed  இனங்களை மரபணு மாறப்பட்ட  இனங்கள் எனப் பதிவிட்டு குழப்பத்தை உருவாக்குகிறார்கள்.
இலங்கையைப் பொறுத்தவரை மரபணு மாற்றப்பட்ட  இனங்களை பயிரிடல் சடடபூர்வமாக தடுக்கப்பட்டுள்ளதாக வியசாயத்திணைக்களத்தைச் சேர்ந்த உயரதிகாரி Seerangan Periyasamy  தெரிவிக்கிறார்.
ஆக, அறுபதுகளில் இருந்து அறிமுகமாகி இன்றுவரை மேலும் மேலும்  திருந்திய இனம்களாக அறிமுகப்படுத்தப்பட்டு பயிரிடப்படும் வீரியரக பயிர்வகைகள் எல்லாம் செயற்கைப் பசளைக்கு தூண்டல்பேறு உடைய இனம்களே. இவ்வீரிய இனப் பயிர்வகைகள் உரம் எனப்படும் செயற்கைப் பசளை பாவிக்காவிடின் விளைச்சலைக் கொடுக்க மாட்டாது.
பொருளாதார நிபுணர்களையோ, விவசாய நிபுணர்களையோ கலந்தாலோசிக்காமல் எடுக்கப்படட இம் முடிவு, இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
முன்னோக்கி சுழலுக்கின்ற சக்கரத்தை திடீர் என பின்னோக்கி சுழலளவிட்டால் அது கியர் பொக்ஸை உடைக்கும் என்பது வெள்ளிடைமலை.
சரி !  செயற்கை பசளை பாவனையை நிறுத்தி விட்டு இயற்கைப் பசளைப் பாவனைக்கு திரும்புகிறோம் என வைப்போம்.
பின்வரும் கணக்கீடுகளை ஒருமுறை அவதானியுங்கள்.
100  Kg மாட்டெருவில் உள்ள சத்துக்கள் கீழ்வருமாறு
நைதரசன்( N)  ~ 1.22
பொசுபரசு ( P) ~ 0.62
பொட்டாசியம் ( K ) ~1.2
ஒரு தென்னை மரத்திற்கு ஒரு வருடத்திற்கு அண்ணளவாக 0.27 Kg நைதரசன் தேவை. இதன் அடிப்படையில் 0.27Kg நைதரசனை பெற அண்ணளவாக 30kg மாட்டெரு
இடவேண்டும். ஒரு ஏக்கரில் 64 தென்னை மரங்கள் இருக்கும். 64 தென்னை மரங்களுக்கும் ஏறதாளா 2000 Kg மாட்டெரு தேவை. 10 ஏக்கர் கொண்ட தென்னம் தோப்பிற்கு பசளையிட 20000 Kg மாட்டெரு தேவைப்படும். 100, 1000 என செய்கை பண்ணப்படும் நெல் வயலுக்கு எவ்வளவு மாட்டெரு  தேவைப் படும் என்ன கணக்கு பாருங்கள்.
1 ) இவளவு தொகையான மாட்டெருவோ, கூட்டெருவோ, ஆட்டெருவோ, கோழியெருவோ நம்மிடம் தற்போது கைவசம் உள்ளதா?
2 ) இவளவுதொகை எருவையும் சேகரித்து வயலுக்கு கொண்டுபோக எவ்ளவு போக்குவரத்து செலவாகும்?
3 ) இவளவு தொகையான எருவை வயலில் இட்டு முடிக்க எத்தனை நாட்களாகும் எவளவு கூலி முடியும்?
4) அந்நியசெலவாணியை நமக்கு ஈட்டித்தருகிற ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பயிரிடப்பட்டுள்ள பெரும்தோட்டப் பயிர்களான தேயிலை, இறப்பர், தென்னை போன்றவற்றுக்கு பசளையிட என்ன செய்யப் போகிறோம்?
5 ) அரிசியையே பிரதான உணவாக கொள்ளும் எம்மவர்களுக்கு இம்முறை மூலம் போதிய அரிசி கிடைக்குமா?
6 ) பெருகிவரும் மக்கள்தொகைக்கு உணவு கொடுக்க இம்முறையால் முடியுமா இக்கேள்விகள் பற்றி சிந்தித்து பார்த்தீர்களா?
நஞ்சற்ற உணவு எமக்கு கிடைக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் உணவாவது கிடைக்குமா என்பதுதான் எனது கேள்வி. சிலர் பொஸ்போ பக்ரிறியா, அசோஸ்பைரில்லம், சூடாமோனாஸ் போன்ற உயிர் உரங்களை பாவிக்கலாம் என சொல்கிறார்கள். சூடாமோனாஸ், அசோஸ்பைறில்லம் என்பன காற்றில் உள்ள நைதரசனை கிரகித்து பயிருக்கு கொடுக்கும்.
சரி ! மீதமான பொட்டாசுக்கும், பொசுபரசுக்கும் என்ன செய்யவது?
பொஸ்போபக்ரிறியா  என்ற உயிர்உரம்  மண்ணில் காணப்படும், கரையமுடியாத பெரிக்பொஸ்பேற்றை கரைத்து பயிருக்கு கொடுக்கும்.
மண்ணில் பொஸ்பேற்றே இல்லையாயின் இந்த உயிர்உரம் என்ன செய்யும்?
எத்தனை கரைத்து பயிருக்கு பொஸ்பேற்றைக் கொடுக்கும்?
செயற்கை பசளை நஞ்சாவது எவ்வாறு?
ஒருநாளைக்கு ஆரோக்கியமான மனிதன் ஒருவனுக்கு இரண்டு கிராம் கறியுப்பு போதுமானது.
பத்து கிராம் உப்பை ஒருவன் உண்டால் அது அவனுக்கு நஞ்சாகும். பால் ஒரு நிறையுணவு. ஒருவன் தினமும் இரண்டு லிற்றார் பாலை அருந்துவனாகில் அவன் நோய் பிடித்து இறப்பான். அவ்வாறே அளவுக்கதிகமான உரப்பாவனை தாவரங்களுக்கு தீங்காவதோடு, மனிதனுக்கும், மண்ணுக்குக்கும், நீருக்கும் நஞ்சாகிறது.
விவசாய விஞ்ஞானிகள் ஒவ்வோர் பயிருக்கும் எவ்வளவு எவ்வளவு உரம் தேவை என கணக்கிட்டு வைத்துள்ளார்கள். அந்த கணக்கின்படி செயற்கை உரங்களை கலந்து (N P K) பகுதி பகுதியாக  பயிருக்கு இடுவோமாயின் பயிர் அவ்வளவு உரத்தையும் கிரகித்து விடும். இதனால் மண்ணோ நீரோ மாசுபடாது. பொதுவாக எமது அளவுக்கு அதிகமான உரப்பாவனையே  எமக்கும் நஞ்சாகி, மண்ணையும் நீரையும் மாசு படுத்துகின்றன.
தனியே செயற்கை உரங்களை மட்டும் இடாது, இயற்கை கிடைக்க கூடிய இயற்கை உரங்களுடன் கலந்து இடும்போது, மண்ணில் உள்ள நன்மைதரும் நுண்ணுயிர்கள் பெருகின்றன. எனவே நஞ்சான, நஞ்சான விவசாய இரசாயனம்களான பூச்சிகொல்லிகள், களை கொல்லிகள் என்பனவற்றின் பாவனை நிறுத்தி, செயற்கைப் பசளைகளை விவசாய இராசயனம்கள் என்ற வகைக்குள் அடக்கி விஷம் விஷம் என கூப்பாடு போடுவதை நிறுத்தி, பெருகிவரும் மக்கள் தொகைக்கு உணவளிக்க, சிபாரிசு செய்யப்பட்ட அளவில் மடுப்படுத்தப்பட உரப்பாவனைக்கு  ஆதரவாக குரல் கொடுப்போம்.
குறிப்பு ~
இங்கு பதில் கருத்து தெரிவிப்போர், தமக்கு ஆதாரம் காட்ட youtube  காணொளியை இணைப்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நானும் ஒரு 100 youtube காணொளிகளைப் பார்த்துவிட்டுத்தான் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.
பெரும்பாலான youtube கள் எந்தவித ஆதாரமோ விஞ்ஞான விளக்கமோ அற்ற புழுகுகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக