செவ்வாய், 22 ஜூன், 2021

அவங்க செஞ்சா நாங்களும் அப்படித்தான் செய்வோம்.. அவதூறாளர்களின் அலப்பறைகள்

May be an image of 1 person

Kavin Malar  : சில நாட்களுக்கு முன் ட்விட்டர் ஸ்பேசஸில் ‘சமூக ஊடகங்களில் பெண்கள்’ என்கிற தலைப்பில் பேச நண்பரொருவர் அழைத்திருந்தார்.
திராவிட இயக்கப் பற்றாளர் ஆகிய அவரை எனக்கு நன்கு தெரியும் என்பதால் உடனே ஒப்புக்கொண்டேன். நிகழ்வு தொடங்க சில நிமிடங்களுக்கு முன்னால் லிங்க் அனுப்பியிருந்தார்.
அந்த ஐடிக்குள் நுழையும்போது ஐடியின் பெயரைப் பார்த்தபோது காமெடிக்காக உருவாக்கப்பட்ட பேக் ஐடி போல தோன்றியது.
தீவிரமான ஒரு விஷயத்தைப் பேசுவதற்கு ஏன் இப்படி ஒரு ஐடியில் நிகழ்வை வைக்கிறார்கள் என்கிற கேள்வி வந்தது. ஒருவேளை இந்த ஐடியை பின்பற்றுவோர் அதிகமிருப்பதால் வைத்திருக்கலாம் என நினைத்தேன்.
பாதி பேசிக்கொண்டிருக்கும்போதே ஐடி crash ஆகிவிட்டது. ஆகவே புதிய லிங்க் வர காத்திருந்தேன். அந்த இடைவெளியில் ஒரு தோழி எனக்கு அனுப்பிய மெசேஜை வாசித்தேன். ‘இந்த ஐடியிலா பேசுறீங்க. அந்த ஐடியில் இரண்டு நாளைக்கு முன்னால் ‘காயத்ரியின் இரவுகள்’ என்கிற தலைப்பில் விவாதம் நடந்தது தெரியுமா?’ எனக் கேட்டிருந்தார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.



மீண்டும் லிங்க் வந்தவுடன் உள்ளே நுழைந்து என் உரையை முடித்துக்கொண்டு கலந்துரையாடலுக்குத் தயாரானபோது அந்த ஐடிக்கு சொந்தக்காரரிடமிருந்து கேள்வி இப்படி வந்தது ‘அந்த நல்லி எலும்பு இருக்கானே’ என கிஷோர் கே சாமி பற்றி ஆரம்பித்தபோது நான் இடைமறித்து ‘அவருக்குப் பெயர் இருக்கிறது. அவர் பெயரைச் சொல்லுங்கள். உருவத்தை கேலி செய்யும் பெயர்களில் அழைக்கவேண்டாம்’ எனக் கேட்டேன். ‘அவன் பெயரைச் சொல்லப் பிடிக்கவில்லை’ என்றார் அவர். ‘எனக்குக்கூடத்தான் பிடிக்கவில்லை. வேறு வழியில்லை’ என்றேன். பின் பெயர் சொல்லி கேள்வி கேட்டார். பதில் சொல்லிவிட்டு எனக்கொரு கேள்வி இருக்கிறது உங்களிடம் எனச் சொல்லி, இரண்டு நாட்களுக்கு முன்னால் ‘காயத்ரியின் இரவுகள்’ என்கிற பெயரில் விவாதம் நடத்தினீர்களா’ எனக் கேட்டேன்.

‘ஆமாம்’ என்றார். ‘பின் என்னை வேறு எதற்கு அழைத்துப் பேசச் சொல்கிறீர்கள்? அதுவும் இந்தத் தலைப்பில்’ எனக் கேட்டேன். ‘காயத்ரி ரகுராமின் இரவுகள்’ என்று பெயர் வைக்கவில்லை. வெறும் ’காயத்ரியின் இரவுகள்’தான். இது எப்படி அவரைக் குறிக்கும்?’ எனக் கேட்டார். ’அவரைக் குறிப்பதும் குறிக்காததும் பிரச்சனை இல்லை. எந்தப் பெண்ணின் பெயரிலும் எப்படி இப்படியொரு தலைப்பில் விவாதிப்பீர்கள் எனக் கேட்டேன்.

‘அவர்கள்தான் இந்த எல்லைக்குத் தள்ளுகிறார்கள். அவர்களுக்கு பதிலடி தரத்தான் இந்தத் தலைப்பு’ என தலைப்பை நியாயப்படுத்தினார். பனிமலர் உரையாடலில் இருந்தார். அவரும் என் தரப்புக்கு ஆதரவாகவே பேசினார். ’எங்களை எல்லாம் செய்யாத அவதூறா உங்களைச் செய்கிறார்கள். நாங்கள் எல்லாம் உங்களைப் போலவா பதிலுக்குச் செய்கிறோம்? சட்டரீதியாக எதிர்வினையாற்றுக்கிறோம் அல்லது ப்ளாக் செய்கிறோம். அது ஏன் ஆண்கள் மட்டும் இப்படி எதிர்வினை ஆற்றுகிறீர்கள்?’ என நியாயமாகக் கேட்டார். நாங்கள் இருவரும் மாறி மாறி இதில் உள்ள தவறை சுட்டிக்காட்டினோம். ‘இந்த ஐடியில் நீங்கள் பேசலாமா என என்னை நோக்கி ஒரு கேள்வி வரும்போது அது எனக்கு எவ்வளவு பெரிய தர்மசங்கடத்தை உண்டுபண்ணும்? இப்படியான தர்மசங்கடத்தை கூடவே இருக்கும் பெண்களுக்கு ஏன் உருவாக்கித் தருகிறீர்கள்’ எனக் கேட்டேன்.  

ஒரு கட்டத்தில் ‘அது தவறுதான். அது அப்போதே யாரோ சுட்டிக்காட்டியபின் சில நிமிடங்களில் பெயர் மாற்றிவிட்டோம்’ என்றார். தவறு என்று ஒப்புக்கொண்டாரே என மகிழ்வதற்கு முன்னாலேயே ‘தப்புதான். ஆனால் அவங்க செஞ்சா நாங்களும் அப்படித்தான் செய்வோம்’ என்றார். இவ்வளவு நேரம் பொறுமையாகப் பேசிக்கொண்டிருந்த எனக்கு அதற்கு மேல் முடியவில்லை. ‘இவ்வளவு பேசியும் மாற்றிக்கொள்ளமாட்டேன் என்கிறீர்கள். அப்படியெனில் நான் வெளியேறுகிறேன் எனச் சொல்லி வெளியேறிவிட்டேன்.

நம்மோடு இருக்கும் ஆண்களால் பெண்களுக்கு வரும் பிரச்சனைகளைப் பற்றியும் பேசித்தான் ஆகவேண்டும். ஒத்த கருத்துடையவர்கள் என்று நினைத்தே நாம் பல ஆண்களிடம் தோழமையோடிருக்கிறோம். ஆனால் கருத்தியலில் முரண்படும் எதிரிகளோடு மோதுகிறேன் பேர்வழி என்று இவர்கள் எதிர்முகாமில் உள்ள பெண்கள் மீது தனிமனிதத் தாக்குதல் நடத்துவது, ஆபாசமாக பாலியல் அவதூறு செய்வது போன்றவற்றை செய்ய சில ஆண்கள் தவறுவதே இல்லை. அவர்களை ஆண் தோழர்கள் என்றுகூட சொல்லக் கூசுகிறது.

தோழர்கள் எப்படி இப்படியொரு வேலையைச் செய்யமுடியும்?
இப்படி இவர்கள் செய்வதால் தனிப்பட்ட முறையில் எனக்கு நேர்ந்தவற்றையும் பகிரவேண்டும் என நினைக்கிறேன். அம்பேத்கர் குறித்து எப்போதும் விமர்சனம் என்கிற பெயரில் அவதூறு செய்துவரும் பெண் ஒருவரை எதிர்ப்பதாகச் சொல்லி அவரைப் பற்றிய தனிப்பட்ட அவதூறுகளை சில தோழர்கள்(!) செய்திருக்கின்றனர். அந்தப் பெண்ணோ அந்த அவதூறுகளை செய்ய ஏற்பாடு செய்தது சில பெண்களே என்றும் அதை தலைமையேற்று நடத்தியது நான்தானென்றும் எழுதி இருந்தார்.

என்னைக் குறித்து அறிந்தவர்தான் அவர். அப்படியொரு பெண்ணைப் பற்றிய அவதூறுகளை செய்ய நான் தலைமை என்று எழுதுவதன்மூலம் தன் கோபத்தைத் தீர்த்துக்கொண்டார். நியாயமாகப் பார்த்தால் இப்படி அவர் சொன்னது என்மீதான அவதூறுதான். தோழர்கள் பாட்டுக்கு கோபத்தைக் காட்ட தனிமனிதத்தாக்குதலையும் அவதூறுகளையும் செய்யாமல் இருந்திருந்தால் இந்தப் பழி என்மீது விழுந்திருக்காது. எழுதிய நீங்கள் எல்லோரும் தப்பித்துக்கொள்ள தலைமையேற்று அந்த அவதூறு இயக்கத்தை நான் நடத்தினேன் என்று அவர் எழுதி என்மீது பழி சுமத்தினார். இது எனக்குத் தேவையா?

அவருக்கு என்னையும் damage செய்தாயிற்று. அம்பேத்கரியர்கள் ஆபாசமாகவும் பேசுவார்கள் என்று பரப்புரை செய்தாயிற்று. இதற்கு நீங்கள் ஏன் வழியமைத்துத் தருகிறீர்கள். உங்களோடிருக்கும் பெண்களையே அந்தப் பழியையையும் சுமக்க வைக்கிறீர்கள். இது எவ்வளவு பெரிய மன உளைச்சலை தந்திருக்கும் எனக்கு என என் நண்பர்கள் அறிவார்கள். வீண்பழியை நான் ஏன் சுமக்கவேண்டும் தோழர்காள்?

அதே பதிவில் வந்து இன்னொரு பெண் ‘அவர் எனக்கும் இதையேதான் செய்தார்’ என்று சொன்னார். அவர் விஷயத்திலும், எனக்கெதிராக அவர் எழுதிய ஒரு பதிவில் வந்து சில ஃபேக் ஐடிக்கள் அப்பெண்ணைப் பற்றியும் என்னைப் பற்றியும் இன்னும் பல பெண்களைப் பற்றியும் மிக மோசமாக எழுதினார்கள். அந்தப் பெண் அந்த ஃபேக் ஐடியில் வருபவர்களை நான் தான் இயக்கியதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.  அதை எடுத்துப் பகிர்ந்து ‘பாருங்கள். இதோ இன்னொரு சாட்சியம்’ என முதலாம் பெண் அதையும் பகிர்ந்து மகிழ்ந்திருந்தார்.

இந்த இரு பெண்களும் என்மீது இப்படி குற்றஞ்சாட்ட எந்த முகாந்திரமும் இல்லை. அவர்களுக்கு என்மேல் ஏதோ ஒரு காழ்ப்பு அல்லது கோபம். அதைத் தணித்துக்கொள்ள பொதுவில் வைத்து இப்படி எழுதவேண்டும் என முடிவுசெய்து செய்கிறார்கள். அவர்கள் எதிர்முகாமில் உள்ளவர்கள். அப்படி இருப்பதில் வியப்பில்லை. ஆனால் ஒரே முகாமில் இருந்துகொண்டு இந்த தனிப்பட்ட அவதூறுகளையும் ஆபாசத் தாக்குதல்களையும் கருத்தியல் எதிரிகள்மீது காட்டுபவர்கள் தப்பித்துக்கொள்ள, அதை எல்லாம் பெண்ணாகிய நான் ஏன் அநியாயமாக சுமக்கவேண்டும்? உங்கள் தவறுகளுக்கு நான் ஏன் பொறுப்பாக வேண்டும்?

எனக்குள் சில மாதங்களாக சுழன்றடித்த கேள்வி இது. திராவிடம், அம்பேத்கரியம், இடதுசாரியம், பெரியாரியம் என்று எதைப் பேசினாலும் இந்தத் தனிப்பட்ட தாக்குதல்களையும் ஆபாச அவதூறுகளையும் நிறுத்தாதவரை என்ன பேசி என்ன பயன்? இப்படிப் பேசுவதெல்லாம் உங்கள் முகாமில் இருக்கும் பெண்களை எவ்வளவு கடுமையாக பாதிக்கும் என ஒரு நிமிடம்கூட யோசிப்பதில்லை. நீங்கள் இப்படிப் பேசினீர்கள் என்றால் கிஷோர் கே சாமி போன்ற ஒருவனை எதிர்க்கும் தார்மீக உரிமையைக்கூட நீங்கள் இழந்துவிடுகிறீர்கள். கருத்தை கருத்தால் எதிர்க்கமுடியாதவர்கள் சித்தாந்த பலமில்லாதவர்களாகவே கருதப்படுவார்கள்.

இதுவரையில் என்னை அவ்வளவு அவதூறு செய்த கிஷோர், பாமககாரர்கள், சங்கிகள், ஆதிக்க சாதிவெறியர்களைக் கூட அவதூறாக ஒரு வார்த்தை எழுதிவிடாத நான் அவர்களைக் குறித்து அவதூறு எழுதினேன் என்று எழுதும் பெண்களைப் பார்த்து எதுவும் சொல்வதற்கில்லை. என் கேள்வி எல்லாம் இந்தப் பழியை எனக்குப் பெற்றுத்தந்த சக தோழர்களிடம்தான்.
ஏன் இப்படி இருக்கிறீர்கள் தோழர்களே? மாற்றிக்கொள்ளும் உத்தேசம் இருக்கிறதா இல்லையா? இல்லையெனில் உங்கள் தவறுகளுக்குப் பழியை சுமக்க என் போன்ற சிலர் இருக்கிறார்கள் என உற்சாகமாக இன்னுமின்னும் செயல்படுவீர்களா? வேதனையாக இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக