சனி, 26 ஜூன், 2021

தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைகளில் வீணாகும் தடுப்பூசிகள்

கொரோனா தடுப்பூசி

மாலைமலர் :சென்னை:  கொரோனா தடுப்பூசி கிடைக்கவில்லை என்று அலைமோதல் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கான டோஸ் மருந்து வீணாகி வருகிறது.
மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் அளவில் 25 சதவீதம் ஊசியை தனியார் மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கிறது.
அந்த வகையில் கடந்த மே மாதம் 1-ந்தேதி முதல் கடந்த 23-ந்தேதி வரை தமிழகத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு 12 லட்சத்து 51 ஆயிரத்து 740 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியும், 1 லட்சத்து 31 ஆயிரத்து 300 டோஸ் கோவேக்சின் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 5.9 லட்சம் டோஸ் மருந்துகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு வயல் மருந்தை எடுத்தால் 10 பேருக்கு போட வேண்டும். ஒன்றிரண்டு பேருக்கு மட்டுமே போட்டு விட்டு வைத்திருந்தால் பயன்படுத்த முடியாது.



தனியார் ஆஸ்பத்திரிகளை பொறுத்தவரை ரூ.850 முதல் ரூ.1,500 வரை வசூலிக்கப்படுகிறது. இது மருந்து மற்றும் ஆஸ்பத்திரிகளை பொறுத்து மாறுபடுகிறது.

தனியார் ஆஸ்பத்திரிகளில் பரிசோதித்து விட்டு ஊசி போடுவது, ஊசி போட்ட பிறகும் குறிப்பிட்ட நேரம் வரை கண்காணிப்பு இருப்பதால் ஓரளவு வசதி படைத்தவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளை நாடினார்கள்.

ஆனால் அதே வசதிகள் அரசு ஆஸ்பத்திரிகளிலும் கிடைப்பதால் வசதி படைத்தவர்களும் அரசு ஆஸ்பத்திரிகளை நாட தொடங்கினார்கள்.

நடுத்தரவர்க்கத்தினர் கட்டணம் காரணமாகவும் அரசு ஆஸ்பத்திரிகளை நாடுகிறார்கள்.

இன்னொரு முக்கிய காரணம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததால் பலர் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது தடுப்பூசி முகாம்களுக்கு நடந்து சென்று ஊசி போட்டுக்கொண்டனர்.

விதிமுறைப்படி 25 சதவீதம் வழங்க வேண்டும். என்றாலும் தேவைக்கு ஏற்ப மருந்துகளை வழங்கி வீணாவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக