சனி, 26 ஜூன், 2021

தமிழ்நாடு 11 மாவட்டங்களுக்கு பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆட்சியராக.. BBC

BBC : தமிழ்நாட்டில் கடந்த வாரத்தில் பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். இதில் பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கும் விஷயம், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்ட ஆட்சித் தலைவர்களில் 11 பேர் இளம் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்திருப்பதுதான்.

இதைத்தவிர, மாநகராட்சி ஆணையர், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் என பத்துக்கும் மேற்பட்ட இளம் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நான்கு செயலாளர்களில் ஒருவராக பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி அணு ஜார்ஜ் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.<தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாவட்ட ஆட்சித் தலைவர்களாகப் பதவி ஏற்றிருப்பது இதுவே முதல்முறை என்கின்றனர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் ஸ்ரேயா சிங் பிபிசி தமிழுக்காகப் பேசினார்.

“ஒரே சமயத்தில் 11 பெண்கள் மாவட்ட ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றிருப்பது பெருமையான விஷயம்.

தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் பெண் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் என்பது முப்பது சதவிகிதம் அளவுக்கு இருப்பது கூடுதல் மகிழ்ச்சி.

ஆண் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ன பணி செய்கிறாரோ அதையே தான் நாங்களும் செய்கிறோம். இருந்தாலும் மாவட்ட ஆட்சித் தலைவர் பெண்ணாக இருக்கும்போது மக்களின் எதிர்பார்ப்பும், அணுகும் விதமும் வேறுவிதமாக இருக்கும்.

முதியோர்கள் மனுகொடுக்க வரும்போது தங்களுடைய மகளாக நினைத்தும், பெண்கள் தங்களுடைய சகோதரிகளாக நினைத்தும் பேசுகின்றனர்.

இதன்மூலம் நாங்கள் மக்களுடன் நெருங்கி பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளோம். தங்களுடைய கோரிக்கைகளை நம்பிக்கையோடு முன்வைக்கிறார்கள்.

இளம் வயதிலேயே எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி” என்றார் ஸ்ரேயா சிங்.

இவர் இதற்கு முன்னதாக, தலைமைச் செயலகத்தில் உள்துறையில் துணை செயலராகவும், விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார்.

புதிதாக ஆட்சி அமைக்கும் போது மாவட்ட ஆட்சித் தலைவர்களை மாற்றுவது வழக்கமான ஒன்றுதான். திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் 90-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும், பல ஐ.பி.எஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு அரசு அமைத்துள்ள பொருளாதார வல்லுநர் குழு அளிக்கவுள்ள பலன்கள் – ஓர் அலசல்
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கோயில்கள், மால்களைத் திறக்க அனுமதி

சென்னை மாவட்ட ஆட்சித் தலைவராக விஜய ராணி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக ஆர்த்தி, அரியலூர் மாவட்டத்துக்கு ரமண சரஸ்வதியும், நாமக்கல் மாவட்ட ஆட்சியராக ஸ்ரேயா சிங், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கவிதா ராமு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக சந்திரகலா, திருவாரூர் மாவட்ட ஆட்சியராக காயத்ரி கிருஷ்ணன் ஆகியோர் சமீபத்தில் பதவி ஏற்றுள்ளனர்.

தருமபுரி மாவட்ட ஆட்சியராக திவ்யதர்ஷினி, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக லலிதா, பெரம்பலூர் ஆட்சியராக வெங்கடபிரியாவும், நீலகிரி மாவட்ட ஆட்சியராக இன்னோசென்ட் திவ்யா பதவியில் இருக்கின்றனர்.

ஆக மொத்தம் 11 பெண்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பதவியேற்றுள்ளனர். ஒரே சமயத்தில் அதிகளவில் பெண்களை மாவட்ட ஆட்சித் தலைவராக நியமித்திருப்பது குறித்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

“மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகராட்சி ஆணையர், ஊரக வளர்ச்சி முகமை அதிகாரி என முக்கிய பொறுப்புகளில் 20-க்கும் மேற்பட்ட இளம் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம்தான்.

கடந்த காலங்களில், தமிழ்நாட்டில் இரண்டு அல்லது மூன்று பெண்கள் மட்டுமே மாவட்ட ஆட்சித் தலைவர்களாக இருந்தனர்.

தற்போது அதிக பேருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பணி கிடைத்திருப்பதும், அதுவும் இளவயதிலேயே மாவட்ட ஆட்சித் தலைவராகி இருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் பல காலமாக, பதவி உயர்வு பெற்று ஐ.ஏ.எஸ் அந்தஸ்தை அடைபவர்களைத் தான் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டனர்.

நேரடியாக ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறுபவர்களில் பெயரளவில் ஒரு சிலருக்கு மட்டுமே மாவட்ட ஆட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டது. குறிப்பாகப் பெண்களுக்கு அதிகளவில் வாய்ப்பளிக்கப்படவே இல்லை.

ஆனால் இதுவெல்லாம் கடந்த ஒரு மாதத்தில் மாறி இருக்கிறது. இளம் வயதிலேயே பெண்கள் மாவட்ட ஆட்சித் தலைவராக பதவி ஏற்றிருப்பவர்களுக்கு மாவட்ட நிர்வாகப் பணியில் நிறைய கள அனுபவத்தைப் பெற்றுத் தரும்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக