திங்கள், 12 ஜூலை, 2021

ஒன்றிய அரசு அனுப்பியதை விட கூடுதலாக 2 லட்சம் பேருக்கு தமிழ்நாட்டில் தடுப்பூசி”:அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 கலைஞர் செய்திகள் - Vignesh Selvaraj :  “ஒன்றிய அரசு அனுப்பிய தடுப்பூசியை விட கூடுதலாக 2 லட்சம் பேருக்கு தமிழ்நாட்டில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது” என திண்டுக்கல்லில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக குழந்தைகளுக்கு என அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டை திறந்து வைத்தும்,
குழந்தைகளுக்கான புதிதாக வாங்கப்பட்ட இன்குபேட்டரை பார்வையிட்டும், திருநங்கைகளுக்கு தடுப்பூசி போடும் பணியை துவக்கி வைத்தார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “கொரோனா மூன்றாவது அலை வருமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.



முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான 100 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கிவைத்தார்.

இதில் 30 வென்டிலேட்டர் வசதிகொண்ட படுக்கைகளும் 70 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் தயாராக உள்ளன. தமிழ்நாட்டில் அரசின் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தாத 40 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் அந்த 40 மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 60 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது அப்போது 6 லட்சம் டோஸ் வரை வீணடிக்கப்பட்டது.

தற்போது தமிழ்நாட்டிற்கு ஒரு கோடியே 59 லட்சத்து 26 ஆயிரத்து 550 டோஸ்கள் வந்துள்ளன. ஆனால் தமிழகத்தில் ஒரு கோடியே 61 லட்சத்து 31 ஆயிரத்து 159 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேருக்கு கூடுதலாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மருந்து குப்பியில் 16 முதல் 24 சதவீதம் வரை கூடுதலாக மருந்து இருக்கும். இதனை வீணாகாமல் முறையாகப் பயன்படுத்தி ஒரு குப்பியில் இருந்து 11 முதல் 12 நபர்கள் வரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கூடுதலாக 2 லட்சம் பேருக்கு தமிழகத்தில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இது தமிழ்நாடு சுகாதாரத்துறைக்கு கிடைத்த வெற்றியாகும். இதன் காரணமாக ஐ.சி.எம்.ஆர் தமிழ்நாடு சுகாதாரத்துறையை பாராட்டியுள்ளது. இந்த மாதத்திற்கான ஒன்றிய அரசின் தொகுப்பிலிருந்து 71 லட்சம் தடுப்பூசிகள் வரவேண்டும். ஆனால் இதுவரை 10 லட்சம் வரை மருந்துகள் மட்டுமே வந்துள்ளன. நாளை அல்லது நாளை மறுநாள் 11 லட்சம் மருந்துகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுகாதாரப் பணியாளர்கள் தூய்மைப் பணியாளர்கள் செவிலியர்கள் என 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் அல்லது பணி காலத்தை நீட்டிக்க வேண்டும் என மனுக்கள் வருகின்றது. இதுதொடர்பாக முதலமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணி நேரத்தின்போது மருத்துவர்கள் பணியில் இல்லாமல் தமது சொந்த கிளினிக்கில் பணி செய்து வருவதாக புகார் வந்துள்ளது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். நத்தம் பகுதியில் அதிக அளவில் போலி மருத்துவர்கள் இருப்பதாக தகவல் வந்துள்ளது அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக